தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்- தமிழர் கொண்டாட வேண்டியதுமான- தமிழியல் தகவல்களைப்- பதிவிடும் கடமையில்- தமிழ் உறவு குமரிநாடன். இது 11வது பதிவு. 10,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்முன்னோர் முன்னெடுத்திருந்த மூன்று முன்னேற்றக்கலைகள் நிமித்தகம், கணியம், மந்திரம் என்பன. நிமித்தகம் என்பது நிமித்தம் பார்த்தல்- நேரம் காலம் பார்த்தல்- என்று தொடங்கி, சாதகம் என்று சாதகமானவைகளை கண்டறிதல், சோதிடம் என்றும் இடர் சோதித்தல் என்றெல்லாம் வளர்த்தெடுக்கப்பட்ட கலையாகும். அடுத்து கணியம் என்பது இயற்கையின் பல்வேறு இயல்புகளைப் புரிந்து கொண்டு, அந்த இயல்பு மாற்றத்திற்கு எண்ணிக்கையே அடிப்படையாக இருப்பதை கண்டறிந்து, அந்த இயல்புகளுக்காய் நமது பெயரை அமைத்துக் கொண்டு இயங்குகிற கலையாகும். கணியக்கலை நிமித்தகத்தின் மேம்படுத்தப்பட்ட கலையாகும். கணியக்கலையைப் பின்பற்றுகிறவர்களுக்கு நிமித்தகத்தின் தேவையில்லை. கணியத்திற்கு அடுத்து மந்திரம் என்பது, நமக்கு என்னவெல்லாம் வேண்டுமோ, அதற்கான விதியை, நாமே எழுதிக் கொள்வது எப்படி, என்று விளக்குகிற கலையாகும். இன்றைக்கு- நிமித்தகம் தமிழர்தம் முதலாவது முன்னேற்றக்கலை என்று புரிந்து கொள்ளப்படாமல், அந்த நிமித்தகம் பார்ப்பனியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, நாம் அதில் பயணிப்பதற்கு பார்ப்பனிய வழிகாட்டலை முன்னெடுத்து பார்ப்பனியர்களுக்கு அது முன்னேற்றக்கலையாக பயன்பட்டு வருகிறது. இன்றைக்கு- கணியம் தமிழர்தம் இரண்டாவது முன்னேற்றக்கலை என்று புரிந்து கொள்ளப்படாமல், அந்தக் கணியம் நியுமராலஜி என்கிற எண்ணியலாக ஆங்கிலத்திடம் ஒப்படைக்கப்பட்டு, ஆங்கில மொழி வழிகாட்டலை முன்னெடுத்து, ஆங்கில மொழியினரின் தொன்மமாகக் கருதப்பட்டு, ஆங்கில மொழியாளர்களின் முன்னேற்றக் கலையாகப் பயன்பட்டு வருகிறது. இன்றைக்கு- மந்திரம் தமிழர்தம் மூன்றாவது முன்னேற்றக்கலை என்று புரிந்து கொள்ளப்படாமல், அந்த மந்திரம் மாயக்கலை போலவும், அந்த மாயக்கலையும் சமஸ்கிருதத்திற்கு மட்டுமே சாத்தியம் என்பது போலவும், சமஸ்கிருதம் மந்திர மொழி என்று பொய்யுரைக்கப்பட்டும், நாம் அதில் பயணிப்பதற்கு பார்ப்பனிய வழிகாட்டலை முன்னெடுத்து, மந்திரமும்- பார்ப்பனியர்களுக்கு முன்னேற்றக்கலையாக பயன்பட்டு வரும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
என்று திருக்குறளில் மிகச்சுருக்கமாக மந்திரக்கலையின் அடிப்படை தெரிவிக்கப்படுகிறது.
மந்திரக்கலை கணியத்தின் மேம்படுத்தப்பட்ட கலையாகும். மந்திரத்தின் திண்ணியம் எய்தியவர்களுக்கு நிமித்தகத்தின் தேவையும் இல்லை. கணியத்தின் தேவையும் இல்லை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,167.