காவிரி ஆற்றுநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் மீதான இறுதி விசாரணை நேற்று முடிவடைந்தது. உச்ச அறங்கூற்று மன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி அரசுகள் உச்ச அறங்கூற்று மன்றத்தில் பதிகை செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை அறங்கூற்றுவர்கள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வந்தது. தமிழக அரசு தரப்பிலான வாதங்கள் கடந்த ஆகஸ்டு 2ல் தொடங்கி, இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை 28 நாட்களுக்கு வெவ்வேறு நாட்களில் நடைபெற்றன. இந்த வழக்கின் மீதான இறுதி வாதங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. தமிழக அரசு தரப்பில் அணியமான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே நேற்று தன்னுடைய இறுதி வாதத்தின் போது கூறியதாவது: தமிழ்நாட்டில் இரண்டு சாகுபடிக்கான பாசனத்தை காவிரி நடுவர் மன்றம் அனுமதிக்கவில்லை. இதனால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, உச்ச அறங்கூற்று மன்றம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இதனை மாற்றி அமைக்க வேண்டும். தங்கள் அணைகளில் இருந்து கர்நாடகம் ஒவ்வொரு மாதமும் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உச்ச அறங்கூற்று மன்றம் வழிவகை செய்யவேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை தண்ணீர் திறந்து விடும் அந்த மாநிலத்தின் கோரிக்கையை ஏற்கக் கூடாது. காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேலாண்மை திட்டத்தில் உச்ச அறங்கூற்று மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாராளுமன்றம் மேற்கொள்ள உச்ச அறங்கூற்று மன்றம் ஒதுபோதும் அனுமதிக்கக்கூடாது. அவர் இவ்வாறு கூறியதும் நடுவண் அரசின் சார்பில் அணியமான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் குறுக்கிட்டு, காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவை திருத்தவோ அல்லது அதில் சில நிபந்தனைகளை சேர்க்கவோ பாராளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று கூறினார். இதைத்தொடர்ந்து, அனைத்து தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்கள், முக்கிய அம்சங்கள் மற்றும் நீர் மேலாண்மை நிபுணர்களின் கருத்துகள் ஆகியவற்றை எழுத்து வடிவில் பதிகை செய்யுமாறு உத்தரவிட்ட அறங்கூற்றுவர்கள், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.