டெல்லியில் மக்கள் காற்று மாசுபாட்டால் செத்துக் கொண்டு இருக்கிறார்கள், அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று உச்ச அறங்கூற்றுமன்றம் கண்டித்துள்ளது. 18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காற்று மாசு காரணமாக டெல்லியில் மிக மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. டெல்லியில் காற்று மாசு புள்ளிகள் அபாய கட்டத்தில் இருக்கிறது. டெல்லியில் 8 இடங்களில் காற்று மாசு புள்ளிகள் 999 புள்ளியை தொட்டு இருக்கிறது. (வெறுமனே 50 என்பதுதான் நன்னிலையாம்.) இந்த நிலையில் டெல்லி மாசுபாட்டிற்கு எதிராக பல்வேறு பொதுநல வழக்குகள் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச அறங்கூற்றுமன்றத்தில் இன்று சிறப்பு அமர்வு முன் நடைபெற்றது. அறங்கூற்றுவர்கள் ஜேஜே அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா அமர்வு இது தொடர்பான மனுவை விசாரித்தனர். இந்த வழக்கில் அறங்கூற்றுவர்கள் மிக கடுமையான கேள்விகளை எழுப்பினார்கள். அவர்கள் தங்கள் விசாரணையில் டெல்லியில் இவ்வளவு மோசமான சூழ்நிலை நிலவுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எல்லா ஆண்டும் டெல்லி இப்படித்தான் சுவாசிக்க சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறது. மக்கள் டெல்லியில் பாதுகாப்பாக இல்லை . வீட்டிற்குள் கூட அவர்களால் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. ஒரு நல்ல நாட்டில் இப்படி எல்லாம் நடக்காது. இப்போதும் கூட டெல்லியில் மக்கள் வெடி வெடிக்கிறார்கள், குப்பைகளை கொட்டிக்கொண்டு, அதை எரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இதற்கு எல்லாம் எதிராக அரசால் எதுவும் செய்ய முடியவில்லை. மக்கள் குப்பைகளை எரித்துவிட்டு, பின் மூச்சும் அடைக்கிறது என்று புகார் அளிக்க முடியாது. இந்த மாசுபாட்டிற்கு எல்லோரும் ஒரு வகையில் பொறுப்புதான். இதற்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இப்போதே உடனடித் தீர்வு மற்றும் நீண்ட கால தீர்வு இரண்டையும் நாம் எடுக்க வேண்டும். காற்று மாசுவால் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். அன்றாடம் மக்கள் இறக்கிறார்கள், அரசு வேடிக்கை பார்க்கிறது. இதற்கு தீர்வு செய்வதாக பூச்சாண்டி மட்டும்தான் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு இருப்பதாக தெரியவில்லை. என்று உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் டெல்லி மாசுக்கு காரணம் என்ன? டெல்லியில் ஏற்பட்டு இருக்கும் காற்று மாசு உலகம் மொத்தத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. உலக வானிலை மாற்றத்திற்காக கிரேட்டா தன்பெர்க் போராடி வரும் அதே காலத்தில்தான் டெல்லியில் காற்று மாசும் மக்களை அலைகழித்து வருகிறது. டெல்லியில் காற்று மாசு புள்ளிகள் அபாய கட்டத்தில் இருக்கிறது. இதன் பொருள்: அங்கிருக்கும் காற்று- மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்றதாகும். டெல்லியில் மருத்துவ அவசர நிலை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்னை, பெங்களூர், நாக்பூர் கூட சரி. டெல்லி வேண்டவே வேண்டாம் நாட்டின் தலைநகரை மாற்றுங்கள் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. டெல்லியில் 8 இடங்களில் காற்று மாசு புள்ளிகள் 999 புள்ளியை தொட்டு இருக்கிறது. 