Show all

குறும்பர் இம்ரான் ஷிம்பா கைது; ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசியவிட்டவர்

ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் தனியார் இணையதளம் ஒன்றில் வெளியானதாக எழுந்த புகாரின் பெயரில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை மராட்டிய மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

     கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ செறிவட்டை வாங்க மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் போல் அல்லாமல், தொடக்த்திலேயே செறிவட்டை பெற ஆதார் எண் அவசியம் என்பதை கட்டாயமாக்கியது.

     இதையடுத்து அந்நிறுவனம் அளிக்கும் அதிரடி சலுகைகள் பெறுவதற்காக தங்களது ஆதார் எண் விவரங்களை அளித்து சுமார் 12 கோடிக்கும் மேற்பட்டோர் ஜியோ செறிவட்டை வாங்கினார்கள். இதையடுத்து தொலைத் தொடர்புத் துறையில் புதிய புரட்சியைப் படைத்தது ஜியோ.

     இந்தநிலையில் magicapk.com என்ற தனியார் இணையதளத்தில்  ஜியோ வாடிக்கையாளர்களின் பெயர், செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, பகுதி, செறிவட்டை செயலுட்டப்பட்ட நாள், ஆதார் எண் என அனைத்துத் தகவல்களையும் தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

     இது குறித்த செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தன. இதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இது குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் தங்களது வாடிக்கையாளர்களின் விபரங்கள் முழு பாதுகாப்போடு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

     இந்நிலையில், இது தொடர்பான புகாரில் ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தைச் சேர்ந்த இம்ரான் ஷிம்பா என்பவரை மராட்டிய மாநில சுழியம் குற்றவியல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

     அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில், பொறியியல் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த இளைஞர் குறும்பராகச் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் வைத்திருந்த கணினி மற்றும் செல்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றை ஆய்வுக்காக அனுப்பியுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

     தொடர் விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என தெரியவருகிறது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.