Show all

கவியரங்க நிகழ்ச்சி! பொதுத் தலைப்பு: ‘வானம் அத்தனை தூரமில்லை’

கவிதை உறவு என்ற அமைப்பு மாதந்தோறும் உலக அளவில் பல்வேறு தமிழ்க் கவிஞர்களை அழைத்து சிறப்பான கவியரங்க நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சி குறித்த செய்தி இது.
 
08,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கவிதை உறவு என்ற அமைப்பு மாதந்தோறும் உலக அளவில் பல்வேறு தமிழ்க் கவிஞர்களை அழைத்து சிறப்பான கவியரங்க நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

இன்று புதன்கிழமை மாலை 6.20 மணிக்கு கூட்டஅடையாளஎண்: 4775896897. குவியம் செயலியில், சிறப்பாக முன்னெடுத்திருந்தது கவிதை உறவு அமைப்பு ‘வானம் அத்தனை தூரமில்லை’ என்ற பொதுத் தலைப்பில் கவியரங்க நிகழ்ச்சியை.

கலைமாமணி.ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையேற்க- கவிஞர். தமிழியலன், தொலைப்பேசி மீரான், புலவர்.சு.மதியழகன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். 

கவியரங்கின் இந்த மாதச் சிறப்பு விருந்தினராக கவிஞர். கு.மா.பா.கபிலன் கலந்து கொண்டு சிறப்பித்தார். ‘வானம் அத்தனை தூரமில்லை’ என்ற பொதுத் தலைப்பில் நான் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கவிஞர்கள் கவிதை பாடினோம்.

நான் படித்த கவிதை:
வானம் அத்தனை தூரமில்லை.
ஆம் நாம் பயன்படுத்தும் ஐந்திர ஆற்றல்களில்
அதுவும் ஒன்று.
நிலம் நீர் தீ காற்று விசும்பில்,
விசும்புதான் அந்த வானம்.
நிலம் நீர் தீ காற்று
இந்த நான்கின் ஆற்றலை அறிய முடியும்.
வானத்திற்கு என்ன ஆற்றல் இருக்க முடியும்?
வானத்தை ஆற்றல் பட்டியலில் இட்ட
தமிழன் அண்ணாந்து பார்க்கிற 
வானமாக மட்டும் அதைச் சொல்ல வில்லை.
வானத்திற்கு எப்படி ஆற்றல் இருக்க முடியுமென
மூன்று நிலைகளில் அதைச் சொன்னான்.
வானத்தின் முதலாவது நிலை வெளி.
ஆம்; ஒவ்வொரு தனி ஒன்றுக்கும் வெளி.
நாம் பல தனி ஒன்றுகளால் ஆனவர்கள்.
அதனாலே நமக்கு கடந்தும் நமக்கு உள்ளுமாக 
அமைகிறது வெளி எனும் கடவுள்.
கடந்தும் உள்ளுமாக இருப்பதால் கடவுள்.
நிலம் நீர் தீ காற்று எனும்
நான்கு ஆற்றல்களால் ஆன, 
நீங்கள் நான் உள்ளிட்ட அனைவரும்
தான்தோன்றி இயக்கம் உடையவர்கள்.
இயக்கம் இல்லா வெளி என்கிற வானத்தில்
நாம் இயங்குவதால் இயக்கம் பெற்று 
வெளி எதிர் இயக்கம் கொண்ட 
விண்வெளியாகிறது. 
நியூட்டன் மூன்றாவது விதிக்கு இது அடிப்படை. 
நியூட்டன் மூன்றாவது விதியைக் கண்டார்.
தமிழ் முன்னோர் அந்த விதிக்கான 
அடிப்படையையே கண்டு சொன்னார்கள்.
வெளி நம் இயக்கத்தால் விண்வெளியாகி,
விண்வெளி நம்மை இயக்கும், 
வானத்தின் மூன்றாவது நிலைதான் விசும்பு.
நாம் தந்த ஆற்றலால் நம்மை இயக்குவது விசும்பு.
தலை எழுத்து என்பது தலையில் உள்ள கீறல் அல்ல.
எண்ணமாய் இயக்கமாய் நாம் வெளியில் பதித்து,
வெளியை விண்வெளியாக்கி, அது விசும்பாகி
நம்மை இயக்க நாம்தரும் கட்டளை.
தலையெழுத்து என்பது 
நமது எண்ணமும் இயக்கமுமான 
தலையாய எழுத்து.
கடவுள் ஆண்பாலோ பெண்பாலோ அல்ல.
கடவுள்: இயக்கமில்லாதிருந்து 
இயக்கம் பெற்று இயக்குவது.
கடவுள் ஆஃறிணை ஒன்றன்பால்
வானம் வடமொழியில் வெறுமனே ஆகாஷம்.
அதையும் தமிழில் ஆகாயம் என்று 
எழுத முனைவது வேடிக்கையே.
தமிழில்- வெளி, விண்;வெளி, விசும்பு.
வானம் அத்தனை தூரமில்லை,
நமக்குள்ளும் இருக்கிறது வானம்.
நாம் ஒன்று அல்ல,
பல தனி ஒன்றுகளின் கூட்டியக்கம்.
அணுக்களாய் அணுத்தொகுப்பின் திசுக்களாய்,
திசுத் தொகுப்பின் உறுப்புக்காளாய்,
உறுப்புத் தொகுப்பின் மண்டலங்களாய்,
எலும்பு இரத்தம் சதை மண்டலங்களின் தொகுப்பே-
ஓரறிவு உயிரிலிருந்து, 
ஆறறிவு உயிர்கள் வரையிலான அனைத்தும்.
வானம் அத்தனை தூரம் இல்லை.
நமக்குள்ளும் இருக்கிறது வானம்.
ஏல்லாவற்றுக்குள்ளும், வெளியிலும் இருக்கிறது வானம்.
வானம் வெறுமனே ஆகாஷம் அல்ல.
வெறுமனே ஆகாஷத்தை ஐந்திர ஆற்றல்களில்
பட்டியலிட முடியாது.
ஆகாஷம் அத்தனை தூரந்தான்.
வானம் அத்தனை தூரம் இல்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.