இலங்கையில் அண்ணன் தம்பிகள் இணைந்து ஆட்சியை கைப்பற்றி அசத்தி வருகிறார்கள். இந்தியாவில், மகாராஷ்டிர மாநிலத்தில்: மாமனார் சரத்பவாரும், மருமகன் அஜித் பவாரும் நேற்று நள்ளிரவில் பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு, குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள். கட்சியும் உடைந்தது, குடும்பமும் உடைந்தது என சரத் பவார் மகள் உருக்கம். 07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜகவிற்கு அஜித் பவார் ஆதரவு அளித்ததை அடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே “கட்சியும், குடும்பமும் உடைந்துவிட்டது” என கட்செவிஅஞ்சலில் (வாட்ஸ்அப்) நிகழ்நிலை பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் பாஜகவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதையடுத்து முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றனர். இதற்கான திட்ட வேலைகள் நேற்று நள்ளிரவில் முடிக்கப்பட்டுள்ளது. 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டமன்றத்திற்கு கடந்த மாதம் தேர்தல் நடந்தது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்வது என தேர்தலுக்கு முன்பே பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா கூறியதை பாரதீய ஜனதா திட்டவட்டமாக மறுத்தது. இதனால் அக்கட்சிகள் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் போனதால் பத்து நாட்களுக்கு முன்பு மராட்டியத்தில் குடிஅரசுத்தலைவர் ஆட்சி அமல் ஆனது. பாரதீய ஜனதாகட்சி வளர்ச்சிக்கு, சுமார் 30 ஆண்டு காலமாக சிவசேனா ஆதாயம் இல்லாமல், ஹிந்துத்துவா உறவில் ஆதரவு தந்துவந்த நிலையில், பதவி என்று வரும்போது, பாஜகவின் நேர்மையின்மை புலனானதால், உறவை முறித்துகொண்டது சிவசேனா. சிவசேனா, தனது தலைமையில் புதிய அரசு அமைப்பதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஹிந்துத்வா கொள்கையை கடைப்பிடித்து வரும் சிவசேனா, மதசார்பற்ற கொள்கை கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் ஆட்சி அமைக்க முற்பட்டது, புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று மாலை 3 கட்சி தலைவர்களும் ஆட்சி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க தென்மும்பையில் உள்ள நேரு அரங்கத்தில் சந்தித்து பேசினார்கள். இந்த கூட்டத்தில் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத், ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், அவினாஷ் பாண்டே, மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட், முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான், மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பில், மாமனார் சரத்பவாரும், மருமகன் அஜித் பவாரும், இந்திய முன்னாள் அமைச்சர் பிரபுல் படேல், மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்புக்கு பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் மாமனார் சரத்பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே (முதல்அமைச்சர்) தலைமையில் புதிய அரசு அமைக்க மூன்று கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு உள்ளது. எனவே அரசுக்கு தலைமை வகிப்பது யார்? என்ற பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது. இனி மற்ற விஷயங்கள் குறித்து பேசப்படும்” என்றார். ஆனால் இன்று காலை மராட்டிய முதல் அமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல் அமைச்சராக மருமகன் அஜித் பவார் பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் இணைந்து மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்ட நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியானது பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து மராட்டியத்தில் கடந்த 10 நாட்களாக நீடித்து வந்த குடியரசு தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. கொள்கையும் உடைந்தது; உறவும் ஒட்டவில்லை; ஆனால் ஏதோவொன்று வென்றிருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,345.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.