Show all

அது ஒரு நிலான் காலம்-1

என்னுடைய பெயர் நிலான். நான் பிறந்தது ஒரு ஞாயிற்றுக் கிழமை. மார்கழி பதினேழாம் நாள், தமிழ்த் தொடர் ஆண்டு 5057ல். காவிரி கழனி பெருக்க மஞ்சள் விளைக்கும் மண் ஈரோடு, என்னை ஏற்றுக் கொண்ட ஊர். 

எனக்கு ஒன்றாம் அகவையில், என் தந்தையார் தெய்வத்திரு ஆனார். என் பெற்றோருக்கு நான் பத்தாவதாகப் பிறந்தவன். ஆனாலும் எனது ஒன்றாம் அகவையில் என்னோடு இருந்தவர்கள் இரண்டு அக்காள்; ஒருவருக்கு திருமணமாகி கணவன் வீடு சென்று விட்டார். மற்றொரு அக்காவிற்கு மூன்று அகவை. 

அண்ணன்கள் மூவர். மீதம் நால்வர் அப்பாவிற்கு முன்னமேயே தெய்வத்திரு ஆனவர்கள். அதில் அக்கா இருவர் அண்ணன் இருவர். 

அப்பாவின் பிரிவுக்கு பிந்தைய குடும்பத்தின் வருமானம்: பெரிய அண்ணன் ஓட்டுநர். தொடக்கத்தில் கார், பிறகு சுமையுந்து, பிறகு போக்குவரத்து உடைமையாளர் என்று வளர்ந்தவர். 

அம்மா கிடைக்கும் காட்டு வேலைகளுக்குச் செல்வார்; அவர்கள் பாரம்பரிய தொழில். பகுதி நேரமாக மருத்துவம் பார்ப்பார்; என் அப்பாவின் பாரம்பரிய தொழில்.

எங்கள் இல்லத்திற்கே காவிரி வந்து கலக்க, அண்ணனுக்கு மணமுடித்து வைத்தார் என் அம்மா. ஆம்! அண்ணியின் பெயர் காவிரி. 

எனது இரண்டாவது அண்ணன் செயபாலன்! பாரம்பரிய தொழில் மருத்துவம் கற்று வந்தார். அவருக்கு தமிழ்ப் பற்றும் சமூக உணர்வும் மிக அதிகம். 

அண்ணி காவிரி, முதல் குழந்தையைப் பெற்றுத் தந்த போது, எங்கள் குடும்பம் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அந்தக் குழந்தைக்குப் பெயர் வைக்கும் பொறுப்பை, தமிழ்ப்பற்றில் திளைக்கும் இரண்டாவது அண்ணன் எடுத்துக் கொண்டார். என்னை சித்தாப்பா என்று அழைக்க வந்த பொன்மலருக்கு- பெண்மகவிற்கு தேன்மொழி என்று பெயர் சூட்டினார். குடும்பத்தில் அனைவருமே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள் ஏனென்றால் எனது பாட்டியின் பெயர் தேனாம்பாளாம்.  

அண்ணி காவிரிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அண்ணி அந்தக் குழந்தைக்கு ப்ரியா என்று பெயரிட்டார்கள். தமிழ்ப்பற்றில் திளைக்கும், என் இரண்டாவது அண்ணன் மணிமொழி அல்லது கலைச்செல்வி என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என்று ஒரே அடம். வீடு முழுவதும் மணிமொழி அல்லது கலைச்செல்வி என்று எழுதி பெரும் போராட்டமே நடத்தத் தொடங்கி விட்டார். இறுதியாக பெரிய அண்ணன் அவர்களின் தலையீட்டில், அண்ணி அமைதியானார்கள். மணிமொழி, என்ற பெயர் உறுதியானது.

தமிழ்ப்பற்றில் திளைக்கும் என் இரண்டாவது அண்ணனின் போராட்ட உணர்வும், தமிழ்ப் பற்றும் எனக்குள் விதையானது! அப்போது நான் ஈரோடு கருங்கல்பாளையம் வாய்க்கால் பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறேன். அது ஒரு நிலான் காலம் இனி 2, 3 எனத் தொடரும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.