ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என அரசு சொன்னது. ஆனால் ரூ.1½ லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போய் இருக்கிறது, ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நீலகிரி தொகுதி திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா. 19,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக நீலகிரி தொகுதி திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என அரசு சொன்னது. ஆனால் ரூ.1½ லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போய் இருக்கிறது. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வெறும் 30 மெகா ஹெர்ட்ஸ்தான் ஏலம் விடப்பட்டது. அதை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் கொடுத்தபோது ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நட்டம் என கணக்கு மற்றும் தணிக்கைத்துறை தலைவர் வினோத் ராய் அறிக்கை அளித்தார். இரண்டாம் தலைமுறையை விட ஐந்தாம் தலைமுறை 20 மடங்கு அதிக திறன் வாய்ந்தது. இரண்டாம் தலைமுறையில் வெறும் குரல்தான் சென்றது. மூன்றாம் தலைமுறையில் காணொளி வந்தது. இப்போது ஐந்தாம் தலைமுறையில் எந்த ஒரு இணைய தேடுதலாக இருந்தாலும் ஒரு நொடியில் வந்துவிடும். இந்த திறன் அடிப்படையில் பார்த்தால் ரூ.5 லட்சம் கோடி அல்லது ரூ.6 லட்சம் கோடிக்கு ஏலம் போயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை. அப்படியானால் திட்டமிடுதலில் மோசமா? நாலைந்து கார்ப்ரேட்டுகளுடன் சேர்ந்து ஒன்றிய அரசு கூட்டு சதி செய்ததா? இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். இரண்டாம் தலைமுறைக்கும் ஐந்தாம் தலைமுறைக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்த்தாலே எவ்வளவு பெரிய மோசடியை வினோத்ராய் செய்திருக்கிறார் என்பது தெரியும். அவர் யாருக்காக இதை செய்து இருக்கிறார்? ஒரு ஆட்சி மாற்றத்துக்காக அவரது பின்னால் யார் யாரெல்லாம் இருந்தனர்? என்பதை விசாரிக்க வேண்டும். இதற்கு அரசு முன்வரவில்லை என்றால், இந்த அரசு நிச்சயமாக மாறும். அப்படி மாறும்போது அடுத்து வருகிற அரசாங்கமாவது விசாரித்து நாட்டுக்கு உண்மையை சொல்ல வேண்டும். இது ஒரு மிகப்பெரிய மோசடி, இவ்வாறு நீலகிரி தொகுதி திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கூறியுள்ளார். இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தில் பந்தாடப்பட்ட ஆ.இராசவுக்கு இந்தக் குற்றச்சாட்டை வைப்பதற்கு நூறு விழுக்காடும் தகுதியும் உரிமையும் இருக்கிறது. எனென்றால்- பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, மன்மோகன் சிங் தலைமைஅமைச்சராக இருந்தார். இக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக, ஒன்றிய தலைமை கணக்கு தணிக்கையாளர் ஒன்றிய அரசுக்கு ஓர் அறிக்கை பதிகை செய்தார். அதில் குறைந்த ஏலத்தொகை;கு இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதால்- அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் இது முறைகேடு என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்தப்பாட்டில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப்பட்டது. போபர்ஸ் ஊழலுக்குப் பிறகு நடந்த நாட்டின் மிகப்பெரிய முறைகேடு என்றெல்லாம் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் குற்றம் சாட்டின. இதையடுத்து, ஆ.ராசா தனது பதவியை விட்டு விலகினார். பின்னர் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஒன்றிய குற்றப்புலனாய்வு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் நடைமுறையாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் பகுதியில் தனியாக சிறப்பு அறங்கூற்றுமன்றம் அமைக்கப்பட்டது. இந்த வழக்குகள் மீது அறங்கூற்றுவர் ஓ.பி.