இந்தியாவில் கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சிக்கு முனையும் கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் ஆதிக்கக் கட்சிகளாக நடைபோட்டு, மாநில ஆட்சிகளுக்கு முனையும் கட்சிகளின் அமைச்சர்கள் மீது மட்டுமே சட்ட நடவடிக்கை முன்னெக்கப் பட்டு வரும் நிலையில், ஒன்றிய அமைச்சர் அடாவடிப் பேச்சால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதை நல்லதொரு மாற்றமாக நாடு கொண்டாடுகிறது. 09,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சிக்கு முனையும் கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் ஆதிக்கக் கட்சிகளாக இந்தியாவில் நடைபோட்டு வந்தன. மாநில ஆட்சிகளுக்கு முனையும் கட்சிகளின் அமைச்சர்கள் மட்டுமே சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படுவது மரபாய் இருந்து வருகிறது. ஐந்து மாநிலத் தேர்தல்களில் ஒன்றிய ஆட்சிக்கு முனையும் கட்சியும், ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியுமான பாஜகவின் தோல்விக்குப் பிறகு மாநில ஆட்சிக்கு முனையும் கட்சிகள் வலுப்பெற்று வருவது இந்தியாவில் நல்ல வகை மாற்றங்களாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஒன்றிய அமைச்சர்கள் அனைவரும் சொந்த மாநில மக்களிடம் தங்கள் அடையாளத்தைக் காட்டுவதற்காக ‘மக்கள் ஆசி யாத்திரை’யை கட்சித் தலைமை அறிவுரையின் கீழ் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே, நேற்று இந்த வகைப் பயணத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாடு விடுதலை அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பதை முதல்வர் உத்தவ் தாக்கரே மறந்துவிட்டார். பக்கத்தில் இருப்பவரிடம் அந்த விவரத்தை கேட்டுப்பெறுகிறார், நான் மட்டும் அங்கிருந்தால் அவரை கன்னத்தில் அறைந்திருப்பேன் என்று பேசினார். இந்த அடாவடிப் பேச்சு மகாராஷ்டிரா முழுவதும் சிவ சேனா தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை கண்டித்து அக்கட்சித் தொண்டர்கள் ஆங்காங்கே போராடி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து அவதூறாக பேசியதாக ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே மீது மாநிலம் முழுதும் பல காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து புனே மற்றும் நாசிக்கில் உள்ள காவல்நிலையங்களில் முதல்தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில், தான் கைது செய்யப்படுவதை தவிர்க்க அவர் முன் பிணை கோரினார். மேலும் மும்பை உயர்அறங்கூற்றுமன்றத்தில் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டுமெனவும் கோரினார். இந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை மகாராஷ்டிர காவல்துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முதல் ஒன்றிய அமைச்சராகியிருக்கிறார் அவர். நாராயண் ரானே கைது குறித்து நாசிக் காவல் தலைவர் தீபக் பாண்டே கூறுகையில், ஒன்றிய அமைச்சர் நாராயண ரானே அறங்கூற்றுமன்றத்தில் அணியப்படுத்தப்படுவார் எனவும் அடுத்த நடவடிக்கை அறங்கூற்றுமன்ற உத்தரவின் அடிப்படையில் இருக்கும் என்றார். மேலும் நாராயண் ரானே மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் அவருடைய கைது நடவடிக்கை குறித்து மாநிலங்களவை தலைவரான வெங்கய்ய நாயுடுவிடம் தெரிவிக்கப்படும் என்றார். அறுபத்தொன்பது அகவை நாராயண் ரானே மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர். அவர் தற்போது இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சராக பணியாற்றி வருகிறார். அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு முன்பு, ஜூலை 2005 வரை சிவசேனா உறுப்பினராகவும், விதான் சபாவின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். அவர் செப்டம்பர் 2017 இல் காங்கிரஸை விட்டு வெளியேறி மகாராஷ்டிரா சுவாபிமான் பக்ஷாவைத் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டில், அவர் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவை அறிவித்தார், மேலும் பாஜக பரிந்துரையின் பேரில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 15 அக்டோபர் 2019 அன்று, அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் மற்றும் அவரது கட்சியான மகாராஷ்டிரா சுவாபிமான் பக்ஷாவும் பாஜகவில் இணைக்கப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.