Show all

அடையாளஅட்டைப் பேழை

அடையாள அட்டைகள் சேர்ந்து கொண்டேயிருக்கின்றன
நானாக விரும்பி வாங்கிய அடையாள அட்டை 
பதினெட்டு அகவையில் நண்பனின் டிவிஎஸ் ஐம்பதை 
ஓட்டக் கற்று வாங்கின ஓட்டுநர் உரிமம்.
பக்கத்து வீட்டு திமுக உடன்பிறப்பு வாங்கிக் கொடுத்தார்கள்
வாக்காளர் அடையாள அட்டை
நான் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த போது 
என் சம்பளத்தை 
ஆங்கில மாதக் கடைசி நாளில்
இயங்கலையில் என் கணக்கில் சேர்க்க
நிறுவனம் வாங்கிக் கொடுத்தது 
எச்டிஎப்சி வங்கி ஆதாய அட்டை
எனக்கு வேலை தந்த நிறுவனம் 
எண்ணிம ஊடகம் என்பதால் 
மாவட்ட ஆட்சியரிடம் இருந்து கிடைத்தது 
ஊடகம் அடையாள அட்டை
ஒட்டு மொத்த என் குடும்பத்திற்கும் 
குடும்ப அட்டை பொருட்கள் வாங்க 
குடும்ப அடையாள அட்டை கொடுத்தது 
தமிழ்நாடு அரசு
இந்த அட்டைகள் ஒவ்வொன்றிலும் 
எனக்கு ஒவ்வோர் அதிகாரம் இருந்தது
ஆனால் அதிகாரம் இல்லாத 
கைதிக்கு வழங்கும் எண் போல 
ஒரு அட்டையைக் கொடுத்தது 
நடுவண் பாஜக அரசு
அதற்குப் பெயர் ஆதார் அட்டையாம்
ஹிந்தியில் மட்டுமே பெயர் 
தமிழிலும் ஆதார்தான் ஆங்கிலத்திலும் ஆதார்தான்
அதில் தனிமனிதன் அதிகாரம் என்று போட்டிருந்தது
ஆனால் அந்த அட்டைதான் என்னை அதிகாரப்படுத்தியது
இதுவரை எனக்கு அதிகாரம் கொடுத்திருந்த 
அட்டைகளோடு எல்லாம் அதை இணைக்க வேண்டும் என்று
இதுதான் கடைசி அட்டையாக இருக்கும் என்று 
அட்டைகளை வைத்துக் கொள்ள 
ஒரு பேழையை வாங்கினேன். 
அது எல்லா அட்டைக்கும் போதுமானதாக இருந்தது
நேற்று ஏதோ புதிய அட்டை தரப்போவதாக சொன்னாரம் மோடி
அதன் பெயர் நலங்கு அடையாள அட்டையாம்
அந்த அட்டையையும் சேர்த்து வைத்துக் கொள்ள 
புதிய பேழை வாங்க வேண்டுமே
இதுதான் இப்போதைக்கு என்னுடைய கவலை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.