வேறு ஒரு தளத்தில், பக்தியுடன் கடவுளை வேண்டினால் கேட்ட வரம் கிடைக்கும் என்று ஏன் நம்மால் உறுதியாக கூற முடியவில்லை? என்று என்னிடம் எழுப்பப் பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க நான் உருவாக்கியது இந்தக் கட்டுரை. 21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: 'நம்முடைய தலையெழுத்தை நாம்தாம் எழுதிக்கொள்கிறோம். நாம் கேட்டது அனைத்தும் கிடைக்கும்' என்பது உறுதியான உண்மை என்று தமிழ்முன்னோர் இயல்கணக்குத் துறையில் மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரத்தில் நிறுவியுள்ளனர். 'நம்முடைய தலையெழுத்தை நாம்தாம் எழுதிக்கொள்கிறோம். நாம் கேட்டது அனைத்தும் கிடைக்கும்' என்பதைத் தமிழ்முன்னோர் நிறுவுவதற்கு நீண்ட நெடுங்காலம் பாடாற்ற வேண்டியிருந்தது. இந்தப் பாட்டில் தமிழ்முன்னோருக்கு முதலாவதாகக் கிடைத்தது. நிமித்தகம் என்கிற காலக்கலை ஆகும். அந்த நிமித்தகக் காலக்கலைதான் இன்று சோதிடம் என்றும் சாதகம் என்றும் பேசப்படுகிற தலைப்பில் வழக்கத்தில் இருக்கிறது. இந்தத் துறைக்கு பேரளவான பாட்டை தமிழ்முன்னோர் ஈடுபடுத்த வேண்டியிருந்தது. இதில் இயல்கணக்காக களமிறங்கியிருந்த தமிழ்முன்னோருக்கு வானவியல் என்ற தலைப்பில் கொண்டாடத்தக்க இயல்அறிவுச் செய்திகள் பேரளவாகக் கிடைத்த போதும். 'இதனால் இது கிடைக்கும்' என்று கணிப்பதான இயல்கணக்கு சார்ந்து கிடைத்த இந்த நிமித்தகக் கலைக்கு நாற்பது மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்க முடிந்தது. தொடர் தேடலில் தமிழ்முன்னோருக்கு அடுத்து கிடைத்தது இரண்டாவது முன்னேற்றக் கலையான கணியம் ஆகும். இந்தத் துறைக்கு பேரளவாக இல்லாமல் ஓரளவு பாட்டை தமிழ்முன்னோர் ஈடுபடுத்த வேண்டியிருந்தது. இதில் இயல்கணக்காக களமிறங்கியிருந்த தமிழ்முன்னோருக்கு எண்ணியல் என்ற தலைப்பில் கொண்டாடத்தக்க இயல்அறிவுச் செய்திகள் பேரளவாகக் கிடைத்த போதும். 'இதனால் இது கிடைக்கும்' என்று கணிப்பதான இயல்கணக்கு சார்ந்து கிடைத்த இந்த கணியக் கலைக்கு அறுபது மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்க முடிந்தது. தொடர் தேடலில் தமிழ்முன்னோருக்கு அடுத்து கிடைத்தது மூன்றாவது முன்னேற்றக் கலையான மந்திரம் ஆகும். இந்தத் துறைக்கு பேரளவாகவும் இல்லாமல் ஓரளவாகவும் இல்லாமல் மிகக் மிகக் குறைந்த பாடாக குழந்தைகள் ஐந்து அகவைக்குள் முழு எண்ண மொழியையும் கற்றுத் தேறுகிற பாட்டில் தங்கள் கவனத்தை தமிழ்முன்னோர் ஈடுபடுத்த வேண்டியிருந்தது. இதில் இயல்கணக்காக களமிறங்கியிருந்த தமிழ்முன்னோருக்கு அறிவுதேடலில் ஓரறிவு உயிரியிலிருந்து ஐந்தறிவு வரையிலான உயிரிகளுக்கு அடுத்தடுத்த புலன்கள் கிடைத்தது குறித்த கிளவியாக்கம் என்கிற தலைப்பில் கொண்டாடத்தக்க இயல்அறிவுச் செய்திகள் பேரளவாகக் கிடைத்ததோடு 'இதனால் இது கிடைக்கும்' என்று கணிப்பதான இயல்கணக்கு சார்ந்து கிடைத்த இந்த மந்திரக் கலையைக் கற்றலுக்கு எண்பது மதிப்பெண்களும் கற்றல் வழி நிற்றலுக்கு நூறு மதிப்பெண்களும் கொடுத்து 'நம்முடைய தலையெழுத்தை நாம்தாம் எழுதிக்கொள்கிறோம். நாம் கேட்டது அனைத்தும் கிடைக்கும்' என்கிற உறுதியான உண்மையை நிலைநாட்ட முடிந்தது. இந்த உண்மை இற்றைத் தமிழருக்குப் புரியாமல் இருப்பதற்குக் காரணம் இற்றைத் தமிழர் அனைவரும் தங்கள் உடைமைகளை கிடப்பில் போட்டுவிட்டு அயல் உடைமைகளுக்கு வாடகை கொடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதே ஆகும். தமிழ்முன்னோர் நிறுவிச் சென்ற 'நம்முடைய தலையெழுத்தை நாம்தாம் எழுதிக்கொள்கிறோம். நாம் கேட்டது