மூன்று ஆண்டுகளுக்கு
முன் தனித்த பெரும்பான்மையோடு பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. அப்போது, ‘தீய நாளிலிருந்து விடுபட்டு, நல்ல நாளை அடைந்துவிட்டோம்.
இனி இந்த நாட்டில் பசி, பட்டினி, பஞ்சம் இருக்காது.
கறுப்புப் பணம் இருக்காது. ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. வேலையில்லாத இளைஞர்களைப்
பார்க்க முடியாது. வளர்ச்சி... வளர்ச்சி... வளர்ச்சி என்ற ஒரே தாரக மந்திரத்துடன் பயணித்து
ஒளிமிகுந்த பாரத தேசத்தைப் படைப்போம்’ - இப்படி, ஒரு ரட்சகரைப் போல உறுதியுடன்
முழங்கினார் மோடி. மே26, 2017 உடன் மூன்றாண்டுகளை நிறைவு செய்துவிட்டு
நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசு. இந்த மூன்றாண்டுகளில்
இலக்குகளை இந்த ஆட்சி அடைந்துவிட்டதா? 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சி என்பது
ஒரு பொம்மை ஆட்சியைப் போலவே இருந்தது. சோனியா- மன்மோகன் சிங் என இரட்டைத் தலைமையாகக்
காட்சி தந்தது. அது இடைக்காலத்து பண்ணையார்தன்மை பாணியிலான தோற்றத்தை மக்களிடம் உருவாக்கிய
சமயத்தில், ஒரு ‘தேநீர் கடைக்காரர்’
என்று தன்னை எளியவராக அடையாளப்படுத்திக்கொண்டே
வந்தார் மோடி. இயல்பாகவே, சுயமாக மேலே வளரும் ஆளுமைகளை சமூகம் கொண்டாடும். அப்படி,
ஒரு தேநீர் கடைக்காரராக இருந்து குஜராத் முதல்வராக உயர்ந்து, பின்பு இந்திய பிரதமராக
உயர்ந்துள்ளார் மோடி. சில ஆயிரம் கோடி செலவுகளில், பன்னாட்டு விளம்பர
நிறுவனங்கள் போட்டுத் தந்த பாதையில் பயணிக்கிறார் என்ற போதும், மக்களிடம் வானொலி,
தொலைக்காட்சி மூலம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும், தேடிச் சென்று பேசுவதும் அவருக்குத்
தனித்த செல்வாக்கைப் பெருக்கியது. சமையல் எரிவாயு இணைப்பைத் தாமாக முன்வந்து பணக்காரர்கள்
திருப்பி அளித்தால், அது ஏழைகளுக்கு உதவும் என்ற சிறந்த வணிகத்தனத்தை மக்கள் தொண்டு
போல காட்டிக் கொண்டார். எளியவர்களின் பிதாமகனாக தன்னைப் பாவித்து வந்த
மோடியின் ஆட்சியை ‘குறைந்த நிர்வாகம்,சிறந்த ஆட்சி’ என பாஜகவின்; மூத்த தலைவர்கள் வர்ணிக்க,
எதிர்க்கட்சியினரோ, ‘கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் மூலம் தனது
செல்வாக்கை பெருக்கிய அளவுக்கு, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவில்லை’
என்று போட்டு உடைத்தனர். தொடர்ந்து, ‘ஆண்டுக்கு இரண்டு கோடி என்றளவில்
ஐந்தாண்டில் 10 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்றார். ஆனால் இந்த மூன்றாண்டுகளில்
(4.21, 1.55, 2.31 லட்சம்) மொத்தம் 8.07 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியுள்ளார்.
இந்தப் புள்ளிவிவரங்களை, நடுவண் அரசின் தொழிலாளர் துறையே வெளியிட்டுள்ளது. பசி, பட்டினி,
பஞ்சம் நிலையோ மேலும் கொடூரம் என அதன் பட்டியலை வாசிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 18 சதவிகிதக்
குழந்தைகளுக்கும், 36 சதவிகித இளைஞர்களுக்கும்
சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்கிறது குடும்ப
சுகாதார நிறுவன ஆய்வு. உலகில் எட்டு பேருக்கு
ஒருவரும், இந்தியாவில் நாலு பேருக்கு ஒருவரும் பட்டினியால் வாடுகின்றனர் என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வு மற்றும் ஐக்கிய
நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (கு.யு.ழு) தெரிவிக்கிறது. பருப்பு
ரூ 150-170 வரையும், மிளகாய் 70-120 ரூபாய் வரையும் என விலைவாசி ஏறியபடியே நடுத்தர
மக்களை சிதைவுக்குள்ளாக்கி வருகிறது. விவசாயிகள் கடன் சுமை தாளாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
ஒருமுறை ‘சில நேரங்களில்
குளிரூட்டிய அறையில் அமர்ந்து சட்டம் எழுதுபவர்களுக்கு கிராமங்களில் நடப்பது தெரியாமல்
போய்விடுகிறது’ என்று முந்தைய ஆட்சியை விமர்சித்தார் மோடி.
