அறுபத்தியொன்பது அகவை நடைபெறும் பேரறிமுக நடிகரும் இயக்குநருமான மனோபாலா உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார். அவர்தம் மெய்யால், பெருவெடி வரை பலபிறவிகள் எடுத்துத் தொடரவும், அவர்தம் உயிரால் அவரைத் தேடியிருக்கும் அனைவருக்கும் பட்டறிவு நூலாக பயனாற்றவும் தமிழியல் அடிப்படையில் வாழ்த்தி அமைகிறோம். 21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5125: பேரறிமுக நடிகரும் இயக்குநருமான மனோபாலாவிற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதற்காக ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கல்லீரல் சிக்கல் ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்ற அவர், கடந்த சில நாட்களாக தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று இறப்பு எய்தினார். அவர் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. கொண்டாடிகள், திரையுலகினர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு இன்று காலை நடக்கிறது. மறைந்த மனோபாலாவுக்கு உசா என்ற மனைவி ஹரீஷ் என்ற மகன் உள்ளனர். பாரதிராஜாவிடம் 'புதிய வார்ப்புகள்' படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்த மனோபாலா, கார்த்திக் நடித்த 'ஆகாய கங்கை' படம் மூலம் இயக்குநர் ஆனார். தொடர்ந்து மோகன் நடிப்பில் 'பிள்ளை நிலா' படத்தை இயக்கினார். இது அவருக்கான வெற்றி படமாக அமைந்தது. அடுத்த 'சிறைப்பறவை', ரஜினி நடித்த 'ஊர்க்காவலன்', விஜயகாந்த் நடித்த 'என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்', சத்யராஜ் நடித்த 'மல்லுவேட்டி மைனர்', ஜெயராம் நடித்த 'நைனா' உட்பட 24 படங்களை இயக்கியுள்ளார். 'சதுரங்கவேட்டை', 'பாம்புச் சட்டை', 'சதுரங்கவேட்டை 2' படங்களைத் தயாரித்துள்ளார். முன்னூறுக்கும் அதிகமான திரைப்படங்களில் நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தொடக்கத்தில் சிறிய வேடங்களில் தலைகாட்டி வந்த அவர், கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய 'நட்புக்காக' படத்துக்குப் பிறகு முழு நேர நடிகரானார். பிதாமகன், பாய்ஸ், காதல் கிறுக்கன், பேரழகன், கஜினி, தலைநகரம், இம்சை அரசன் 23ம் புலிகேசி, சந்திரமுகி, கலகலப்பு உட்பட பல படங்களில் அவர் நடிப்பு பேசப்பட்டது. சிவாஜி, ரஜினியில் தொடங்கி இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுடனும் நடித்துள்ளார். சில சின்னத்திரைத் தொடர்களை இயக்கியுள்ள அவர், அதிலும் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வலையொளியிலும் பேரறிமுகங்களைப் பேட்டி எடுத்து வந்தார். மறைந்த மனோபாலாவின் உடலுக்கு ஒளிப்பதிவாளர் பி.சி.ராம், நடிகர்கள் சிவகுமார், விஜய், சித்தார்த், நட்டி என்கிற நட்ராஜ், ஆர்யா, இயக்குநர்கள் சந்தானபாரதி, மணிரத்னம், விக்ரமன், ஏ.ஆர்.முருகதாஸ், ஹெச்.வினோத், சுசீந்திரன், விஜய், மோகன், தாமு, மோகன்ராம், ஆர்.கே.செல்வமணி, கே.எஸ்.ரவிகுமார் உட்பட ஏராளமானோர் நேரில் வந்து இரங்கல் தெரிவித்தனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,603.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.