பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள நிதிஷ்குமார், தனது முதல்வர் பதவியை விட்டு விலகியுள்ளார். உடனடித் திட்டமாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார். 24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள நிதிஷ்குமார், தனது முதல்வர் பதவியை விட்டு விலகியுள்ளார். உடனடித் திட்டமாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். பீகாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இவ்விரு கட்சிகளுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் வெளிப்பாடாக தலைமைஅமைச்சர் மற்றும் ஒன்றிய அரசின் நிகழ்ச்சிகளை, நிதிஷ்குமார் தொடர்ந்து புறக்கணித்து வந்தார். அண்மையில் தலைமைஅமைச்சர் தலைமையில் நடந்த இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவன நிகழ்ச்சியையும் நிதிஷ்குமார் புறக்கணித்தார். மேலும், பாஜக தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் இனி சேரப்போவது இல்லை என ஐக்கிய ஜனதா தளம் அறிவித்தது. இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் பகு சவுகானை சந்தித்த நிதிஷ்குமார், முதல்வர் பதவியை விட்டு விலகுவதற்கான மடலை அளித்தார். இதனையடுத்து பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முறிந்தது. 'ஒன்றிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் உள்ளனர். இதனால் முதல்;வர் பதவியில் இருந்து விலகினேன்' என்றார் நிதிஷ்குமார். பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் உடன் சேர்ந்து ஆளுநரைச் சந்தித்தார் நிதிஷ்குமார். மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்தின் பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை விட அதிகமான இடங்களுடன் ஐக்கிய ஜனதாதளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்த கூட்டணி புதிய ஆட்சியை அமைக்க உள்ளது. இக்கூட்டணிக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,335.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.