விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்கு பருவங்களில் பல பேரறிமுகங்களை வைத்து செய்தாகிவிட்ட நிலையில் தற்போது ஐந்தாவது பருவம் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. 17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: புறம் பேசுவதைக் கொண்டாடுவதற்கு ஒரு பேரளவான நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் என்ற தலைப்பில் நான்கு பருவங்களை நடத்தி முடித்து, பல பேரறிமுகங்களை வைத்து செய்திருக்கிறது விஜய் தொலைக்காட்சி. திருவள்ளுவர் புறங்கூறாமைக்கு ஓர் அதிகாரமே ஒதுக்கி அதற்கு பத்துக் குறள்களை ஒதுக்கியிருக்கிறார். கமல் உறுதியாக இந்தக் குறள்களைப் படித்திருப்பார் என்றே நம்பலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் அவர்களை தமிழ்ச்சமுதாயத்தின் முன் மாதிரிகளாக திகழச் செய்வதற்கும் இந்த நிகழ்ச்சியை அரசியலிலும் களம் கண்டுவரும் கமல், பயன்படுத்தினால் அது மாபெரும் கலைத்திறனாக உறுதியாகத் தமிழ்மக்களால் கொண்டாடப்படும். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்கு பருவங்களில் பல பேரறிமுகங்களை வைத்து செய்தாகிவிட்ட நிலையில் தற்போது ஐந்தாவது பருவம் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இன்று காலை விஜய் தொலைக்காட்சியின் கீச்சுப் பக்கத்தில் ஐந்தாவது பருவம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் முன்னோட்டக் காணொளி வெளியாகி விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இதில், கமல்ஹாசன் தொடங்கலாமா என்று கூறுவதுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 வது பருவத்தின் இலச்சினையை அறிமுகம் செய்தார். இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என்பது உறுதி செய்யப்பட்டது. அனேகமாக அடுத்த முப்பதாவது நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்றும் அதனை அடுத்து 100 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை வேறுபாடாக தேர்வு செய்ய விஜய் தொலைக்காட்சி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள பிக்பாஸ் பார்வையாளர்களால், பிக்பாஸ் குறித்த கருத்துப்படங்கள் வெளியிடப்பட்டு இன்று இணையதளத்தில் தலைப்பாக்கப்பட்டு வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.