அனைத்தும் கிடைக்கும்' என்கிற உண்மையை உலகில் எந்த மதமும் அரசியல் கோட்பாடும் இதுவரை புரிந்து கொண்டிருக்கவில்லை என்பது உறுதியான உண்மை. ஆனால் உலகின் எல்லா வழிகாட்டிகளாலும் தங்களை பின்தொடருகிறவர்களில் பெரும்பாலோருக்கு அவர்கள் கேட்டதை தங்களால் நிறைவேற்றித்தர முடிகிறது. இப்படி அவர்களால் சாத்தியமாக்கப்பட முடிவதற்கு- தங்களைப் பின்தொடருகிறவர்கள் தங்களை வழிகாட்டிகளுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள் என்கிற இயல்கணக்கின் உள்குத்து அவர்களுக்கே புரியாதிருக்கிறது என்பதும் உண்மை. உண்மையில்- உலக வழிகாட்டிகள் யாராலும் நீங்கள் ஒப்புக் கொடுக்காமல், நீங்கள் கேட்டதை அவர்களால் ஒற்றை விழுக்காடும் நிறைவேற்றித்தர முடியாது என்பதே உண்மை. அதுவும் அவர்களுக்கு புரியாதிருப்பதால் தாங்கள் பின்தொடர்ந்த வழிகாட்டி தங்களுக்கு ஞானம் கொடுத்துவிட்டதாகவும், இவர்கள் ஞானம் பெற்றுவிட்டதாகவும் உண்மை அல்லாத ஒன்றை பீற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் 'நம்முடைய தலையெழுத்தை நாம்தாம் எழுதிக்கொள்கிறோம். நமக்கான தலையெழுத்தை யாரும் எழுத முடியாது' என்பது தமிழ்முன்னோர் நிறுவிய ஆணித்தரமான உண்மையாகும். நமக்குத் தேவையானதை கடவுளிடம் நாமே நேரடியாக கேட்டுப்பெற முடியும் என்கிற நிலையில், நீங்கள் எந்த வழிகாட்டியின் பின்னாலோ, எந்த மதத்தின் பின்னாலோ, எந்த அரசியல் கோட்பாட்டின் பின்னாலோ உங்கள் தலையெழுத்து மாற்றத்திற்கு நிற்க வேண்டியத் தேவையில்லை. நீங்கள் ஒரு வழிகாட்டியிடம் இருந்து இன்னொரு வழிகாட்டிக்கு மாறுவதற்கு காரணம் வழிகாட்டிகளின் இயலாமை அல்ல. நீங்கள் ஏதோவொரு காரணம் பற்றி அவருக்கு சரியாக ஒப்புக் கொடுக்கவில்லை என்பதே உண்மை. அடுத்த வழிகாட்டி உங்களுக்குச் சாதித்துக் கொடுப்பதற்கு காரணமாக அமைவது உங்களின் முழுமையான ஒப்புக் கொடுத்தலே ஆகும். உங்கள் தலையெழுத்தை நீங்களாகவே எழுதிக் கொள்ளவும் முடியும். ஏதாவதொரு வழிகாட்டியிடம் உங்களை ஒப்புக் கொடுத்து அவர்கள் மூலமாகவும் உங்கள் தலையெழுத்தை எழுதிக் கொள்ளவும் முடியும். நீங்களாகவே உங்கள் தலையெழுத்தை எழுதிக் கொள்வதில் நீங்கள் வரிசை பேணவேண்டிய தேவையிராது. மேலும் நீங்களாகவே உங்கள் தலையெழுத்தை எழுதிக் கொள்கிற போது அது உங்கள் அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரும். ஆனால் ஏதாவதொரு வழிகாட்டியிடம் உங்களை ஒப்புக் கொடுத்து அவர்கள் மூலமாக உங்கள் தலையெழுத்தை எழுதிக் கொள்ள- நீங்கள் உறுதியாக வரிசை பேண வேண்டியிருக்கும். வழிகாட்டிக்கு நெருக்கமானவர், நெருக்கமில்லாதவர் என்கிற ஏற்றதாழ்வையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்னும் சிறப்பாக உங்கள் வேண்டுதல் உங்கள் ஐம்பதெட்டு அகவைக்கு மட்டுமான வாழ்மானமாக மட்டுமே அமையும். உங்கள் அடுத்தடுத்த தலைமுறையினர் அவரவர்களுக்குத் தோதான வழிகாட்டிகளைத் தேட வேண்டியிருக்கும். பேரளவான இற்றைத் தமிழர்களின் தேடல் இந்த வகைமைப்பாடாகவே அமைந்துள்ளது. இனி உங்கள் வினாவிற்கு வருவோம். பக்தியுடன் கடவுளை வேண்டினால் கேட்ட வரம் கிடைக்கும் என்று ஏன் நம்மால் உறுதியாக கூற முடியவில்லை? என்பது உங்கள் வினாவாகும். இதற்கான விடை 'கேட்பவர்களின் ஒப்புக் கொடுப்புகளில் மாறுபாடு' என்பதாகும். நீங்கள் தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக் கலை அடிப்படையில் நீங்களே கடவுளிடம் கேட்க முனைந்தால் நீங்கள் கேட்டது அனைத்தும் உறுதியாக கிடைப்பதைக் கண்டுகொள்வீர்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,455.