Show all

இந்திய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது! அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பின் தோல்வி- அதுவும் சமஸ்கிருத பல்கலைக் கழகத்தில்.

பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பு தோல்வி அடைந்துள்ளது பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக மாணவர் தேர்தலில்.

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அகில பாரத ஹிந்து சபா நிறுவனர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியாவால் தோற்றுவிக்கப்பட்ட பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் சாதிய, மத வேறுபாடுகள் தலைவிரித்தாடுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் இருந்துவருகின்றன. 

அண்மையில் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த ஆர்.எஸ்.எஸ் கொடியை அகற்றிய ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் சம்ஸ்கிருதத் துறைக்கு பெரோஸ்கான் என்பவர் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவர், சம்ஸ்கிருத மொழியில் முனைவர் பட்டம் படித்தவர். பல்கலைக்கழக மானியக் குழு வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில், ஹிந்து பல்கலைக்கழகத்தில் பபிரோஸ்கானுக்குப் பணி வழங்கப்பட்டது. ஆனால், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் தங்களுக்குப் பாடம் எடுக்கக் கூடாது என, சம்ஸ்கிருதம் படிக்கும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தப் போராட்டங்களை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவரணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்புதான். இந்த அமைப்புமீது அண்மையில் டெல்லி நேருபல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

தலைமைஅமைச்சர் மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் உள்ளது தான் இந்த சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலைக்கழகம். இங்கு அண்மையில் மாணவர்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 4 பதவிகளைக் கொண்ட இந்தத் தேர்தலில் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பு ஓர் அணியாகவும் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியான இந்திய தேசிய மாணவர் சங்கம் ஓர் அணியாகவும் போட்டியிட்டன. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. மொத்தம் உள்ள 4 பதவிகளில் ஒரு பதவியைக்கூட அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பால் வெல்ல முடியவில்லை. அதுவும் பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பு தோல்வி அடைந்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் மாணவர் அணித் தலைவருக்கு போட்டியிட்ட அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பின் ஹர்ஷித் பாண்டே பெற்றது 224 வாக்குகள்தான். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட சிவம் சுக்லா 709 வாக்குகள் பெற்று மாணவர் அணித் தலைவர் ஆகியுள்ளார். மேலும், இந்திய தேசிய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சந்தன் குமார் மிஸ்ரா துணைத் தலைவராகவும் அவ்னிஷ் பாண்டே பொதுச் செயலாளர் இடத்தையும் ரஜினிகாந்த் துபே நூலகர் பதவியையும் பெற்றுள்ளனர்.

இந்திய தேசிய மாணவர் சங்கத்தை விட அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பு குறைந்த அளவு வாக்குகளே கைப்பற்றியுள்ளது. அதிலும் ஒரு மாணவர் 21வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார். சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பின் கோட்டையாகப் பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பு பெற்றுள்ள தோல்வி பேசுபொருளாகியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,392.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.