Show all

குடியரசு தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

     குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் சூலை 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கான தேர்தல் சூலை 17-ஆம்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசு தலைவர் யார் என்பது குறித்து ஆளும் பாஜகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தீவிரம் காட்டி வந்தன.

     இரு தரப்பும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். மேலும் சர்ச்சைகளில் இல்லாத ஒருவரை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

     இந்நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் அவை அப்படியே கைவிடப்பட்டன. பாஜக மூத்த தலைவரான ஜோஷியை தேர்ந்தெடுக்க ஆர்எஸ்எஸ் விரும்பியது.

     அதற்கு மோடி ஒப்புக் கொண்ட நிலையில், ஜோஷியின் பெயர் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அடிப்பட்டது. இதனால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. இதை தொடர்ந்து ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்மு, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோரின் பெயரும் அடிபட்டது.

     பின்னர் துணை குடியரசு தலைவர் வேட்பாளர் பதவிக்கு வெங்கைய்யா நாயுடு அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. பாஜக வேட்பாளர் தேர்வு குழுவில் வெங்கைய்யாவின் பெயரும் இடம்பெற்றிருந்ததால் அந்த வாய்ப்பு அவருக்கு இல்லை என்பது தெளிவானது.

     இதை தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள சுஷ்மா ஸ்வராஜுக்கு அண்மையில் சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனால் அவரால் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வது முடியாத நிலை ஏற்பட்டதால் அவரே குடியரசு தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் சுஷ்மா அந்த தகவலை மறுத்தார்.

     இதை தொடர்ந்து வரும் 23-ஆம் தேதிக்குள் பாஜக வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதால் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது.

     இந்தக் கூட்டத்தின் முடிவில் பீகார் ஆளுநரான ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பீகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.

     71 அகவையுள்ள உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிறந்த ராம்நாத் கோவிந்த், வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ்-இல் தீவிரமாக இயங்கிய அவர், இருமுறை பாராளுமன்ற உறுப்பினராக, பாஜகவின் தாழ்த்தப் பட்டோர் பிரிவான தலித் மோர்ச்சாவின் தலைவராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் பீகார் ஆளுநராக ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார்.

     பழங்குடியின மக்கள் அதிகமுள்ள மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அதனை கருத்தில் கொண்டு இந்த முடிவை பாஜக எடுத்துள்ளது என்றும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்ததன் மூலம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.