Show all

சாதிக்கலாம் தமிழர் இன்று உலகத்தளத்தில்! கணியக்கலை அடிப்படையில். நாளும், கிழமையும் உழைப்பே

கணியக்கலை பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இன்றைய நாளின் இயல்பு கிழமையின் இயல்பை தெரிந்து கொண்டு வெற்றிக்கு முயல்வோம்.

26,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தனிமனித முன்னேற்றத்திற்குத் தமிழர் உருவாக்கிய மூன்று கலைகள் 1.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகக்கலை 2.கணியக்கலை 3.மந்திரக்கலை 

தனிமனித முன்னேற்றத்திற்கான இந்த மூன்று கலைகளில் முதலாவது மட்டுமே, தப்பும் தவறுமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவற்றுள் இரண்டாவது மற்றும் மூன்றாவது கலைகள், நீங்கள் கடையில் வாங்கிப் படிக்கிற, அப்படியே முழு நூலாக எல்லாம் இல்லை. அந்தக் கலைகள் தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இனி நாம்தாம் தொகுக்க வேண்டும்.

தமிழர் வாழ்ந்து கண்டறிந்த அனுபவங்களைத் தொகுப்பது மிக அரிது. ஆனால் தொகுத்து விட்டால், அதை வைத்துக் கொண்டு உலக மனிதர்களில் எவ்வளவு உயரம் வேண்டுமானால் தமிழன் வளரமுடியும்.

அந்த முன்னேற்றக்கலைகள் மூன்றில் 1.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகக்கலை. 2.கணியக்கலை என்கிற இயல்புகளை அறிந்து பொருத்திப் பயன்படுத்தி முன்னேற்றத்தை முன்னெடுக்கிற கலையாகும். 3.மந்திரக்கலை என்கிற நமக்கான இயக்கத்தை (தலைஎழுத்தை) நாமே வடிவமைத்துக் கொண்டு முன்னேற்றத்தை முன்னெடுக்கிற கலையாகும்.

2.கணியக்கலை என்கிற இயல்புகளை அறிந்து பொருத்திப் பயன்படுத்தி முன்னேற்றத்தை முன்னெடுக்கிற இந்தக் கலைக்குப் ‘பெயர்’ தான் அடிப்படை. இந்தக் கலைக்கு உங்கள் பெயரை தமிழில்தான் கட்டாயம் அமைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் நீங்கள் விரும்பும் இயல்பை முன்னெடுக்கிற வகைக்கு அந்த இயல்புக்குரிய எண்ணில் பெயரை அமைத்துக் கொள்ள வேண்டும். 

எண்ணிக்கைதான் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவதற்கான அடிப்படை என்பது கணியக் கலை முன்னிறுத்தும் முதன்மையான செய்தியாகும். 

உலகில் இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தனிமங்கள் அனைத்தும் அடிப்படையான நேர்கள் (எலக்ட்ரான்) நிறைகளால் (புரட்டான்) ஆனவைகள்தாம். ஆனாலும் அவைகள் வெவ்வேறு தனிமங்களாக இருப்பதற்கு அவைகளில் அமைந்த நேர்கள், நிறைகளின் எண்ணிக்கை மாறுபடே காரணம் என்பதை இயல்அறிவு (சயின்ஸ்) நிறுவியிருக்கிறது அல்லவா? எடுத்துக்காட்டாக நீர்வளி அணுவில் உள்ள நேர்கள் நிறைகள் எண்ணிக்கை 1 ஆகும். ஈயத்தின் அணுவில் உள்ள நேர்கள் நிறைகள் எண்ணிக்கை 82 ஆகும். 

அது போலவே உங்கள் அடையாளமாக இருக்கிற உங்கள் பெயரில் அமைந்த ஒலியன் எண்ணிக்கை உங்களுக்கு ஓர் இயல்பு அடையாளத்தைத் தருகிறது. பெயர் போலவே, நாம் அமைத்துக் கொண்ட நாளுக்கும் இயல்பு உண்டு. கிழமைக்கும் இயல்பு உண்டு.

