ஆட்சியைக் கைப்பற்ற தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் யோசனையை டெல்லி தீவிரமாக ஆலோசித்து வருவதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டின் பல மாநிலங்களில் நேரடியாக ஆட்சியை கைப்பற்ற முடியாத பாஜக, ஆளும் கட்சிகளை உடைத்து கொல்லைப்புற வழியாக அதிகாரத்தை சுவைத்து வருகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டின் வலுவான வாக்கு வங்கி முன்னால் பாஜக எதுவும் செய்ய முடியாத நிலைதான் இருக்கிறது. செயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக சிதைந்து போய் பாஜகவின் பிடியில் சிக்கிக் கொண்டது. அதேநேரத்தில் திமுக தலைவர் கருணாநிதி முதுமையால் தீவிர அரசியலில் ஒதுங்கியிருந்தாலும் அக்கட்சி வலிமையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக மண்ணில் ஆட்சியைக் கைப்பற்ற டெல்லி தீவிரமான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம். இதில் ஒன்றாக காலாவதியாகிப் போன தமிழகத்தை இரு மாநிலங்களாகப் பிரிக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்தலாமா என ஆலோசித்து வருகிறதாம். தமிழகத்தில் அவ்வப்போது வடதமிழகத்தை பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அத்துடன் திருச்சியை தமிழகத்தின் தலைநகராக்க வேண்டும் என்பது எம்ஜிஆர் காலத்தில் இருந்தே பேசப்பட்டு வருகிற ஒன்றாகவும் இருந்து வருகிறது. தற்போது இந்தக் கோரிக்கையை நடைமுறைப்படுத்தினால் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியுமா என டெல்லி ஆலோசித்து வருகிறதாம். வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு மாநிலமாகவும் தென் மாவட்டங்களை இணைத்து ஒரு மாநிலமாகவும் உருவாக்கலாம் என திட்டமிடப்படுகிறதாம். இப்படிச் செய்வதன் மூலம் அதிமுகவின் கொங்கு கோஷ்டியும் மாநில பிரிவினையை வலியுறுத்தி வந்த பாமகவும் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என நம்புகிறது பாஜக. இந்த ஆதரவால் எப்படியோ தமிழகத்தின் ஒரு பகுதியில் அரியாசனத்தில் அமர்ந்துவிடலாம் என்பது டெல்லியின் கணக்கு. ஆனால் தமிழக மக்கள், எப்போதுமே மற்ற மாநிலத்தை விட வித்தியாசமாகத்தான் கணக்குப் போடுவார்கள் என்பதை டெல்லி உணர்ந்தால் சரி!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.