Show all

மோடி ஆதரவாளர் பாபாராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புகளில் அந்நிய மூலப்பொருட்கள்

பதஞ்சலி நிறுவனப் பொருள்கள் உட்பட, அனைத்து ஆயுர்வேதப் பொருள்களும் 100விழுக்காடு ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்கிறது, ஹரித்வார் ஆயுர்வேதம் மற்றும் யுனானி ஆய்வகம்.

     பாபாராம்தேவின்  பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகள் சிலவற்றில், 31.68 விழுக்காடு அந்நிய மூலப்பொருள்கள் கலந்திருப்பதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     பதஞ்சலி நிறுவனம், 2006ஆம் ஆண்டு யோகா குரு ராம்தேவால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் மருத்துவம் சார்ந்த பொருள்களை மட்டுமே தயாரித்துவந்த இந்த நிறுவனம், 2014 ஆம் ஆண்டிலிருந்து நூடுல்ஸ், சோப் போன்ற பொருள்களையும் தயாரிக்கத் தொடங்கியது.

     பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ், 2011ஆம் ஆண்டு ஜன்லோக்பால் போராட்டத்துக்குப் பிறகு, இந்தியா முழுவதும் அறியப்பட்டார். அதைத் தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், நரேந்திர மோடியை ஆதரித்து மேலும் பிரபலமடைந்துவிட்டார்.  இவருடன் சேர்ந்து பதஞ்சலியும் பிரபலமடைந்துவிட்டது. அதுமட்டுமன்றி இயங்கலை வர்த்தகம், தொலைக்காட்சி விளம்பரம் என, பில்லியன் டாலர் நிறுவனமாக உருவெடுத்துவிட்டது.  இந்த நிறுவனத்தின் 2015-2016-க்கான ஆண்டு வருவாய் 5,000 கோடி.

     இதனிடையே பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளின் தரம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகள், தரச் சோதனையில் தோற்ற சம்பவமும் நடந்துள்ளது.

     இந்த நிலையில், ஆயுர்வேதப் பொருள்களின் தரம்குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அதற்குக் கிடைத்த பதிலில், பதஞ்சலி நிறுவனம்பற்றி குறிப்பிடப்பட்ட விவரங்கள் அதிர்ச்சியடையச் செய்கின்றன.

     பதஞ்சலி நிறுவனப் பொருள்கள்  உட்பட, அனைத்து ஆயுர்வேதப் பொருள்களும் 100விழுக்காடு ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்கிறது, ஹரித்வார் ஆயுர்வேதம் மற்றும் யுனானி ஆய்வகம். அந்த ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ், ஷிவிங்கி பீஜ் உள்ளிட்ட 32 பொருள்கள்  தரமற்றவை என்பது தெரிய வந்துள்ளது. இந்தப் பொருள்களில் 31.68 சதவிகிதம் அந்நிய நாட்டு மூலப்பொருள்கள் கலந்திருக்கிறது.

     கடந்த மாதம் மேற்கு வங்க பொது நலவாழ்வு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஒரு தரப் பரிசோதனையில், பதஞ்சலி ஆம்லா ஜூஸ்  தோல்வியடைந்ததால், அங்குள்ள ஆயுதப்படையின் உணவகத்;துறையில் அதற்குத் தடை விதிக்கப்பட்டது

இவ்வாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.