தர்பார் படத்தில் வெளிநாட்டு இசைக் கலைஞர்களை அதிகளவில் பயன்படுத்திய புகாரில், இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், என்று திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம், வரும் வியாழக்கிழமை வெளியாகிறது. இந்நிலையில், தர்பார் படத்தில் உள்ளூர் இசைக் கலைஞர்களுக்கு குறைந்தளவே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. தர்பார் படத்திற்கு 450க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இதில் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் இருந்து 5 பேருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. சங்கத்தில் இருக்கும் இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு தராததால் அனிருத்துக்கு இசையமைப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இசைக்கலைஞர்கள் சங்கத் தலைவர் தினா, பெரிய நடிகரின் படத்திலேயே, உள்ளூர் இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது, வருத்தமளிப்பதாக கூறினார். தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட படத்திற்கு, வெளிநாட்டில் உள்ளவர்களை வைத்து பணி செய்தால், தாங்கள் என்ன செய்வது என கேள்வி எழுப்பியுள்ள தினா, அனிரூத் போன்றவர்கள் இந்த தவறை செய்திருக்க கூடாது என்றும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பேட்ட படத்தின் போதே இசையமைப்பாளர் அனிருத்திடம் சங்கத்தில் இருக்கும் இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறினேன். அவர் சம்மதம் தெரிவித்துவிட்டு, அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று கூறினார். ஆனால், தர்பார் படத்தின் போது சங்க கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தரவில்லை. மேலும் இந்த சேதி ரஜினி அவர்களுக்கும் தெரியும். இதனால், ரஜினி மற்றும் அனிருத்துக்கு திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் சார்பாக கண்டனத்தை தெரிவிக்கிறோம்’ என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,388.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.