மாட்டிறைச்சி
தடை தொடர்பான நடுவண் அரசின் உத்தரவை, மேற்கு வங்கத்தில் அமல்படுத்த முடியாது என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத்
தெரிவித்துள்ளார். மோடி
அரசு, சில நாள்களுக்கு முன்பு கால்நடை வர்த்தகத்துக்கான விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்தது.
அதன்படி, இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்று குட்டி, எருமை,
ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த உத்தரவின்படி,
இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடுவண்
அரசின் இந்த உத்தரவுக்கு, கேரள முதல்வர் பினராய் விஜயன் முதல் ஆளாகத் தன் எதிர்ப்பைப்
பதிவுசெய்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக
பிரதமர் மோடியுடன் கலந்தாலோசிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து,
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் போர்க்கொடி தூக்கியுள்ளார். மேற்கு
வங்காளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, ‘நடுவண் அரசின் மாட்டிறைச்சித்
தடையை எங்களால் ஏற்க முடியாது. இந்த உத்தரவை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்.
இந்த உத்தரவு ஜனநாயகத்துக்கு எதிரானது. நியாயமற்றது. மாநில அரசின் உரிமையைப் பறிக்கும்
செயல். ரம்ஜான் மாதத்தின் துவக்கத்தில் ஏன் இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.
ஒருவரின் உணவில் தலையிடும் உரிமை அரசுக்குக் கிடையாது’
என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.