தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்- தமிழர் கொண்டாட வேண்டியதுமான- தமிழியல் தகவல்களைப்- பதிவிடும் கடமையில்- தமிழ் உறவு குமரிநாடன். இது பத்தாவது பதிவு. அயலவர் உடைமை ஆக்கப்பட்டுத் தொடர்கிறது- நேற்று கோயில்கள்; இன்று கல்வி நிறுவனங்கள் தமிழர்களுக்கு தனிமனித சான்றோர் பெருமக்கள் முன்னெடுத்த மதம் இன்று வரையிலுமே இல்லை. தமிழ் இனம் தொடக்க காலம் முதலே அறிவைக் கொண்டாடுகிற இனம். அதனாலேயே ஒட்டுமொத்த தமிழரும் பின் தொடரும் வகையான தமிழ்த்தலைவன் உருவாவதற்கு சாத்தியம் இல்லாமலே இருந்து வருகிறது. தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடுகிற பெற்றோர், முன்னோர் வழிபாட்டை சிறப்பாக முன்னெடுத்திருந்த பிள்ளைகள் என்று பல்லாயிரம் ஆண்டுகள் இயங்கி வந்த இனம் தமிழினம்- பார்ப்பனியம் தொடங்கி பல்வேறு அயல்களின் வரவுகளால் தமிழர் இயங்கு வரிசை கலைக்கப்பட்டு பல்வேறு அயல்சார்புகளில் தமிழர் தனித்தனி கூட்டங்களாக அயல் தொன்மங்களைக் கொண்டாடி வருகின்றனர். அதில் கொண்டாடும் தனித்தனி தமிழனுக்கு 58 அகவை வரைக்குமான சில பல உரிமைகள் கிடைக்கின்றன. அந்த வகைக்கு அந்தந்த தமிழன் தன் உடைமைகளை அயலவர்களிடம் ஒப்படைத்து விட்டு, சில பல உரிமைகளில் தன் உடைமைக்கே வாடகை கொடுத்து பிழைப்பு நடாத்திக் கொண்டிருக்கிறான். குலதெய்வக் கோயில்கள், நடுகல் வழிபாடு என்றிருந்த தமிழனுக்கு- தமிழ்மன்னர்கள் பெரிய பெரிய கோயில்கள் எல்லாம் கட்டி கட்டுமானப் பணிகளில், சிலை சிற்ப வடிமைப்புகளில் சில பல காலங்கள் கலைப்பயிற்சியும், தொழிலும் வருமானமும் தந்தனர். ஆனால் அந்தக் கோயில்களை பார்ப்பனியர் உடைமையாக்கி அவர்களின் குடும்பங்களுக்கு இனத்திற்கு வாழ்மானம் ஆக்கினர். ஆண்பால், பெண்பாற் புலவர்கள் ஓராசிரியர் பள்ளிகளை முன்னெடுத்து, தமிழர்க்கு கல்வி பயிற்றி வந்த நிலையிலும், தமிழ் மன்னர்கள் சங்கம் அமைத்து தமிழ் ஆய்வுக்கு ஒத்துழைத்து வந்திருந்த நிலையிலும் வளர்ந்திருந்த தமிழ்நாடு- இன்றைக்கு எல்லையில்;லாத கல்வி நிறுவனங்கள் உருவான போதும், அங்கே ஆங்கில வழிப்பயிற்றலே முன்னெடுக்கப்பட்டு அவற்றில், அயலவர்களுக்கான நிருவாகக் கூலிகளாக தமிழர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர்.