Show all

எந்தக் குழப்பமான உண்மையை பெரும்பாலான மக்கள் புறக்கணிக்கிறார்கள்?

எந்த குழப்பமான உண்மையை பெரும்பாலான மக்கள் புறக்கணிக்கிறார்கள்? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிப்பதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: வாழ்க்கை மிக மிக எளிதானது என்பது நூறு விழுக்காடு உண்மை. ஆனால் இதை யாருமே ஒப்புக்கொள்ளாமல் குழப்பிக் கொள்கிறோம், அல்லது குழம்பித் தவிக்கிறோம். 

பிறந்த குழந்தை மூன்று அகவையில் நன்றாக நடந்து விடுகிறது. ஐந்து அகவையில் தன் எண்ணமொழியைக் கருத்து மொழியாக்கி அழகாக பேசுகிறது. ஒவ்வொரு மனிதனும் சிறப்பாக இயங்க இந்த நடையும் இந்த மொழியும் போதுமானது.

இந்த வகைக்கு, நாம் நமது குழந்தைகளுக்குத் தரவேண்டியது அடிப்படை தேவையான உணவு, உடை, இருப்பிடம் மட்டுமே. அனைவருமே இந்த உணவு, உடை, இருப்பிடம் என்கிற மூன்றுக்கு மட்டுமே இயங்கினால் போதுமானது. மனிதன் வரையிலான உயிரிகள் இதை மட்டுமே செய்து காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இப்படி மிக மிக எளிமையாக இல்லாமல், மனித வாழ்க்கையைச் சிக்கலாக்குவதற்கு நிறைய விடையங்கள் மனிதனில் தோன்றுவதாக நாம் நமது பெற்றோர்களால் மற்றும்  முன்னவர்களால், எச்சரிக்கப்படுகிறோம்; வழிநடத்தப்படுகிறோம். ஆனால், மனிதனில் தொடருகிற எதுவுமே சிக்கல் இல்லை! 

எனினும், அறிவுதான் சிக்கல் என்று ஒருவரும், ஆசைதான் சிக்கல் என்று ஒருவரும், பொய்தான் சிக்கல் என்று ஒருவரும், ஒழுக்கமின்மையே சிக்கல் என்று ஒருவரும், சோம்பலே சிக்கல் என்று ஒருவரும் ஆயிரம் ஆயிரம் அனுபவங்களை சுமந்து கொண்டு அதை அடுத்த தலைமுறைகளுக்கு கற்பிக்கிறார்கள்.

அதில் இருந்து மீள்வதற்கு வழிகாட்டுகிறார்கள்- வழிகாட்டலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள்- வழிகாட்டலுக்கு கூட்டம் சேர்க்கின்றார்கள்- வழிகாட்டலை சட்டம் ஆக்குகிறார்கள்- மீறுகிறவர்களைத் தண்டிக்கிறார்கள்- தண்டனையில் இருந்து தப்புவிக்க இலஞ்சம் கேட்கிற உள்வட்டம் அமைக்கப்படுகிறது- சட்டஅமைப்பை நிருவகிக்க வரி கேட்கிறார்கள். இப்படித்தான் தங்கள் அறிவைத் தூக்கிப் பிடிக்கிற வழிகாட்டியிடம் தொடங்குகிறது நம்முடைய வாழ்க்கைக்கான சிக்கல்.

உலகினர் அனைவரும் தனிமனித வழிகாட்டிகள் முன்னெடுத்த மதம் மற்றும் அரசியல் கோட்பாட்டை மட்டுமே அறிவு என்று கருதி இயங்கிக் கொண்டிருக்கின்றனர். 

அதற்குப் பிறகான மனிதனின் அனைத்து சிந்தனைகளையும் கருவிகள் வடிக்க மட்டுமே ஒப்புக் கொள்கின்றனர். அதற்கான கல்வியில், படைப்பாற்றலில், படைப்பாற்றல் துறையில் ஆசிரியர்கள் மட்டுமே அமைந்து நம்முடைய அறிவால் நாம் மாண்புகளை ஆக்கிக்கொள்ள புரிதலை மட்டுமே வழங்கி வந்திருக்கின்றனர்.

இந்தியாவில் அந்தக் கல்வித்துறையில் நுழைவதற்கும் நீட், நுழைவுத் தேர்வுகள் என்று தடையிருப்பது அறிவை முடமாக்கும் வகைக்கான மிகப் பெரிய வேடிக்கையாகும்.

