Show all

அனிச்ச மலர்! சங்ககால மலர்கள் தொன்னூன்றொன்பதின் வரிசையில்

சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து  விளையாடியதாக தொன்னூற்று ஒன்பது மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக மூன்றாவதாக அனிச்ச மலர் குறித்து அமைகிறது இந்தக் கட்டுரை.
 
02,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: அனிச்சப் பூக்கள் மிகவும் மென்மையான இதழ்களை உடையன. முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது அனிச்சப் பூக்ககள் மென் செம்மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் காணப்படும். இது சூரியன் உதித்ததும் மலரத் தொடங்கும்.

அனிச்சம் சங்கநூல்கள் குறிப்பிடும் மலர்களில் ஒன்று. மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்றாகக் குறிஞ்சிப்பாட்டு நூல் அனிச்ச மலர் குறித்து தெரிவிக்கிறது. நீலம், அல்லி, அனிச்சம், முல்லை, நறவு ஆகிய மலர்களைக் தலையில் அணியும் கண்ணியாகவும், கழுத்தில் அணியும் மாலையாகவும் தொடுத்து அணிந்துகொண்டனர் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது.

‘மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து’
என்பதாக, மூச்சுக்காற்றுப் பட்டாலே குழையும் அளவுக்கு அனிச்சம் மென்மையான மலர் என்று திருக்குறள் குறிப்பிடுகிறது.

‘நன் நீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென் நீரள் யாம் வீழ்பவள்’
என்பதாக, மற்றொரு குறளும் அனிச்சத்தின் மென்மை குறித்து பேசுகிறது.

பட்டாடை மேல் அனிச்ச மாலை அணிவர்.
கருவைத் தாங்கும் பெண்ணுக்கு அனிச்ச மலரும் சுமையாயிற்று.
அல்லிப் பூவோடு சேர்த்து அனிச்ச மலரை அணிவதும் உண்டு.
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மிகவும் மென்மையானவை.
வியப்புக்கு உரிய நொய்ய மலர். 
என்றெல்லாம், அனிச்ச மலர் குறித்து பலவாக தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.