கர்நாடகா மாநிலத்தில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்
காலை 6 மணி முதல் தொடங்கியுள்ளது. தலைநகர் பெங்களூருவில் உச்சக்கட்ட பாதுகாப்புகள்
போடப்பட்டுள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக
அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில்
விவசாயிகள் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மகாதாயி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர
தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு
போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கன்னட
அமைப்புகள் இந்த முழுஅடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. காலை 6 மணி முதல்
மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முழு
அடைப்பு போராட்டத்தின் அடையாளமாக கர்நாடகா சட்டமன்றத்தை நோக்கி கன்னட அமைப்புகள் பேரணி
நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகள் பங்கேற்கின்றன. பேரணியின்
போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை பெங்களூரு நகர காவல்துறையினர்
மேற்கொண்டுள்ளனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 200க்கும்
மேற்பட்ட வாகனங்களில் காலை முதலே காவல்துறையினர் சுற்றி வருகின்றனர். தொடர்வண்டி நிலையம்,
பேருந்து நிலையம், விமான நிலையங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி
கல்லூரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் நிலைமை மோசமானால் விடுமுறை அளிக்க
வாய்ப்புள்ளதாகவும் காவல்துறையினர் கூறினர். மேலும் அலுவலகங்களும் இன்று திறந்திருக்கும்
என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ்
கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி, துணை குடியரசுத்தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோரும்
இன்று பெங்களூருக்கு வர உள்ளதால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக
காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.