9 இடங்களில் புள்ளிகள் 920 புள்ளிகளை தாண்டி இருக்கிறது. இதனால் டெல்லியில் பகல் நேரம் கூட எதுவும் தெரியவில்லை. 10 மீட்டர் தூரத்தில் இருக்கும் பொருள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. இந்த அதீத புகை காரணமாக டெல்லியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சாலை போக்குவரத்து இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெறும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் டெல்லியில் காற்று இப்படி மோசமாக மாசடைந்து விடவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக காற்று மாசுபட்டு, தற்போது மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது. டெல்லியின் மாசுபாட்டிற்கு அறுபது விழுக்காடு, முழுக்க முழுக்க இந்திய அரசு மட்டுந்தான் காரணம் என்கிறார்கள். டெல்லியின் முன்னேற்ற ஆணையம் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. டெல்லியில் தொடங்கப்படும் தொழிற்சாலைகள் எல்லாம் இந்திய அரசு மூலம் நேரடியாக அனுமதி பெற்று அமைக்கப் படுகிறது. எல்லையில்லா தொழிற்சாலைகள்தாம் டெல்லி மாசுபாட்டிற்கு முதன்மைக் காரணம் என்கிறார்கள். 1982ல் டெல்லியில் ஆசியவிளையாட்டு போட்டி நடந்தது. அப்போதுதான் டெல்லி ரிங் ரோடு வரை மிக வேகமாக வளரத் தொடங்கியது. இதனால் டெல்லியில் சுற்றிலும் இருந்த தொழிற்சாலைகள் டெல்லியை நோக்கி படை எடுக்கத் தொடங்கியன. டெல்லியை சுற்றி இருக்கும் ஹரியானா, உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம் எல்லாம் மிக மோசமான வறுமையில் உழன்று கொண்டு இருந்தன. இதன் காரணமாக அங்கிருந்து பல லட்சம் மக்கள் டெல்லிக்கு படையெடுக்க தொடங்கினார்கள். 1985க்கு பின் தொடங்கிய இந்த படை எடுப்பு இப்போது வரை முடியவில்லை. டெல்லியில் காணப்படும் அதீத மக்கள் தொகை, அதீத தொழிற்சாலைகள் இரண்டும் அம்மாநிலத்தின் மிக மோசமான காற்று மாசுபாட்டிற்கு காரணம். டெல்லியில் உண்மையான ஆட்சி அதிகாரம் முதல்வரிடம் இருக்கிறதா? அல்லது துணை நிலை ஆளுநரிடம் இருக்கிறதா என்று பலருக்கும் குழப்பம் இருக்கிறது. இதனால் அதிகாரிகள் தங்கள் செயலை செய்ய அதிகம் யோசிக்க வேண்டி இருக்கிறது. புது -டெல்லியின் தொடர்வண்டி நிலையம் தொடங்கி 1985க்கு பின் கட்டப்பட்ட எதுவுமே சரியான திட்டமிடலுடன் கட்டப்படவில்லை என்று இயற்கை ஆர்வலர்கள் புகார் கூறுகிறார்கள். சென்னை போல சரியான திட்டமிடல் இல்லை என்று டெல்லி வாசிகள் தெரிவிக்கிறார்கள். டெல்லியை நோக்கி மக்கள் இவ்வளவு பேர் வருவார்கள் என்று தொலைநோக்குச் சிந்தனை இந்திய அரசில் ஆண்டவர்களுக்கும் சரி தற்போது ஆளுகிறவர்களுக்கும் கிடையாது. அதுதான் தற்போது அங்கு கட்டுபடுத்த முடியாத காற்று மாசுபாட்டிற்கு காரணம் என்கிறார்கள். இதை கண்டிப்பாக இன்னும் 20 ஆண்டுகளில் கூட சரி செய்ய முடியாது என்றும் கூறுகிறார்கள். ஒரே தீர்வு! ஆம் டெல்லியில் இருந்து தலை நகரை வேறு இடத்திற்கு மாற்றி, அதிகாரிகள், அலுவலகங்களை வேறு இடத்திற்கு மாற்றி, டெல்லியின் மக்கள் தொகையை செயற்கையாக குறைத்தால் மட்டுமே காற்று மாசு குறையும் என்கிறார்கள். இந்த ஒற்றைப்படை எண், இரட்பை;படை எண் வாகன விதிகள் எல்லாம் வெறுமனே பம்மாத்து வேலையாக மட்டுமே இருக்கும் என்று அனைத்துத் தரப்பினரும் வற்புறுத்தி வருகிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,326.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.