ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு அரசியல் கடந்து கல்லூரி மாணவர்களும் போராட்டங்கள் நடத்தியதாக செய்திகள் வெளியாகிய நிலையில், தான் பேசிய பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள விளக்கத்தால் தற்போது இதுகுறித்த சர்ச்சைகளும், பேச்சுக்களும் முடிவுக்கு வந்துள்ளன. 05,தை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டை தமிழகம் என்று சுட்டியது குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அண்மையில், தமிழ்நாட்டை தமிழகம் என்று ஆர்.என்.ரவி சுட்டியது குறித்த பேச்சு காரணமாக சர்ச்சை எழுந்தது. தமிழ்நாடு என்ற தலைப்பை விட தமிழகம் என்ற தலைப்பே பொருத்தமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார் அவர் பேச்சில். ஆளுநரின் இந்த பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டில் தமிழ் அறிஞர்கள், திமுக, உள்ளிட்ட தமிழைக் கொண்டாடும் கட்சிகள் கடுமையாக கொந்தளித்து எதிர்ப்புகளை பல்வேறு தளங்களில் பதிவு செய்து வந்தனர். ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்ற சொல்கிறார் என்று ஆய்வுகள் வைக்கப்பட்டன. மதராஸ் என்று இருந்த பெயரை பெரிய போராட்டங்களுக்குப் பின், மொழிப்போர் தியாகிகளின் மரணத்திற்குப் பின் தமிழ்நாடு என்று மாற்றினார்கள். யார் என்ன சொன்னாலும் இப்போதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தமிழ்நாட்டின் பெயர் தமிழ்நாடுதான். இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி திடீரென தமிழ்நாடு - தமிழகம் சர்ச்சையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, போகூழ்வயமாக இங்கு தமிழ்நாட்டில் 'நாங்கள் திராவிடர்கள்' என்ற பிற்போக்கு அரசியல் இருந்து வருகிறது. அதனுடன் நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. தமிழ்நாடு நமது இந்தியாவின் ஒரு பகுதி என்ற உண்மையை நீங்கள் அறிவீர்கள். அதில் தமிழ்நாடு ஒரு இடம் என்பது தெரிந்ததே. தமிழ்நாட்டைத் தமிழகம் என்று நாம் அழைப்பது மிகவும் பொருத்தமானது. காரணம், இந்த நிலம் இந்தியாவின் உயிரை, இந்தியாவின் அடையாளத்தை பேணுகிறது என்று ஆளுநர் ஆர். என் ரவி தனது உரையில் குறிப்பிட்டு இருந்தார். அதோடு தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவர் ஆற்றவேண்டிய உரையில் அவர் தான்தோன்றியாக முன்னெடுத்த மாற்றங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர்.என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார். ஆளுநர் ரவி தனது உரையில் 65வது பத்தியை அப்படியே தவிர்த்து இருக்கிறார். அந்த பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாதிரி ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது, என்ற பகுதியை மொத்தமாக தவிர்த்து உள்ளார். அதோடு தமிழ்நாடு என்று வரும் இடங்களில் எல்லாம் இந்த அரசு என்ற சொல்லாடலை ஆளுநர் பயன்படுத்தினார். இதற்குச் சட்டமன்றத்திலேயே பதிலடி கொடுக்கும் விதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி உரைக்கு எதிராக தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அதோடு ஆளுநர் உரை நீக்கப்பட்டு அரசு தயாரிக்கப்பட்ட உரை அவையில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு அரசு குடியரசுத் தலைவரிடம் முறையிட்டது. இதில் ஆளுநருக்கு எதிராக புகார் வைக்கப்பட்டது. முன்னதாக ஆளுநருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதமும் எழுதினார். ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சார்பாக கோரிக்கையும் வைக்கப்பட்டது. தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி சென்ற மறுநாளே ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார். அங்கு அவர் உள்துறை அதிகாரிகளை சந்தித்ததாக கூறப்பட்டது. இந்த சந்திப்பிற்கு மறுநாளே ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆலோசனை கேட்டார். இதில் இன்னும் உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டை தமிழகம் என்று சுட்டிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளுநர் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், நிறைவடைந்த 'காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்' ஒரு மாத காசி - தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி' நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாறு பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, 'தமிழகம்' என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வது தவறானது என்று தெரிவித்துக் கொள்கிறேன். எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை' எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம், என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு அரசியல் கடந்து கல்லூரி மாணவர்களும் போராட்டங்கள் நடத்தியதாக செய்திகள் வெளியாகிய நிலையில், இந்த விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதால், தற்போது இதுகுறித்த சர்ச்சைகளும், பேச்சுக்களும் முடிவுக்கு வந்துள்ளன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,498.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.