Show all

ஒன்பதாவது தகவல்! தமிழியல் தரவுகள் வரிசையில்

தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்- தமிழர் கொண்டாட வேண்டியதுமான- தமிழியல் தகவல்களைப்- பதிவிடும் கடமையில்- தமிழ் உறவு குமரிநாடன். இது ஒன்பதாவது பதிவு.

நாம்தாம் நமக்கான விதியை எழுதிக் கொள்கிறோம் என்பதில் தமிழ் முன்னோர் மிகத் தெளிவாக இருந்தனர். 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
இது வினைத் திட்பம் என்கிற அதிகாரத்தில் வருகிற குறள்.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
இது ஆள்வினையுடைமை என்கிற அதிகாரத்தில் வருகிற குறள்.

இந்த இரண்டு குறளுமே நாம்தாம் நமக்கான விதியை எழுதிக் கொள்கிறோம் என்பதை மிகத் தெளிவாகக் காட்டும் குறள்கள் ஆகும்.

நாம்தாம் நமக்கான விதியை எழுதிக் கொள்கிறோம் என்பதில் தமிழ் முன்னோர் மிகத் தெளிவாக இருந்தனர். அதனாலேயே உறங்கி எழும்போதே இனிமையான எண்ணங்களோடே எழவேண்டும் என்று தமிழ்முன்னோர் வலியுறுத்துகின்றனர். 

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
இது வாழ்க்கை துணை நலம் என்கிற அதிகாரத்தில் வருகிற குறள் ஆகும். 

இந்தக் குறளுக்கு இதுவரை பார்ப்பனிய இயல் அடிப்படையில்- பெண்ணடிமைத் தனத்தை, திருவள்ளுவர் வலியுறுத்துவது போலவே, பொருள் சொல்லி வந்திருக்கின்றனர். 

ஆனால், வாழ்க்கை துணை நலத்தில் இருக்கிற மற்ற மற்ற குறள்களோ பெண்ணடிமைத் தனத்தைக் கொண்டாடுவது போல செய்தியைத் தொடரவே இல்லை. அப்படியானால் இந்தக் குறளில் மட்டும் எப்படி அப்படியான செய்தியைத் திருவள்ளுவர் வலியுறுத்தியிருக்க முடியும்? என்கிற கேள்வி இந்தக் குறளை நான் அறிந்த காலந்தொட்டே எனக்கு நெருடலாக இருந்து கொண்டே இருந்தது. 

மேலும்- கணவனைத் தொழுது எழுகிற பெண்கள் 'மழையே பெய்' என்றால் மழை பெய்யும் என்பது போல பொருள் சொல்லிக்கொண்டு வருவது- தமிழியலுக்கு துளியும் பொருத்தம் இல்லாத செய்தியாகவே பட்டது. இந்தக் குறளுக்கு பாரதிதாசன் அவர்களின் பொருள் படிக்கும் வரை.

உண்மையில் இந்தக் குறளில் மனைவி கணவனை எழுந்து தொழுவதாகச் செல்லவேயில்லை. தொழுது எழுவதாகத்தான் திருவள்ளுவர் எழுதுகிறார். 'வாழ்க்கை துணை நலம்' பேண வேண்டிய கடப்பாட்டில் உள்ள கணைவன் மனைவியையும், மனைவி கணவனையும் தொழுது எழுவது இனிமையான தமிழியல். மாடு பேணும் இடத்தை தொழுவம் என்று தாம் சொல்கின்றோம். இங்கே தொழுவது என்பது நினைத்துக் கொண்டு எழுதலே ஆகும்.

அடுத்து 'பெய்யெனப் பெய்யும் மழை'யில் பெய்யனப் பெய்யும் என்பது- எப்படிப்பட்ட மழை? பெய்யென்றதும் பெய்கிற மழை என்பதாகும். 

தெய்வம் குறித்து நினைக்காமல், தன் கணவன் குறித்து நினைத்தவளாய் படுக்கையை விட்டு எழுகிற பெண், அவள் கணவனுக்குப் 'பெய்யெனப் பெய்யும் மழை' ஆவாள். என்பதே இந்தக் குறளின் பொருள் ஆகும். 

மனைவி கணவனுக்கு முன்பு எழுந்து கணவன் காலைத் தொட்டு வணங்குவது, குளித்துவிட்டு, துளசி மாடம் சுற்றுவது, முப்பத்தி முக்கோடி தேவர்களை வணங்குவது என்பதெல்லாம் யாரோலோ நம்முடைய விதி எழுதப்படுவதாக நம்புகிற பார்ப்பனிய அடிப்படை ஆகும். தமிழ்முன்னோர் அப்படியான செய்திகளைப் பார்ப்பனியர் நுழைவுக்கு முந்தைய இலக்கியங்களில் தெரிவித்தான வாய்ப்போ, வரலாறோ இல்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.