Show all

கணியன் பூங்குன்றனாருடன் சந்திப்பு

22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: இன்று அதிகாலை என் நண்பர் இளந்தமிழ்வேள் என்னை பேசியில் அழைத்தபோது, தூக்கம் விழிக்கா மனநிலையில் எதிர்மறைக் கோணத்தில், அவரை தவறாக, வழி நடத்திவிட்டதாக கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல் அடிப்படையில் என்னால் கொஞ்ச நேரத்திலேயே உணர முடிந்தது. 

உடனடியாக நண்பர் இளந்தமிழ்வேள் அவர்களைப் பேசியில் அழைத்து நான் தவறாக அவரை ஆற்றுப்படுத்திவிட்டது குறித்து அவரிடம் வருத்தம் தெரிவித்தேன். அவ்வாறு வருத்தம் தெரிவிக்க காரணமான கணியன் பூங்குன்றனாரின் செய்திக்கு  கணியன் பூங்குன்றனாரே ஒரு கலந்துரையாடல் மூலம் என்னை நேர்ப்படுத்துவதாக எண்ணி இந்த நாடகத்தை நான் வடிவமைத்திருக்கிறேன்.

காட்சி: ஒன்று.
இடம்: பூங்குன்றம், தமிழ்நாடு, கணியன் பூங்குன்றனாரின் இல்லம்.
காலம்: 22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-2402 (ஆங்கிலம்-கிமு.500)
பங்கு பெறுவோர்: நான், கணியன் பூங்குன்றனார், கணியன் பூங்குன்றனாரின் தலைவியார்.

கணியன் பூங்குன்றனாரின் தலைவியார்: (வாயிலிலிருந்து வீட்டிற்கு உள்ளே இருக்கும் கணியன் பூங்குன்றனாருக்குக் கேட்கும்படியாக) யாழ! எதிர் காலத்தைச் சேர்ந்தவர் போன்ற தோற்றத்துடன், தொங்கப் போட்ட முகத்துடன்,  புறநானூறு காலஇயந்திரத்தில், நம் வாயிலில் ஒருவர் வந்து இறங்கியிருக்கிறார். அவரை வரவேற்க தாங்கள் வெளியில் வருக.

கணியன் பூங்குன்றனார்: (வெளியே வந்து என்னை வரவேற்கும் முகமாக) வாரும் ஐயா வாரும்! என்ன இவ்வளவு காலம் பின்னோக்கி வந்திருக்கின்றீர்? 

நான்: ஐயா தங்கள் புறநானூற்றுப் பாடலில், ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று எழுதியுள்ளீர்களே அதற்கு பொருள் என்ன ஐயா? 

கணியன் பூங்குன்றனார்: உங்கள் தலையில் அமைந்த எலும்புகளின் பிணைப்புக் கோடுகளை, அயலினத்தைச் சேர்ந்த சில வழிகாட்டிகள், தங்கள்  உருவாக்கிய ‘மூலமுதல் படைப்பாளி’ எழுதிய எழுத்துக்கள் என்றும், அது உங்கள் வாழ்க்கை இப்படித்தான் நடக்கும் என்று ‘மூலமுதல் படைப்பாளி’ தீர்மானித்து எழுதிய எழுத்து என்றும்  நம்பவைக்கப்பட்டது தமிழ்மக்களிடம், உங்கள் காலத்தில் புரையோடிக்கிடக்கிறது. அது உண்மையல்ல. 
நம்மை யாரும் படைக்கவில்லை. நமக்கான தலையெழுத்தை நாம்தாம் எழுதிக் கொள்கிறோம், அதனால் நமக்கு வரும் நன்மைக்கும் தீமைக்கும் நாமே காரணம் என்று பொருள்.

நான்: இன்று அதிகாலை என் நண்பர் இளந்தமிழ்வேள் என்னை பேசியில் அழைத்து ஒரு வெற்றி குறித்து பேசிய போது, தூக்கம் விழிக்கா மனநிலையில் எதிர்மறைக் கோணத்தில், அந்த வெற்றி சாத்தியம் ஆகலாம் ஆகாமலும் போகலாம் இரண்டுக்கும் அணியமாக இருங்கள் என்று தெரிவித்து விட்டேன். அனால், உங்கள் புறநானூற்றுப் படல் அடிப்படையில், அவருக்கு தோல்வி வெளியில் இருந்து வர வாய்ப்பு இல்லையே! என்று அவரை தவறாக, வழி நடத்திவிட்டதாக என்னால் கொஞ்ச நேரத்திலேயே உணர முடிந்தது. இது அவரது வெற்றியை பாதிக்குமா என்று தங்களிடமே கேட்டு விடலாம் என்று வந்தேன் ஐயா.

கணியன் பூங்குன்றனார்: பிழையொன்றும் இல்லை. இதற்கான விடையைத் திருவள்ளுவர் தெளிவாகத் தெரிவித்து இருக்கின்றார். இவ்வளவு காலம் பின்னோக்கி வந்தீர்கள். இன்னும் கொஞ்ச காலம் முன்னோக்கிச் சென்றால் நீங்கள் திருவள்ளுவரைச் சந்தித்து விடலாம். அவரையும் நீங்கள் சந்தித்துச் சென்றால் இன்னும் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா? திருவள்ளுவரைச் சந்திக்க திருக்குறள் காலஇயந்திரம் கொண்டு வந்திருக்கின்றீர்களா? இல்லை நான் கொடுக்கவா?

