Show all

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான முழக்கம்! ஆளுநர் திருப்பி அனுப்பப்படலுடன்- ஜாதவ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்

மேற்குவங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு முறைகளில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்;கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் எனப் பலரும் பலவகையாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பாஜகவின் இந்த மதவாத சட்டத்திற்கு எதிராக, இந்தியாவின் மத நல்லிணக்கத்தைக் காட்டும்விதமான சமூக வலைதளப் பதிவுகள், பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள், விருதுகள் ஏற்க மறுப்பு, விருதுகளைத் திருப்பி வழங்குதல்,  எனப் பல்வேறு முறைகளில் மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், மேற்குவங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு முறைகளில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

நேற்று மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். அதே நேரத்தில் அந்தக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் மற்றொரு புறம் நடைபெற்றுள்ளது. அதில் கலந்துகொள்ள அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் வந்துள்ளார், ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் ஆளுநரைக் கல்லூரிக்குள் விடாமல் முற்றுகையிட்டனர்.

ஆளுநரின் காரைச் சுற்றிய மாணவர்கள் அவருக்குக் கறுப்புக் கொடி காட்டி கண்டனம் தெரிவித்தனர். சுமார் 2 மணி நேரப் போராட்டம், வாக்குவாதத்துக்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக ஆளுநர் விழாவில் கலந்துகொள்ளாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, பட்டமளிப்பு விழாவின்போது அனைத்து மாணவர்களும் தங்களுக்கான பட்டப்படிப்புச் சான்றிதழை பெற்றுக்கொண்டனர். அப்போது மேடை ஏறிய டெபோஸ்மிதா சௌத்ரி என்ற மாணவி, தன் பட்டத்தைப் பெற்றுவிட்டு, பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் அதே மேடையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நகலைக் கிழித்து எறிந்து விட்டு பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

ஜாதவ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஆர்கோப்ரோபோ தாஸ் என்ற மாணவர் பேசும்போது, என் பிரிவைச் சேர்ந்த 25 மாணவர்கள் பட்டம் பெறும் உடைகளை அணிந்தபடி அந்த விழாவில் கலந்துகொண்டோம். ஆனால், மேடையில் எங்கள் பெயர்கள் அறிவிக்கும்போது நாங்கள் சென்று பட்டம் பெறவில்லை. இதுதான் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான எங்கள் எதிர்ப்பு எனத் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,375.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.