கவிதை உறவு என்கிற அமைப்பு முன்னெடுக்கும், பாவலர்கள் சந்திப்பு என்கிற மாதமொரு நிகழ்வின், நாளது 13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5126: அன்றைய குவியம் சந்திப்பில் பாடிட நான் எழுதிய யாப்பு இது. கேட்டால் தானே கிடைக்கும்!
இதுவரை உங்களுக்குக் கிடைத்தது அனைத்தும்
கடவுளிடம் கேட்டது மட்டுமே
என்று தெளிவாக நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப என்பார் திருவள்ளுவர்.
இலர் பலராகியதற்கு கடவுளிடம் கேட்காதவர் பலர் என்பார்
அதே திருவள்ளுவர்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பார் கணியன் பூங்குன்றனார்.
கேட்காமலே-
எல்லோர்க்கும் கிடைப்பதில்லை எல்லாமும்
என்று புலம்பிக் கொண்டிருந்தால்
எப்படிக் கொடுக்கும் கடவுள்?
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும!
கடவுளிடம் கேட்டால் கட்டாயம் கிடைக்கும்,
என்று முழங்கியிராமல்-
எல்லோர்க்கும் கிடைப்பதில்லை எல்லாமும்
என்று இத்தனை பேர் குவியத்தில் கூடி
கும்மி அடித்துக் கொண்டிருந்தால் எப்படி கொடுக்கும் கடவுள்.
இப்படி புலம்பதுதாம் உங்கள் விருப்பம் என்று
கடவுள் புரிந்து கொண்டு,
புலம்புவதற்கான தொடர் வாய்ப்புகளை வஞ்சனையில்லாமல்
வழங்கிக் கொண்டிருக்கும் கடவுள்
போதும் புலம்பல்!
எல்லோர்க்கும் எல்லாமும் உறுதியாகப் பெறுவோம்
அதற்கு கடவுளிடம் கேட்போம்.
கடவுள் என்பது தமிழ்ச்சொல் மட்டுமே.
முதலெனப்படுவது இடமும் காலமும் என்று
தமிழ்முன்னோர் நிறுவியதில் உள்ள இடம்தான் கடவுள்.
காலம் நாம் ஆவோம்.
இயக்கம் இல்லாத கடவுளில் நாம் இயங்கி
இயக்கம் இல்லாத கடவுளுக்கு இயக்கம் ஊட்டி
கடவுளின் முயக்கத்தைப் பெறுகிறோம் நாம்.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க கடவுளில் இயங்குவோம்
எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க கடவுள் நம்மை முயக்கும்.