பல் வலிக்கு மருந்து தரும் மருத்துவர், பல்லை உடைக்கும் வேலைக்கு வந்தது ஏன்? இப்படி கேள்வி கேட்டதுதான் நரேந்திர மோடியின் நகைச்சுவை 20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பேரறிஞர் அண்ணா, முத்தமிழ்க் கலைஞர் கருணாநிதி, பொன்மனச் செம்மல் எம்.ஜி.இராமச்சந்திரன், கல்விக்கு கண் தந்த காமராசர் என்று நிறைய தலைவர்களின் நேரத்திற்குப் பொருந்திய நகைச்சுவைகளை நாம் கேட்டு மகிழ்ந்த தருணம் மிக மிக அதிகம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவை நடவடிக்கையின்போது முஸ்லிம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் லத்தீப் பேசுகையில், ‘கூவம் ஆற்றில் முதலை இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால் அங்கே அசுத்தம் வெகுவாக குறைந்து விட்டது. எனவே முற்றிலும் அசுத்தத்தைப் போக்க, கூவம் ஆற்றில் அரசு முதலைகளை விடுவது பற்றி ஆலோசிக்குமா’ என்றார். அதற்கு பதில் அளிக்க எழுந்த கலைஞர், “ஏற்கனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ‘முதலை’ கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது.” என முடிப்பதற்குள் கருணாநிதியின் கணநேரத்து நகைச்சுவை பதிலைக் கேட்டு பேரவையே ஆரவாரச் சிரிப்பில் மூழ்கியது. பஞ்சாப்பைச் சேர்ந்த மருத்துவர் நவ்ஜோத் சிமி பல் மருத்துவராக இருந்து இந்தியக் காவல்பணித்துறை அதிகாரியாக மாறி உள்ளார். மருத்துவர் நவ்ஜோத் சிமி கடந்த கிழமை தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியுடன் தனது கதையைப் பகிர்ந்து கொண்டார், மோடியுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடிய போது, அவரைப் பாராட்டிய நரேந்திர மோடி தமது கேள்வியால் கலகலப்பை ஏற்படுத்தினார். தலைமைஅமைச்சர் மோடி ஹிந்தியில், நவ்ஜோத் சிமியிடம் ‘பல் வலிக்கு மருத்துவம் பார்த்த நீங்கள் எதற்காக எதிரிகளின் பற்களை உடைக்கும் வேலையைத் தேர்வு செய்தீர்கள்’ என்று மோடி ஏற்படுத்திய கலகலப்புக்கு, சிமி புன்னகையுடன் பதிலளித்தார். அறிவாற்றலோடு மக்களின் வலியைத் தீர்க்கும் பணி காவல்துறை பணி என்பதால் தேர்வு செய்ததாகக் கூறினார் நவ்ஜோத் சிமி. மேலும், நான் நீண்ட காலமாக மக்கள் சேவை சார்ந்த பணியில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு மருத்துவரின் பணி மற்றும் ஒரு காவல்துறை அதிகாரியின் கடமை மக்களின் வலியைப் போக்க வேண்டும், எனவே இது இந்த வகை சேவையில் பணியாற்ற ஒரு பெரிய தளம் என்று நான் நினைத்தேன் என்று தெரிவித்தார். ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஒன்றிய காவல் அகாடமி பயிற்சி நிறுவனத்தில் தகுதி பெற்ற இந்தியக் காவல்பணித்துறை அதிகாரிகளுடன் தலைமைஅமைச்சர் மோடி கடந்த கிழமை உரையாடினார்.
ஒரு முறை அறிஞர் அண்ணாவைப் பார்க்க சிலம்புச் செல்வர் ம.பொ.சி அண்ணா இல்லத்துக்கு வந்தார். அண்ணா ம.பொ.சி.க்கு விருந்தளிக்க எண்ணி அசைவ உணவுக்குச் சொல்லி அனுப்பினார்.
உடனே ம.பொ.சி ‘ஆட்டு இறைச்சி மட்டும் வேண்டாம்’ என்றார்.
‘ஏன்’ என்றார் அண்ணா. மருத்துவர் கொலஸ்ட்ரல் (கொழுப்பு) அதிகமாக இருக்குன்னுட்டார்’ என்றார் சிலம்பு செல்வர்.
உடனே அண்ணா நகைச்சுவையாக ‘அடடே, அந்த விடையம் அவருக்கும் தெரிஞ்சு போச்சா’ என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.