நான்: தங்கள் விரிவுரைக்கு மிகுந்த நன்றி ஐயா! என்னிடம் திருக்குறள் காலஇயந்திரம் ஐந்தாறு இருக்கிறது. அதில் பாரதிதாசனாரின் தயாரிப்பில் வந்த திருக்குறள் காலஇயந்திரம் பல சிறப்புக் கூறுகளோடு அமைக்கப்பட்டது என்னிடம் உள்ளது ஐயா. அதன் மூலம் நான் திருவள்ளுவரைச் சந்திக்கிறேன் (என்று கூறி கணியன் பூங்குன்றனார் அவர்களிடம் இருந்து விடைபெற்றேன்.)

காட்சி: இரண்டு.
இடம்: மயிலாப்பூர், தமிழ்நாடு, திருவள்ளுவர் இல்லம்.
காலம்: 22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-3071 (ஆங்கிலம்-கிமு.31)
பங்கு பெறுவோர்: நான், திருவள்ளுவர், திருவள்ளுவரின் தலைவியார். 

திருவள்ளுவர்: (அன்னாந்து பார்த்தபடி) யாரது? 5123வது ஆண்டு திருக்குறள் என்று பெயரிட்டு ஒரு காலஇயந்திரம் வந்து கொண்டிருக்கிறதே! (நான் பயணித்த காலஇயந்திரம் திருவள்ளுவர் இல்லத்தின் முற்றத்தில் இறக்கியதும்) வாரும் ஐயா வாரும்! (இல்லத்தின் உள்ளே நோக்கி) தலைவியாரே நமது இல்லத்திற்கு எதிர்காலத்திலிருந்து ஒரு விருந்தினர் வந்துள்ளார். சிறிது மோர் கொண்டு வாருங்கள்! 

நான்: ஐயா வணக்கம்! உங்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. என் சிறிய ஐயத்திற்கு உங்களைச் சந்திக்குமாறு கணியன் பூங்குன்றனார் என்னை ஆற்றுப்படுத்தினார். உங்களிடம் விளக்கம் வேண்டி வந்துள்ளேன். 
இன்று அதிகாலை என் நண்பர் இளந்தமிழ்வேள் என்னை பேசியில் அழைத்து ஒரு வெற்றி குறித்து பேசிய போது, அமைதியற்ற ஒருமனநிலையில், எதிர்மறைக் கோணத்தில், அந்த வெற்றி சாத்தியம் ஆகலாம் ஆகாமலும் போகலாம் இரண்டுக்கும் அணியமாக இருங்கள் என்று தெரிவித்து விட்டேன். அனால், கணியன் பூங்குன்றனார் புறநானூற்றுப் படல் அடிப்படையில், அவருக்கு தோல்வி வெளியில் இருந்து வர வாய்ப்பு இல்லையே! என்று அவரை தவறாக, வழி நடத்திவிட்டதாக என்னால் கொஞ்ச நேரத்திலேயே உணர முடிந்தது. இது அவரது வெற்றியை பாதிக்குமா என்று கணியன் பூங்குன்றனார் அவர்களிடம் கேட்டு விடலாம் என்று சென்றபோது அவர் உங்களிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்தினார் ஐயா.

திருவள்ளுவர்: நல்லது நல்லது. நீங்கள் உங்கள் நண்பருக்கு எது சொல்லியிருந்தாலும் அவருடைய விதியை அவர்தானே அவருக்கான மென்பொருளாக எழுதி விசும்பு (கடவுள்) என்கிற வண்தட்டில் பதிவிடுகிறார். நீங்கள் மாற்றி வழிநடத்தியது உங்களுக்கான விதியாகத்தானே விசும்பு (கடவுள்) என்கிற வண்தட்டில் உங்களுக்கான மென்பொருளாகப் பதிவாகிறது. அந்தப் பதிவைத்தான் வருத்தம் தெரிவித்து நீங்களும் மாற்றிக் கொண்டு விட்டீர்களே. அதனால் உங்கள் நண்பர் தன்னுடைய விதியை எப்படி எழுதி அதில் திண்ணியராக இருக்கின்றாரோ அப்படித்தானே அவருக்கு வெற்றி சாத்தியமாகப் போகிறது. அதைத்தானே எனது திருக்குறளில் வினைத்திட்பம் என்கிற அதிகாரத்தில்
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
என்று எழுதியுள்ளேன்.
நீங்கள் உங்கள் நண்பரிடம் என்னையும் கணியன் பூங்குன்றனாரையும் சந்தித்த மகிழ்ச்சியைப் பதிவிட்டு நீங்கள் பெற்ற விளக்கத்தை அவருக்கும் தெரிவு படுத்துங்கள். (திருவள்ளுவருக்கும் எனக்கு மோர் வழங்கிய அவரது தலைவியாருக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றேன் நடப்பு 22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123 காலத்திற்கு.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.