அறங்கூற்றுமன்றங்களின் வேலை அரசு இயற்றிய சட்டங்களுக்கு மக்களை வழிநடத்துவதுதான். அறங்கூற்றுவர்களை நியமித்துக் கொள்கிற அதிகாரம் அறங்கூற்று மன்றங்களுக்கு உண்டு. தானாக சிந்தித்து சட்டத்தை உருவாக்குகிற அதிகாரம் கிடையாது. 24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அறங்கூற்றுமன்றங்களின் வேலை அரசு (இந்திய அரசு! மாநில அரசுகள் அல்ல) இயற்றிய சட்டங்களுக்கு மக்களை வழிநடத்துவதுதான். அறங்கூற்றுவர்களை நியமித்துக் கொள்கிற அதிகாரம் அறங்கூற்று மன்றங்களுக்கு அரசு வழங்கியிருக்கிறதுதான். அதற்காக தானாக சிந்தித்து சட்டத்தை உருவாக்குகிற அதிகாரம் அறங்கூற்றுமன்றங்களுக்கு இருப்பது போல அறங்கூற்றுமன்றங்களிடம் நாம் கூடுதாலாக எதிர்பார்க்கிறோம். அறங்கூற்றுமன்றத் தீர்ப்புகளை மக்கள் திறனாய்வு செய்யக் கூடாது. அதனால், அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கக்கூடும். இதுவும் அறங்கூற்றுமன்றத்திற்கு கூடுதல் மதிப்பளிக்க அரசு வகுத்திருக்கிற சட்டந்தான். சில நேரங்களில் நமக்கு அறங்கூற்றுமன்றங்களின் தீர்ப்பில் நியாயம் இல்லாதது போல தோன்றலாம். உறுதியாக அங்கே அறங்கூற்றுமன்றங்களின் தவறு ஏதும் கிடையாது. அரசின் நோக்கம் அந்தத் தீர்ப்புக்கு அடிப்படையாக நின்று வழிநடத்தியிருக்கும். ஆக ஆளுகிற அரசை நியமிப்பதில் ஏனோதானோவென்று இருந்துவிட்டு அறங்கூற்றுமன்றங்களை நொந்து கொள்வது மடமை. ‘தமிழக அரசே விடுவித்துக் கொள்ளலாம்’ என்று, ஏழுபேர் விடுதலைக்கு, உச்சஅறங்கூற்றுமன்றம் (அறங்கூற்றுவர் சதாசிவம் அவர்கள்) வழிவகுத்துக் கொடுத்தும்கூட அந்த விடுதலை இதுவரை சாத்தியமாகவில்லை. சட்டம் வாய்ப்பாக அமைந்தால் கூட, அரசின் நோக்கம் சாதகமாக அமையவில்லையெனில், தீர்ப்புகூட செயல்படுத்த முடியாததாகிவிடும் என்பதற்கு ஏழுபேர்கள் இன்னும் விடுவிக்கப்பட முடியாமல் இருப்பது, சிறந்த எடுத்துக்காட்டாகும். காவிரி விவகாரம், காவிரி மேலாண்மை போன்ற தீர்ப்புகளும் நீர்த்துப் போன அனுபவங்கள் தமிழகத்திற்கு உண்டு. நீட் தேர்வு நடத்த வேண்டும். “உச்சஅறங்கூற்றுமன்றம் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று சொல்லிவிட்டது” என்பதே நீட் தேர்வை முன்னெடுப்பதற்கான முழக்கமாக இருந்தது. தற்போது சென்னை உயர் அறங்கூற்று மன்றம் நீட் தேர்வை திரும்பப் பெறுங்கள் என்று கூறிவிட்டது! நீட்தேர்வு திரும்பப் பெறப்படுமா? பெறப்படமாட்டாது. ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று தமிழ்மெய்யியல் தெரிவிக்கிறது. நம்முடைய தலையெழுத்து என்பது நம்முடைய தலையில் இருக்கிற கீறல் என்று மதங்கள் சொல்லலாம். தலையெழுத்து என்பது: எப்படி நமது வாழ்கையை அமைத்துக் கொள்ளப் போகிறோம் என்கிற விதிகளை நமக்குநாமே அமைத்துக் கொள்கிற நோக்கம் அது என்கிறது தமிழ்மெய்யில். ஆக ஆளுகிற அரசை நியமிப்பதில் ஏனோதானோவென்று இருக்க வேண்டாம் என்று, நேற்றைய நினைவுகளைக் கருத்தில் கொண்டு, பணத்திற்கெல்லாம் வாக்களிக்க முயலாமல், நமது அடிப்டையைக் (தமிழர்அடிப்படை ‘தமிழ்மொழி’ மட்டுமே) கொண்டாடுகிற கொள்கைகளுக்கு வாக்களிப்போம் என்று நமது நோக்கத்தை அமைத்துக் கொள்வோம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,332.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.