Show all

இந்தியக் கட்டுப்பாட்டுவங்கி தகவல்! கொரோனா பாதிப்பால் தங்க நகையை வைத்து கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா பாதிப்பால் தங்க நகைக்கடன் 34.9 விழுக்காட்டில் இருந்து 81.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்தியக் கட்டுப்பாட்டுவங்கி தகவல்.

18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா பாதிப்பால் தங்க நகையை வைத்து கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தகவல் தெரிவித்து உள்ளது.

கப்பல் கட்டி கடற்கரை உள்ள நாடுகளுக்கு எல்லாம் பயணித்துச் சென்று உலகின் முதல் வணிகனாக தமிழன் உலாவந்த போது, அங்கே அவன் விற்பனை செய்த தமிழ்நாட்டு முத்துக்கள், மெல்;லிய துணிவகைகள், மயில்தோகை, ஏலம் போன்ற, கிராம்பு போன்ற பொருட்களுக்கு தங்கத்தையே செலாவணியாகப் பெற்ற வரலாறு உண்டு. உலகின் பல நாகரிகங்களில் தங்கம் ஒரு மதிப்பு மிகுந்த உலோகமாக கருதப்பட்டுள்ளது. செலாவணித் தாள்களைப் போல அல்லாமல், தங்கம் உலகெங்கும் ஏற்கப்படுகிறது.

தங்கம் இல்லாமல் திருமணங்கள் நடைபெறுவதில்லை. முதன்மையாக தென் இந்தியாவில், தங்கத்தின் மீதான ஆர்வம் மிக அதிகம். 

நாட்டின் கலாசாரத்தில் தங்கம் ஒரு முதன்மை அங்கம் வகிக்கிறது. சேமிப்புகளை பாதுகாக்கவும், செல்வ செழிப்பு மற்றும் தகுதியின் சின்னமாகவும், பல சடங்குகளின் அடிப்படை அம்சமாகவும் திகழ்கிறது. தங்கத்தை எளிதில் எடுத்து செல்ல முடிவதாலும், பாதுகாப்பான முதலீடாக இருப்பதாலும் கிராமப்புற மக்களிடம் தங்கத்தின் மீதான அதிகமாக உள்ளது.

ஒவ்வொரு சிறு நகரத்திலும், பல நகை கடைகள் இருப்பதை காண முடியும். சிறு மற்றும் குடும்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள நகை வணிகத் துறையில், அண்மைக் காலங்களில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. 

உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 11 விழுக்காடு இந்திய குடும்பங்கள் வசம் உள்ளன. அமெரிக்க அரசு, உலக வங்கி, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவற்றின் மொத்த தங்க இருப்பை விட இது அதிகம். இந்தியாவின் மொத்த தங்க விற்பனையில், தென் இந்தியாவின் பங்கு 60 விழுக்காடாக இருப்பதாக தங்கம் மற்றும் நகை உற்பத்தியாளர்கள் அமைப்பு கணிக்கிறது.

அப்படிப் பட்ட இந்தியாவில்  கொரோனா தாக்கத்தால் மக்கள் அன்றாடா செலவுகள் மற்றும், மருத்துவ சிகிச்சைக்காக  தங்களிடம் இருக்கும் நகைகளை அடமானம் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, மூன்றாவது அலை கொரோனா  பேரிடரால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு ஒரு ஆணியும் பிடுங்குவதில்லை. மாநில அரசுகள் வழங்கும் நிவாரணப் பொருட்களும் தேவையை நிறைவேற்றக் கூடிய அளவில் இல்லை. இதனால் குடும்பச் செலவுகளுக்கே சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக தங்க நகைக்கடன், வாகனக் கடன், வீட்டுக்கடன், தனி நபர் கடன், வேளாண் கடன் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

தங்க நகைக்கடன் 34.9 விழுக்காட்டில் இருந்து 81.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தனி நபர் கடனும் 10.8 விழுக்காட்டில் இருந்து 16.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதாவது, தனி நபர் கடனானது 27 லட்சத்து 86 ஆயிரத்து 519 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், வீட்டுக்கடன் வாங்குவதும் 9.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

தங்க நகைக்கு மட்டுமே ரூ.62,221 கோடி கடன் தரப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது. அதேநேரம், கல்விக் கடன் பெறுவது குறைந்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் ரூ.62,720 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ரூ.63,805 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டிருந்தது.

மேலும், கடன் அட்டை மூலம் கடன் பெறுவது, வங்கி முதலீட்டுப் பத்திரங்களை அடமானமாக வைத்து கடன்பெறுவது போன்றவையும் அதிகரித்துள்ளதாக இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது. அதிலும், முதலீட்டுப் பத்திரங்கள் மூலமாக ரூ.65,891 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி பட்டியலிட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.