Show all

உணவகங்களில் ரூ.5000 க்கு சாப்பிட்டால் கூடுதலாக ரூ1,000 சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது

இதுதான் சரக்கு மற்றும் சேவை வரியின் தாக்கம் என்கிற தகவல்கள் சமூக வலைதலங்களில் வேகமாகப் பரவுகிறது.

     ஒரே வரி, ஒரே நாடு, ஒரே தேசம் என்று சொல்லிக் கொண்டு சரக்கு மற்றும் சேவை வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாகியது.

     இது சூலை1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் விலைவாசி உயராது என்று நடுவண் அரசு சப்பைக் கட்டு கட்டினாலும் விலை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கின்றனர்.

     ஒரு உணவகத்தில் உணவு உண்ட பின்னர் அதில் மொத்த தொகையில் சரக்கு மற்றும் சேவை வரி கணக்கிடப்படுகிறது.     தலப்பாகட்டியில் 28 வகைகளை உண்டதற்கு ரூ.5056 என எந்த வரியும் இல்லாமல் ஆகியுள்ளது. இதில் மாநில அரசுக்கு 9 விழுக்காடும், நடுவண் அரசுக்கு 9 விழுக்காடு என 18 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரி மட்டும் ரூ.910 வசூலிக்கப்பட்டுள்ளது.

     முன்னெரெல்லாம் நாம் வாங்கும் பொருள்களுக்கு வாட் 2 விழுக்காடும் சேவை வரி 6 விழுக்காடும் வசூலிக்கப்பட்டு வந்தன. இதற்கே மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

     இந்த தலப்பாகட்டி ரசீதுக்கு சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகத்துக்கு முன்னர் நாம் எவ்வளவு செலுத்தியிருப்போம் என்பதை பார்ப்போம். சரக்கு மற்றும் சேவை வரிக்கு முன், ரூ. 5056-இல் 2 விழுக்காடு வாட் வரி என்றால் ரூ.101.12 ஆகும். 6 விழுக்காடு சேவை வரி என்றால் ரூ.303.36 ஆகும். இவை அனைத்தையும் கூட்டினால், ரூ.5460.48, சுழித்து ரூ.5460 வசூலிக்கப்பட்டிருக்கும். இதில் வசூலிக்கப்பட்ட வரி ரூ.404.48 மட்டுமே.

     சரக்கு மற்றும் சேவை வரிக்குப்பின் ரூ. 505 அதிகம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை நாம் உண்ணும் உணவின் தொகைக்கேற்ப மாறுபடும்.

     சரக்கு மற்றும் சேவை வரி என்ற பெயரில் கூடுதலாக வசூலித்த ரூ. 505-இல் அதே தலப்பாகட்டியில் இரு பிரியாணி வாங்கலாம் என்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

     சரக்கு மற்றும் சேவை வரியால் விலை ஏறாது என்று நடுவண் அரசு எந்தப் பொருளில் கூறியது என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

     சரக்கு மற்றும் சேவை வரி என்பது வேறு ஒன்றும் இல்லை; நடுவண் அரசின் சட்டாம் பிள்ளை வேலைதான். வேறுவகையாகச் சொன்னால் குரங்கு புனைகளுக்கு அப்பம் பிரித்த பஞ்சாயத்துதான்.

     முன்பு மாநில அரசுக்கு மட்டும் 2கூட்டல்6, 8விழுக்காடு வரிதான். குறுக்கே புகுந்த நடுவண் அரசு குரங்கு, மக்களிடம் இருந்து 18விழுக்காடு வாங்கி 9விழுக்காட்டை தான் வைத்துக் கொண்டு தான் 9விழுக்காடு பெற்றுக் கொள்ள வாய்ப்பளித்த மாநில அரசுக்கு 1விழுக்காடு கூட்டிக் கொடுத்து விட்டு தனக்கு 9விழுக்காடு முழுக்க முழுக்க புதியதாக வருமானம் பார்க்கிறது.  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.