ஆனால் இன்று விவசாயிகள் டில்லியில் எலிக்கறி சாப்பிட்டுப் போராடும் மோசமான நிலைக்கு சென்றபோது
அதே குளிரூட்டிய அறையில் அமர்ந்து தான் வேடிக்கை பார்த்தாரோ! எங்களை நேரில் கூட வந்து
பார்க்கவில்லையே. பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோட் சூட் போடும்
பிரதமரின் கண்களுக்கு, ஏனோ விவசாயிகளின் நிர்வாணம் தெரியவில்லை போல’
எனக் குமுறுகிறார்கள் விவசாய
சங்கத் தலைவர்கள் . அதாவது, அந்நிய நேரடி முதலீடுகளைப் பெறுவதன் மூலமே
தேச வளர்ச்சி சாத்தியம் என்பது மோடியின் அசைக்க முடியாத நம்பிக்கை. பொது முதலீட்டைப்
பெருக்குவதற்குப் பதிலாக, அது இந்திய சுயசார்புப் பொருளாதாரத்தைச் சுருக்குவதற்கான
வேலையைச் செய்து, அந்நிய முதலீடுகளுக்கு சாமரம் வீசுவதாகவே இருக்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் சுமார் 75 லட்சம் கோடி
ரூபாய் கறுப்புப் பணத்தை இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ளனர். 2014-ல், நாடாளுமன்ற தேர்தல்
பிரசாரத்தில் பேசிய மோடி, ‘வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை
மீட்டுவந்து, ஒவ்வொரு குடும்பத்தின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் சேர்ப்பேன்’
என்று வாக்குறுதி அளித்தார்.
ஆனால், பாமர மக்களின் அஞ்சறைப்பெட்டியில் கை வைத்தது
தான் அவர் சாதனை. கடந்த நவம்பர் மாதத்தை இந்திய மக்களால் லேசில் மறந்துவிட இயலாது.
உயர் மதிப்புமிக்க ரூபாய் நோட்டுகள் செல்லாது,
இது கறுப்புப் பணத்துக்கு எதிரான சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று வர்ணித்தார் பிரதமர் மோடி.
நேரடியாகப் பாதிப்பை சந்திக்காத பெரும் பணக்கார வர்க்கத்தினர் மத்தியில், அந்த நடவடிக்கைக்கு
ஆதரவு இருந்தாலும், அது சாமானிய மக்கள் மீதான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்காகவே இருந்தது. தங்கள்
பணத்தை வங்கிகளிலிருந்து எடுப்பதற்காக கால்கடுக்க நின்றவர்களில், நூற்றுக்கும் மேலானவர்கள்
தங்கள் உயிரை இழந்தார்கள். ‘கருத்து வேறுபாடில்லாமல் விஞ்ஞானம், அரசியல்
மற்றும் மதத்தில் எந்தவித முன்னேற்றமும் எப்போதும் ஏற்பட்டதில்லை’.
ஆனால் பாஜக ஆட்சியின் சகிப்புணர்வு என்ன விலை
எனக் கேட்குமளவுக்கு கொடூரத் தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது.’ ‘சமூக ஒற்றுமை இல்லாவிட்டால் தேசத்தின் வளர்ச்சி
சாத்தியமில்லை. வலிமையான சமூகத்துக்கு சமூக நீதி அடித்தளமாக இருக்க வேண்டும். சமூக
ஒற்றுமையே தேசத்தின் வளர்ச்சிக்கு திறவுகோல்’ என்கிறார் பிரதமர் மோடி. ஆனால் அவரின் ஆட்சியில்தான் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று தாத்ரியில் அக்லக்
கொலையும், இதைக் கண்டித்த எழுத்தாளர் கல்பர்கி படுகொலையும் அரங்கேறியது. பசுவை வைத்து சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு
எதிரான அரசியல் கருத்தாக்கங்கள், குஜராத்தில் செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக தலித்துகள்
தாக்கப்பட்டதும், அதன் பிறகான தலித் மக்களின் எதிர்வினை நாடு முழுக்க அதிர்வை உண்டாக்கியது.
அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு நடத்தி வந்தமைக்காக கொடுக்கப்பட்ட நெருக்கடி, ரோஹித்
வெமுலாவை தற்கொலைக்குத் தள்ளியது. சாதி ஆணவக் கொலைகள், மீண்டும் குலக் கல்வியை நிறுவும்
‘புதிய கல்விக் கொள்கை’,
தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தி, குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் இந்தியில்
தான் உரையாற்ற வேண்டும் எனும் இந்தி திணிப்பு என்பதெல்லாம் இந்த அரசின் சாதனைகள். எதிர்கட்சிகளின் கேள்விகளைத் தவிர்க்க பல நேரங்களில்
நாடாளுமன்ற விவாதங்களில் பிரதமர் பங்கேற்பதில்லை. இது ஆட்சியின் சகிப்பின்மையையே வெளிக்காட்டுகிறது
என எதிர்க்கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் குற்றம் சாட்டுகின்றன. கறுப்புப் பணம் ஒழிப்பு முழக்கமிடும் அதேநேரத்தில்
வியாபம் ஊழல் வெளிப்பட்டு பிரதமர் மோடியை அசைத்து பார்த்தது. இவையில்லாமல் சில்லறை
வர்த்தகம் தொட்டு பெரும்பாலான தளங்களில் அந்நிய நேரடி முதலீடு, பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும்
முயற்சிகளே மோடியின் மூன்றாண்டு சா(சோ)தனையாகும்! ஒருமுறை, முன்னாள்
ரிசர்வ் வாங்கி கவர்னர் ரகுராம் ராஜன், ‘மோடி,
தேநீர் விற்றாரோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் நாட்டை விற்று விட்டார்’
என்றார் வேடிக்கையாக. அதானிகளும், அம்பானிகளும் மேலும் மேலும் பணக்காரர்களாக வளர்ந்துக்கொண்டே போக, குப்பனும், சுப்பனும் அதே
எளிய நிலையில் தொடர்வதே மோடியின் ‘மேக் இன்
இந்தியா’-
வின் மூன்றாண்டு சாதனையாக மிளிர்கிறது. பத்திரிகை மொழியில் சொல்ல வேண்டுமென்றால் ‘கார்ப்பரேட்
வாழுறான், சாமானியன் சாவுறான்...!’ மோடியின் ஆட்சியில்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.