படைப்பாற்றல் துறையில் ஆசிரியர்கள் மட்டுமே அமைந்து நம்முடைய அறிவால் நாம் மாண்புகளை ஆக்கிக்கொள்ள புரிதலை மட்டுமே வழங்கி வந்ததால் கிடைத்திட்ட சக்திவாய்ந்த இயந்திரங்கள், வாகனங்கள், கணினி உள்ளிட்ட கருவிகள் ஒவ்வொன்றும் நூறு, ஆயிரம் என்று பலகோடி மக்களின் வேலையைச் செய்து மனித உழைப்பை எளிமை ஆக்குகின்றன. ஏராளமான செல்வத்தையும் வளர்ச்சியையும் குவிக்கின்றன. 

ஆனால் ஏராளமான செல்வத்தையும் வளர்ச்சியையும், மக்களோடு மக்களாக பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதற்கே இந்த மதம் மற்றும் அரசியல் கோட்பாடுகள் தங்களை அதிகாரப்படுத்திக் கொள்கின்றன. அந்த உழைப்பெளிமை உள்நாட்டளவிலும், வெளிநாட்டளவிலும் கடனாக வழங்கப்பட்டு, வட்டி தண்டப்படுகிற அவலத்தை முன்னெடுக்க இந்த மதம் மற்றும் அரசியல் கோட்பாடுகள் தங்களை அதிகாரப்படுத்திக் கொள்கின்றன.

ஒரு ஊரின் வளமையை முறையாகப் பகிர்ந்தால் ஏழைகள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. ஒரு மாவட்டத்தின் வளமையை முறையாகப் பகிர்ந்தால் ஏழைகளின் தகுதி இன்னும் கொஞ்சம் மேம்படும். ஒரு மாநிலத்தின் வளமையை முறையாகப் பகிர்ந்தால் பெரும்பாலும் அனைவரும் சிறு சிறு பணக்காரர் ஆகும் வாய்ப்பு கிட்டும். 

ஒரு நாட்டின் வளமையை முறையாகப் பகிர்ந்தால் தனிமனிதத் பொருளாதாரத் தகுதி இன்னும் மேம்படும். ஒட்டு மொத்த உலகத்தின் வளமையை முறையாகப் பகிர்ந்தால் மனிதனில் தொடருகிற எதுவுமே சிக்கல் இல்லை! என்று ஆகிவிடும்.

தம்மின் தம்மக்கள் அறிவுடைமையை உலகில் தமிழ்முன்னோர் மட்டுமே நிறுவியிருக்கின்றனர். தமிழ்முன்னோர் ஆசிரியராக மட்டுமே நடந்து நம்முடைய அறிவால் நாம் மாண்புகளை ஆக்கிக்கொள்ள புரிதலை மட்டுமே வழங்கியிருக்கின்றனர். இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டு நடைமுறை.

ஆனால் இன்றைக்கு அனைத்து தமிழர்களின் அறிவை தமிழ்கோராவில் மட்டுமே பார்க்க முடிகிறது! சமூக வலைதளங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது! சிற்றிதழ்களில் மட்டுமே பார்க்க முடிகிறது! அறிவை கல்விச்சாலைக்குக் கொண்டுபோகத்தடை. சின்ன சின்னதாக நிறுவனம் தொடங்க தடை. சின்ன சின்னதாக வணிகம் புரியத் தடை. ஆண்டுக்கு இரண்டரை இலட்சம் மட்;டுமே வருமானம் ஈட்டவேண்டும் என்று பொருளாதாரத்தின் மீதான தீண்டாமை பயிற்றுவிப்பு.

ஒன்றியத்தில் மதவழிகாட்டிகளை அப்புறப்படுத்தி, தம்மின் தம்மக்கள் அறிவுடைமையை கொண்டாடி, கூட்டுச்சிந்தனையில் சட்டமுறைமையை முன்னெடுத்தால், இந்தியாவில் மனிதனில் தொடருகிற எதுவுமே சிக்கல் இல்லை! என்கிற நிலையை நிறுவ முடியும்.

உலகம் முழுவதுமே மதம் மற்றும் அரசியல் கோட்பாடு வழிகாட்டிகளை அப்புறப்படுத்தி. தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடி, கூட்டுச்சிந்தனையில் சட்டமுறைமையை முன்னெடுத்தால், உலகிலும் மனிதனில் தொடருகிற எதுவுமே சிக்கல் இல்லை! என்கிற நிலையை நிறுவ முடியும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,352.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.