பாமர உழவர்கள் பெயரில் கார்ப்பரேட்டுகள் கடன் வாங்க முடியும்! என்று நிரூபித்தவர் தொழிலதிபர் பப்பு சிங். கொடுத்திருக்கிறது இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி, வாங்கியது 87உழவர்கள் பெயரில். 18,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி (ஐடிபிஐ வங்கி லிமிடெட்) இந்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியாகும். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வங்கி இந்திய தொழில் வளர்ச்சியை மேம்படுத்த கடன்கள் மற்றும் இதர நிதி வசதிகளை வழங்குவதற்காக, தமிழ்தொடர்ஆண்டு-5066ல் (ஆங்கிலம்1964) பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டதாகும். இவ்வங்கி இந்தியாவில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த உருவாக்கப்பட்ட வங்கியாக இருந்தாலும், இது மற்ற வணிக வங்கிகளைப் போலவும் செயல்படுகிறது. இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி, தற்போது இந்தியாவில் 1513 கிளைகள், துபாயில் ஒரு வெளிநாட்டுக் கிளை, சிங்கப்பூர் மற்றும் பெய்ஜிங்கில் இரண்டு வெளிநாட்டு மையங்கள் உட்பட மொத்தமாக 1013 மையங்கள் மற்றும் 2713 பணம்வழங்கும் இயந்திரங்களுடன் உலக அளவில் 10 ஆவது இடத்தில் இருக்கும் தொழில் மேம்பாட்டு வங்கியாகும். இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட, இந்திய அரசுக்குச் சொந்தமான 26 வணிக வங்கிகளுள் இதுவும் ஒன்றாகும். விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கியில் முறைகேடாக கடன்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அந்த வங்கி அதிகாரிகள் மீது இந்தியக் குற்றப்புலனாய்வுத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த வழக்கு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. தொழிலதிபர் பப்பு சிங் என்பவர் ஒருவர் மட்டுமே கோடிக்கணக்கில் வேளாண் கடன் பெற்று மோசடி செய்திருப்பதை இந்தியக் குற்றப் புலனாய்வுத்;துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தொடர் விசாரணையில் பப்பு சிங், 87 உழவர்கள் பெயரில் ரூ.69.46 கோடி அளவுக்குக் கடன் வாங்கியிருப்பது தெரியவந்தது. உழவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பப்பு சிங்கின் கணக்குக்கு பணம் மாற்றப்பட்டு, அதை சொந்தத் தொழில் முதலீடாக அவர் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை, மீன் வளர்ப்புத் தொட்டிகள் உள்ளிட்ட ரூ.51 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியிருக்கிறது. இதில் ரூ.35.70 கோடி மதிப்பிலான காலி மனைகள், மீன் தொட்டிகள், கோழிப்பண்ணை உள்ளிட்டவைகளும் பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருப்பு வைத்திருந்த பணம் ரூ.15.73 கோடியும் அடங்கும் என அமலாக்கத் துறை தெரிவித்திருக்கிறது. இந்த மோசடி ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,385.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.