அண்ணா காலத்தில்- காங்கிரஸ் பொதுவெளியில் கருத்து சொல்ல சரக்கு இல்லாமல் தமிழகத்தில் அடையாளம் இழந்துபோனது. தற்போது அந்த இடத்தில் நிற்கும் அதிமுகவும் பாஜகவும் பொதிகை தொலைக்காட்சி மடையில் புழுதிக்கிளப்பத் திட்டமிட்டு வருகின்றன. 24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தனியார் தமிழ் செய்தி தொலைக்காட்சி மடைகளில் நடைபெறும் அரசியல் விவாத நிகழ்ச்சிகளில் அதிமுக மற்றும் பாஜக பங்கேற்பதை தவிர்த்து வருகின்றன. கட்சித் தலைமையே அறிக்கை வெளியிட்டு இவ்வாறு தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்பதை உறுதிபட தெரிவித்திருந்தன. தற்போது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். நடுநிலையாளர்கள், இதழியலாளர்கள் உள்ளிட்ட பிற தரப்பினர் கருத்துக்களை கூறுகிறார்களே தவிர பாஜக மற்றும் அதிமுகவின் கருத்து எதுவும் வெளிப்படுத்தப்படுவதில்லை. இப்படித்தான் அண்ணா காலத்தில்- காங்கிரஸ் பொதுவெளியில் கருத்து சொல்ல சரக்கு இல்லாமல் தமிழகத்தில் அடையாளம் இழந்துபோனது. அப்புறம் திராவிட இயக்கங்களின் புதிய இயக்கமாக அதிமுக கிளைத்து திமுகவிற்கு எதிர்நிலையை முன்னெடுத்து, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எம்ஜியார் அவர்கள் தனிபெரும் சக்தியாக வெற்றி வாகை சூடினார். இந்த நிலையில்தான் தனியார் தொலைக்காட்சி மடைகளுக்குப் போட்டியாக ஒன்றிய அரசின் கையிலுள்ள பொதிகை தொலைக்காட்சியில் அரசியல் விவாத நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று ஒன்றியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் காலங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியினருக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அவர்கள் கட்சியின் கொள்கைகள் பற்றி பேசுவதற்கு பொதிகை தொலைக்காட்சியில் நேரம் வழங்கப்படுவது வழக்கம். இதைத் தாண்டி மற்ற நாட்களில் பொதிகை தொலைக்காட்சியில் அரசியல் பேசுவது மிக மிக அரிது. எதிர்க்கட்சியினர் திறமையான பேச்சால், ஆளும் கட்சிக்கே ஆப்பு வைத்துவிட்டால் என்னசெய்வது என்று மிகவும் கவனமாக சர்ச்சைகளை தவிர்த்து விடுவார்கள் பொதிகை தொலைக்காட்சி நிர்வாகத்தினர். அதேபோல் தற்போது அனைத்துக் கட்சியினருக்கும் வாய்ப்பளித்து அரசியல் விவாத நிகழ்ச்சிகளை நடத்தலாம், சர்ச்சைகள் இல்லாமல் வெறும் விவாதம் என்ற அடிப்படையில் மட்டும் அவர்களை நடத்திச் செல்லலாம் என்று ஒன்றியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒன்றியச் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் அது துறையின் இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இந்த ஆலோசனையில் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதில் அதிமுக மற்றும் பாஜக பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த வியூகம் அல்லது இந்த திட்டம் எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது தெரியாது. என்னதான் அனல் பறக்க விவாத நிகழ்ச்சிகளை நடத்தினாலும் இழந்துபோன பார்வையாளர்களை பொதிகை மீட்டெடுப்பது என்பது அவ்வளவு எளிதாக நடக்கக்கூடிய முன்னெடுப்பு இல்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு- இல்லாத ஊருக்கு இழுப்பை பூவே சருக்கரையாக பொதிகை தொலைக்காட்சி மடை அனைத்து இல்லங்களிலும் பார்க்கப்பட்டது. இப்போது பொதிகை காடசிமடையை அப்படியே தாண்டி வேறு காட்சிமடைக்குச் செல்கிறார்கள் பார்வையாளர்கள். காலத்துக்கு ஏற்ப அதன் வேகம் மாறாமல் இருப்பது இதற்கு முதன்மைக் காரணம் என்று குற்றச்சாட்டு உள்ளது. ஒன்றிய அரசு- பொதிகைத் தொலைக்காட்சி பணியாற்றும் விதத்தை, ஒட்டுமொத்தமாக காலத்திற்கேற்ப மாற்றாமல் அரசியல் விவாத நிகழ்ச்சிகளை நடத்தினால் மட்டும் பார்வையாளர்கள் அங்கு சென்று பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது என்கிறார்கள் இந்த துறை சார்ந்த வல்லுநர்கள். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருமா அல்லது அதிமுக மற்றும் பாஜக தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். “எம்ஜிஆரால் அடித்தட்டு மக்களுக்காகவும் அவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்ட மாபெரும் பேரியக்கம் தான் அதிமுக. எம்ஜிஆர் ஆட்சியின் நீட்சியாக தன்னுடைய இறுதிக் காலம் வரை மக்களுக்காகவும், அதிமுகவுக்காகவும் வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவும் அதே எண்ணத்தோடு இயக்கத்தையும், தமிழகத்தையும் வழி நடத்தி இருக்கிறார். அதைப்போலவே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வகுத்த பாதையில் சிறிதும் தடம் மாறாமல் அரசியல் களத்தில் நாங்கள் பயணித்து வருகிறோம். மக்களின் அடிப்படைத் தேவைகள் அன்றாடச் சிக்கல்கள் பல இருக்கின்ற போது அதைப் பற்றியெல்லாம் சிறிதளவும் கவலைப்படாமல் மக்களாட்சியின் அங்கங்களாக இருக்கக்கூடிய ஊடக நிறுவனங்கள் அதிமுக புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் சிறுமைப்படுத்தும் நோக்கிலும் மனம் போன போக்கில் ஊடக அறிக்கை தொடர்பாகவும், கட்சித் தலைவர்களுக்குக் களங்கம் ஏற்படுகின்ற விதத்திலும் விவாத தலைப்புகளை வைத்து நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்துவது உள்ளபடியே மனதிற்கு வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. மேற்சொன்ன காரணங்களால் ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகளும் செய்தித் தொடர்பாளர் கட்சியைச் சார்ந்தவர் யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் என்பதையும் எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொண்டு யாரையும் வைத்துப் பேசுவதை நிறுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எனவே கட்சியின் பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடக வழியாகக் கருத்துக்களைத் தெரிவிக்க அழைக்கவும், அனுமதிக்க வேண்டாம். வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்றும் அன்பு கூர்ந்து கேட்டுக் கொள்கிறோம். இந்தப்பாட்டில் தொலைக்காட்சி மற்றும் சமூகத் தொடர்பு ஊடகங்களில் மேலான ஒத்துழைப்பை அன்புடன் எதிர்பார்க்கிறோம்” என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் கூட்டாக வெளியிட்டிருந்த அறிக்கையில், தங்கள் முடிவை திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கத்தில்- ‘பொதுவெளியில் பங்குபெற்றாமை’ நல்ல முடிவு என்று பாஜக மற்றும் அதிமுக கட்சி தலைவர்கள் நினைத்தாலும், இப்போது விவாத நிகழ்ச்சிகளில் தங்கள் தரப்புக்கு பதில் சொல்ல ஆளில்லை என்ற நிலை உருவாகி உள்ளது அவர்களுக்கு பின்னடைவாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.