11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: என்னுடைய பெயர் நிலான். காவிரி கழனி பெருக்க மஞ்சள் விளைக்கும் மண் ஈரோடு, நான் பிறந்த ஊர். ஈரோடு கருங்கல்பாளையம் வாய்க்கால் பள்ளிக்கூடத்தில் என்னுடைய கல்வி தொடங்கியது. என்னுடைய பள்ளிக்கும் வீட்டிற்கும் இரண்டு கிமீ இருக்கும். எனது ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் பெயர் சாந்தி என்பது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. வீட்டில் பெண்கள் அமருவதற்கு பயன்படுத்துகிற மனைப்பலகை போல ஆறடி நிளமுள்ள மனைப்பலகை வகுப்பில், மாணவர்கள் அமருவதற்குப் போடப்பட்டிருக்கும். ஒன்றாம் வகுப்பில் தமிழ் எழுத்தின் முதல் எழுத்து “அ”கரம் கற்றுக் கொண்டது மறக்க முடியாத அனுபவம். அதே பள்ளியில் என் அக்கா விசயலட்சுமி இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள். என் அண்ணன் செல்வக்குமார் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். என் அக்காவும், அண்ணனும் நன்றாகப் படிக்கின்றார்களா என்று எங்கள் பெரிய அண்ணன் தர்மாங்கதன் அவர்கள் திடீர் ஆய்வு நடத்துவார். எனது அம்மாவும், அண்ணியும் மெதுவாக ஒதுங்கிக் கொண்டு விடுவார்கள். ஏனென்றால் எனது பெரிய அண்ணன் மீது ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் அப்படி ஒரு அச்சம். நிச்சயம் அண்ணன் செல்வக்குமாரும், அக்கா விசயலட்சுமியும் ஏதாவது ஒரு காரணத்தில் சிக்கிக் கொள்வார்கள். அப்போது அவர்களுக்கு என் பெரிய அண்ணன் கொடுக்கும் தண்டனை: சுவர் ஓரமாக, ‘இருக்கை அமர்வு ஓகத்தை’ நூறு எண்ணும் வரை செய்வது. அது எப்படி இருக்கும் என்றால், உட்பக்கம் இருக்கிற இரண்டு கால்களும் உடைந்த நாற்காலியை சுவரின் ஒத்துழைப்பில், நான்கு கால்களும் இருக்கிற நாற்காலி போல சுவருக்கு நெருக்கமாக வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி அமர வேண்டும். அவர்களின் மடியில் ஏதாவது ஒரு பொம்மையை வைத்து விடுவார் பெரிய அண்ணன். அந்த பொம்மை கீழே விழுந்து விடாமல், குத்துக்காலுக்கும் தொடைக்கும் செங்கோணத்தை பேண வேண்டும். அதே சமயம் தொடைக்கும் தொடைக்கு மேல் அமைந்த உடலுக்கும் செங்கோணத்தை பேண வேண்டும். அப்போதுதான் அவர்கள் மடியில் வைத்த பொம்மை கீழே விழாமல் இருக்கும். நூறு எண்ணும் வரை சுவர் ஓரம் அமர்ந்து பாருங்கள் கொடுமையாக இருக்கும். ஆனால் அது நல்லதொரு ஓக அமர்வுதான் என்று பிற்காலத்தில் புரிந்து கொண்டேன். இந்த மாதிரிதான் நானும் ஒரு முறை என் பெரியண்ணனிடம் சிக்கிக் கொண்டேன். அது நான் முதல் வகுப்பில் சேர்ந்திருந்த புதிது. கரும்பலகையில் அ வை எழுதி அதன் மீதே மீண்டும் மீண்டும் எழுதச் சொல்லி எனக்கு அ எழுதக் கற்றுக் கொடுத்தார் பெரியண்ணன். ஒரு பத்து இருபது நிமிடப் பயிற்சிக்குப் பின்னர் கரும்பலகையை முழுதாக அழித்து விட்டு என்னை அ போடச் சொன்னார். நான் தடுமாறினேன். இந்த சமயம் நான் சிறு அகவை குழந்தை என்பதால், என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்தோடு, என் அம்மாவும், அண்ணியும் கொஞ்சம் தூரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் அண்ணன் என் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார். அதே வேகத்தில் நான் அ எழுதி விட்டேன். நான் என் தாய்மொழி தமிழின் முதல் எழுத்தைக் கற்று கொள்வதற்கே பெரிய விலை கொடுத்ததாலோ என்னவோ எனது உடைமைகளில் தமிழ் மட்டுமே மிக உயர்ந்த மதிப்புள்ளதாக கடந்த ஐம்பத்தெட்டு ஆண்டுகளாக இந்தத் தற்பறை (வினாடியை விட சிறய கால அளவு) வரை, நான் போற்றிக் கொள்ளத் தக்கதாக என்னுள் இருந்து வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,289.