Show all

மத்திய பிரதேச மாநிலம் விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு 5விவசாயிகள் பலி

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கு சிறந்த கொள்முதல் விலை அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தில் கடந்த 1-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  பால் மற்றும் காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

     இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சார் என்ற இடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தைக் கைவிடும்படி வலியுறுத்தினர். போராட்டத்தைக் கைவிட விவசாயிகள் மறுத்து விட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் கண்ணீர் புகை வீசி கூட்டத்தை கலைத்தனர். அப்போது கூட்டத்தில் திடீரென  துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அதில் 5 விவசாயிகள் பலியாகினர்.

     துப்பாக்கிச்சூடு நடைபெற்று விவசாயிகள் பலியாகியுள்ள சம்பவம் அங்கு மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, ரட்லாம், நீமுச் மற்றும் மண்டாசாவூர் பகுதிகளில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

     உஜ்ஜைன் பகுதி காவல்துறை ஆணையர் ஒஎம் ஜா விவசாயிகள் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 2 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், அதில் 2 பேர் பலியானதாகவும் சிலர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

     காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ள அங்குள்ள விவசாயிகள் சங்கத்தினர், நாளை மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

     இந்தச் சம்பவத்திற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தனது கீச்சு பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, விவசாயிகளுடன் இந்த அரசாங்கம் போரில் ஈடுபட்டுள்ளதாக கடுமையாக சாடியுள்ளார்.

     ஆனால், முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். வன்முறை போராட்டத்திற்கு காங்கிரஸ் சதி செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு முயற்சித்துள்ளனர். துரதிருஷ்டவசமான இந்தச் சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இந்த அரசு விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்கிறது என்று சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.