வாழ்க்கை சிறப்பாக (சூப்பராக) இருக்க என்ன செய்ய வேண்டும்? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிப்பதற்கு நான் உருவாக்கியது இந்தக் கட்டுரை. 11,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5125: எல்லோரின் வாழ்க்கையும் சிறப்பாகத்தான் இருக்கிறது. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்கிற கதையாக யார் யாருடைய வாழ்க்கை மட்டுமே சிறப்பாக இருக்கிறது என்று நீங்கள் கருதிக் கொள்கின்றீர்கள். நீங்கள் அடைந்த மகிழ்ச்சி அனைத்தையும் துலாக்கோளில் வைத்து அந்த சிறப்பான வாழ்க்கையரின் மகிழ்ச்சிகளையும் துலாக்கோளில் நிறுத்துப் பார்த்தால் இரண்டும் சமமாகவே இருக்கும். நீங்கள் அடைந்த பற்பல சிறுமகிழ்ச்சிகளைத் தள்ளுபடி செய்து விட்டு கணக்குப் போடுகின்றீர்கள். அவர்கள் நீங்கள் அடைந்த எந்த சிறுமகிழ்ச்சியையும் அடைந்திருக்காத காரணம் பற்றியே ஒரு தொகுப்பான பெரு மகிழ்ச்சியை அடைந்திருக்கிறார்கள். உங்களுக்குக் கிடைத்ததும் ஒரு கரும்புதான் அவர்களுக்குக் கிடைத்ததும் ஒரு கரும்புதான். நீங்கள் அடிக்கரும்பில் இருந்து சாப்பிட்டு நுனிக்கரும்பிற்கு வந்திருக்கின்றீர்கள். அவர்கள் நுனிக்கரும்பில் இருந்து சாப்பிட்டு அடிக்கரும்பிற்கு வந்திருக்கிறார்கள். நீங்கள் அடிக்கரும்பு சாப்பிட்ட சுவை நாக்கில் இல்லை. அதனால் நீங்கள் அடிக்கரும்பு சாப்பிட்ட பாட்டை மகிழ்ச்சியைத் தள்ளுபடி செய்துவிட்டு புலம்புகின்றீர்கள். உங்கள் புலம்பல் காரணம்பற்றி நெடுங்காலம் நீங்கள் நுனிக்கரும்பையே சாப்பிடும் வகைக்கு கடவுள் ஒருங்கிணைக்கப் போகிறது. அவர்கள் மகிழ்ச்சி காரணம்பற்றி நெடுங்காலம் அவர்கள் அடிக்கரும்பையே சாப்பிடும் வகைக்கு கடவுள் ஒருங்கிணைக்கப் போகிறது. புலம்பல் எதிர்காலத்தைச் சுழியம் ஆக்கும். மகிழ்ச்சி எதிர்காலத்தை எண்களால் நிறைக்கும். இந்த எல்லாச் செய்திகளும் தமிழ்முன்னோர் மூன்றாவது முன்னேற்றக்கலையாக நிறுவிய மந்திரத்தில் இருக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,593.