சைனி நாளது 30,மாசி,தமிழ்த்தொடராண்டு-5112 அன்று (14.03.2011) விசாரணையைத் தொடங்கினார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவனர்கள் ஷாஹித் உஸ்மான் பல்வா மற்றும் வினோத் கோயங்கா, யுனிடெக் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழும உயர் அதிகாரிகளான கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் ஹரி நாயர் உள்ளிட்ட 14 பேர் மற்றும் சில நிறுவனங்கள் மீது ஒன்றியக் குற்றப்புலனாய்வுத்துறை குற்றஅறிக்கை பதிகை செய்தது. இவர்கள் மீது ஒன்றியக் குற்றப்புலானாய்வுத் துறையால்- குற்றச் சதி, மோசடி, அரசு பதவியை தவறாக பயன்படுத்துதல், லஞ்சம் பெற்றது உட்பட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் குற்றம் சாட்டி இருந்தது. இதனிடையே, முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறி 122 அலைக்கற்றை உரிமங்களை களைவும் செய்து நாளது 19,தை,தமிழ்த்தொடராண்டு-5103 அன்று (02.02.2012) உச்ச அறங்கூற்றமன்றம் உத்தரவிட்டது. இதுபோல, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நடைமுறையாக்கத் துறை சார்பில் குற்றஅறிக்கை பதிகை செய்யப்பட்டது. அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்கு ஆதாயமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி லஞ்சமாக வழங்கியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் முதன்மை பங்குதாரரும் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாள், இயக்குநர் பி.அமிர்தம், தலைமை செயல் அதிகாரி சரத் குமார், குசேகான் புரூட்ஸ் நிறுவனத்தின் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால், திரைப்பட தயாரிப்பாளர் கரிம் மொரானி உள்ளிட்ட 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதவிர, இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் தனியாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், எஸ்ஸார் குழும நிறுவனர்கள் ரவி காந்த் ரூயா மற்றும் அனுமன் ரூயா, லூப் டெலிகாம் நிறுவனர்கள் ஐ.பி.கேதான் மற்றும் கிரண் கேதான், எஸ்ஸார் குழும இயக்குநர் விகாஷ் சரப் உள்ளிட்ட 8 பேர் மீதும் சில நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. லூப் டெலிகாம் நிறுவனத்தைப் பயன்படுத்தி தொலைத் தொடர்புத் துறையை ஏமாற்றியதாக அதில் கூறப்பட்டிருந்தது. இந்த 3 வழக்குகளிலும் மொத்தம் 35 பேர் மற்றும் சில நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இரண்டாம் தலைமுறை ஏலத்தில், இவ்வளவு கொடுமைகள் இழைக்கப்பட்ட, பந்தாடப்பட்ட ஆ.இராசவுக்கு இந்த குற்றச்சாட்டை வைப்பதற்கு நூறு விழுக்காடும் தகுதியும் உரிமையும் இருக்கிறது. ஆனால்- இந்த வழக்குகள் மீது ஆறு ஆண்டுகளாக நடந்த விசாரணை, முடிவுக்கு வந்து நாளது 06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5119 (21.12.2017) அன்று குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அறங்கூற்றுமன்றத்தில் அணியமாக்கப்பட்டனர். அறங்கூற்றுவர் ஓ.பி. சைனி காலை 10.30 மணிக்கு அறங்;கூற்றுமன்றத்துக்கு வந்தார். 10.45-க்கு தீர்ப்பு வழங்கினார். 1,552 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் நகல் வழங்கப்பட்டது. நீதிபதி சைனி கூறும்போது, 'இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. எனவே குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர்' என்று தீர்ப்பு வழங்கினார். இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வழக்கில் அனைவரும் விடுதலை பெற்ற அடிப்படையில்- இதுபோன்ற குற்றச்சாட்டு- ஆ.ராசா தற்போது ஒன்றிய அரசு மீது வைக்கிற குற்றச்சாட்டு- ஆளுகிறவர் யாராக இருந்தாலும்- ஊழல் நடந்திருக்கலாம் என்கிற நம்பிக்கை அடிப்படையான குற்றச்சாட்டாக மட்டுமே இருக்க முடியும். தங்களைப் போல ஒன்றிய ஆட்சியில் உள்ள பாஜக அடுத்துவரும் ஆட்சியால் பந்தாடப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் திமுக பந்தாடப்பட்டது, மாநிலக்கட்சி என்கிற அடிப்படையில் தான். ஒன்றிய ஆட்சிக்கு முனையும் கட்சிகள் இப்படி பந்தாடப்படுவதான வரலாறு கடந்த எழுபத்தி நான்கு ஆண்டுகளாக இல்லை. இதைக் கருத்தில் கொண்டு ஒன்றிய பாஜக இதில் ஊழலே முன்னெடுத்திருந்தாலும் மக்களால் தண்டிக்க படுவார்களே அன்றி சட்டத்தால் தண்டிக்கப்படவோ, பந்தாடப்படவோ வாய்ப்பே இல்லை என்பதை ஆ.ராசா புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை வழக்கு கற்பனையின் மீது நிறுவப்பட்ட வேடிக்கையான வழக்கு என்று அப்போதும் நாம் கருத்து பதிவிட்டு வந்திருக்கிறோம். தற்போதும் ஆ.ராசாவின் குற்றச்சாட்டு கற்பனையானது வலுவில்லாதது என்றே பதிய விரும்புகிறோம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,330.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.