அடுக்கடுக்காய் நூல்களினை அடுக்கி வைத்தே
அழகுதனைப் பார்ப்பதிலே பயன்தான் உண்டோ
மிடுக்கான பேழைக்குள் வரிசையாக
மிளிர்கின்ற படிவைத்தால் அறிவாகூடும்
எடுக்காமல் எடுப்பாக வீட்டிற்குள்ளே
எழிலுக்காய் வைப்பதிலே மதிப்பா சேரும்
கொடுக்காமல் புதைக்கின்ற பணத்தைப் போன்ற
கொடுமையன்றோ படிக்காமல் வைத்திருத்தல்!
வாங்கிவந்த நூல்களினைக் கருத்துக்கேற்ப
வகைபடுத்தித் துறைபிரித்து வைக்கவேண்டும்
பாங்காகத் தூசிதட்டிப் பூச்சிவந்து
பக்கங்கள் அரிக்காமல் காக்கவேண்டும்
பூங்காவில் தேன்தேடும் தேனீபோன்று
புதுநூல்கள் கொண்டுவந்து சேர்க்கவேண்டும்
நீங்காத அன்புகாட்டிகாக்கும் தாயாய்
நிறைநெஞ்சால் நாள்தோறும் பேணவேண்டும்!
உண்பதற்கு நேரத்தை ஒதுக்கல்போல
உரியநேரம் படிப்பதற்கும் ஒதுக்கவேண்டும்
பண்புகளைக் குழந்தைகட்குச் சொல்லல்போன்று
படிக்கின்ற பழக்கத்தைப் பதிக்கவேண்டும்
எண்ணத்தை அறிவுதனைக் கூர்மையாக்கி
எப்போதும் துணைநிற்கும் நூல்கள்தம்மைக்
கண்போலக்காத்து நாளும் படிக்கும் போதே
கால்நிற்கும் துணிவுவந்து சிறக்கும் வாழ்வே !
- பாவலர் கருமலைத்தமிழாழன்