கார்த்திகேயன் அவர்களைச் சந்தித்தபோது அவர் கேட்ட முதல் கேள்வி “நீங்கள் தமிழ்ப் பெண்ணா?” என்பதுதான். ஒரு கணம் நான் யோசித்தேன். ஏன் என்றால் நான் வாய்ப்பு கேட்டுப் போன போதெல்லாம் தமிழ் பெண் என்பதனால் தான் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி தொடர்கிறார் நடிகை ரியா தன் அனுபவங்களை. 08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ‘மேகி’ என்கிற மரகதவல்லி திகில் படமாக உருவாகி வரும் தமிழ்ப்படம் ஆகும். இப்படத்தில் கதைத்தலைவியாக முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகை ரியா. கூறுங்களேன் நீங்கள் பேயாக நடித்த அனுபவங்களை; அதுவும் முதல் படத்திலேயே, என்று கேட்டபோது, மகிழ்ச்சியோடு தனது அனுபவங்களைப் பகிர்கிறார் ரியா. எனக்கு சிறுஅகவையில் இருந்தே திரைப்படம் என்றால் மிகவும் விருப்பம். நியை நிறைய படங்கள் பார்ப்பேன். விளம்பரஅழகாளராக (மாடலிங்) தோன்றி நடிக்க வேண்டும் என்று ஆர்வம் எனக்கு. பனிரெண்டாம் முடித்த பின் என் விருப்பத்தை அம்மாவிடம் கூறினேன் .அவர் இதற்கு உடன்படவில்லை. எப்படியாவது என்னைத் திசை மாற்ற வேண்டுமென்று “நீ ஒரு பட்டம் முடித்து விட்டு வா. அப்புறம் பார்க்கலாம்” என்றார். நானும் இயலறிவு இளவல் (பேட்சலர் ஆப் சயின்ஸ்) முடித்துவிட்டு அம்மாவிடம் கேட்டேன். ஆனால், மீண்டும் முதலில் முதுவர் பட்டத்தை முடிக்கப்பார்; படிக்கும் போது கவனச்சிதறல் வேண்டாம் என்று அறிவுரை சொன்னார்கள். நான் விடவில்லை. “படித்துக்கொண்டே நடிக்கிறேன் பரவாயில்லை” என்று கூறினேன். நான் ஒருபக்கம் படித்துக்கொண்டே திரைப்படத்தில் வாய்ப்பு தேடத் தொடங்கினேன். அப்படி நான் இயக்குநர் கார்த்திகேயன் அவர்களைச் சந்தித்தபோது அவர் கேட்ட முதல் கேள்வி “நீங்கள் தமிழ்ப் பெண்ணா?” என்பதுதான். ஒரு கணம் நான் யோசித்தேன். ஏன் என்றால் நான் வாய்ப்பு கேட்டுப் போன போதெல்லாம் தமிழ் பெண் என்பதனால் தான் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி வாய்ப்பு தேடி போகிற இடங்களில் நான் தமிழ்ப் பெண் என்றவுடன் வாய்ப்பு தரமுடியாது என்று சொல்லிவிடுவார்கள். இவரும் அந்தக் கேள்வியைத்தான் கேட்டார். இருந்தாலும் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று “ஆமாம். நான் தமிழ்ப் பெண் தான்” என்றேன். அவர் சிரித்தார். “தமிழ் பேசக்கூடிய ஒரு தமிழ்ப் பெண்ணைத்தான் என் படத்திற்கு தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றார். என்னால் நம்ப முடியவில்லை. திரைப்படத்தில் தமிழ்ப்பெண் யாருக்கும் வாய்ப்பு கொடுப்பதில்லை எப்படி இது என்று ஆச்சரியமாக இருந்தது. இரண்டு நாளில் மீண்டும் அழைத்து ‘மேகி’ படத்தின் கதையைக் கூறினார். இது ஒரு திகில் படம். எனக்கான வேடத்;தைப் பற்றிக் கூறியபோது எனக்கு ஒரு பக்கம் வியப்பு, இன்னொரு பக்கம் மகிழ்ச்சி. ஏன் என்றால் அதில் நான் பேயாக வருகிறேன். இப்படி நான் படத்தின் முதன்மைப் பாத்திரமாக இருப்பதில் மகிழ்ச்சி. பிறகு மளமளவென படப்பிடிப்பு தொடங்கியது. கொடைக்கானல் சென்றோம். அங்கே 15 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பேயாக நடிப்பது என்றவுடன் கோரமாக ஒப்பனை எல்லாம் செய்துவிடவில்லை. நான் நானாகவே வருவேன். ஆனாலும் பயமுறுத்தும்படி அப்படிக் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர். படப்பிடிப்பு நாட்கள் என்னால் மறக்க முடியாதவை. படத்தில் வருபவர்கள் பெரும்பாலும் எல்லோருமே புதுமுகங்கள். சிலர் மட்டுமே அனுபவம் உள்ளவர்கள். அவர்கள் எனக்கு படப்பிடிப்பு கருவி முன் எப்படி நிற்க வேண்டும், அதை எப்படி பார்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள்; மிகவும் உதவியாக இருந்தது. இயக்குநர் கார்த்திகேயன் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தினார். அவரே தயாரிப்பாளராக இருந்ததால் தேவையற்ற செலவுகள் தவிர்க்கப்பட்டன. படக்குழுவினரை இயல்;பாக இருக்க வைத்தார்கள். அனைவரும் நட்புடனும் பழகினர். கல்லூரிக்கு சென்று வந்த ஒரு உணர்வை ஏற்படுத்தியது எனக்கு. நல்லதொரு நடிப்பு வாய்ப்பாகவும் அந்தப் பட அனுபவம் இருந்தது. அது மட்டுமல்ல தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் அப்போது தான் திரைப்படத்தில் நிலைக்க முடியும் என்கிற தெளிவையும் கொடுத்தது. இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை நான் கனவு கண்ட திரைப்படத்தில் நானும் ஒரு வாய்ப்பு பெற்று அதுவும் ஒரு படத்தின் முதன்மையான வேடமான கதைத்தலைவியாக அறிமுகமாகி இருக்கிறேன் என்று நினைத்தால் நம்ப முடியவில்லை என்கிறார். ‘மேகி’ என்கிற மரகதவல்லி தமிழ்த் திரைப்படம், குறைந்த திரையரங்குகளில் வெள்ளிக் கிழமை அன்று வெளியாகி, படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘மேகி’ என்கிற மரகதவல்லி தமிழ்த் திரைப்படம் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,346.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.