விசும்பைப் பேரறிவு பேரற்றல் என்கின்றனர் தமிழ் முன்னோர். நம்மால் ஒலிக்கப்படும் ஒவ்வொரு ஒலியனும் விசும்பில் பதிவாகிறது. இன்றைக்கு கணினியை அவரவர்கள் தரவேற்றம் செய்த மென்பொருள் வகைக்கு இயக்கிக் கொள்ள முடிகிறது இல்லையா? ஒவ்வொருவரும் அவரவர் விதியை விசும்பு என்கிற வண்தட்டில், மென்பொருளாக எழுதிக் கொள்கின்றனர். இதைத்தான் திருக்குறள் 
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
என்று தெரிவிக்கிறது.

முதல் எனப்படுவது இடமும் காலமும் என்று கண்டறிந்த தமிழ்முன்னோர் வெளி, விண்வெளி, விசும்பு என்று மூன்று இயக்க மாறுபாடுகளைக் கொண்ட இடத்திற்கான எண்ணாக பாழ் அல்லது சுழியத்தை அமைத்தனர். 

காலத்திற்கான எண்களை அடிப்படையாக ஒன்பதாக அமைத்தனர். சார்புநிலையாக எண்களை, எல்லையற்ற பாழ்வெளிக்கான சுழியத்தை இணைத்து, எல்லையற்ற எண்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று கண்டறிந்தனர். 

அடிப்படை எண்கள் ஒன்பது என்ற நிலையில் அடிப்படை இயல்புகளும் ஒன்பது ஆகும். அந்த ஒன்பது இயல்புகள் எவையெவை என்னும் தலைப்பிற்கு வருவோம்:-
ஒலியன் 1க்கு இயல்பு உழைப்பு
ஒலியன் 2க்கு இயல்பு நிருவாகம்
ஒலியன் 3க்கு இயல்பு முனைப்பு
ஒலியன் 4க்கு இயல்பு பயணம்
ஒலியன் 5க்கு இயல்பு கலை
ஒலியன் 6க்கு இயல்பு தொழில்நுட்பம்
ஒலியன் 7க்கு இயல்பு கமுக்கம்
ஒலியன் 8க்கு இயல்பு புகழ்
ஒலியன் 9க்கு இயல்பு போரியல் 
இயல்பை ஒற்றைச் சொல்லில் நாம் தெரிவித்திருக்கிறோம். அந்த ஒற்றைச் சொல்லின் விரிவாகவே நீங்கள் ஒவ்வொரு நாளும் இயங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். அதைப் புரிந்து கொண்டு இந்த இயல்புகளை உறவாக்கிக் கொண்டு முன்னேறவே தமிழர் அமைத்தனர் கணியக்கலை.

இன்றைய நாளையும் கிழமையையும் நீங்கள் வெற்றி கொள்ள, நாளின் இயல்பாகிய உழைப்பும் கிழமையின் இயல்பாகிய அதே உழைப்பும் இன்றைய ஆட்சி இயல்புகள் என்பதை புரிந்து கொண்டு முயல உங்களுக்கு வெற்றி எளிதாகும். இன்று சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு களம் இறங்குகிறவர்கள், இதைப் புரிந்து கொண்டு சாதிக்க எனது வாழ்த்துக்கள். 

தமிழ் ஆர்வலர்கள், தமிழே அடையாளம் என்று முனைகிறவர்கள் இன்று மார்கழி 26 என்கிற நிலையில்- இன்றைய தமிழ்நாளின் ஆட்சி இயல்பு புகழ் என்றும், கிழமை இயல்பு உழைப்பு என்றும் புரிந்து கொண்டு முனைக. 

உலகம் முழுவதும் முன்னெடுக்கிற கிழமை நம்முடையதுதான். தமிழ்முன்னோர், ஏழு இயல்புகளுக்கு மட்டுமே கிழமை அமைத்துள்ளனர். கிழமைக்கு எட்டாவது புகழ் இயல்பும் ஒன்பதாவது போரியல் இயல்பும் இல்லை.

இன்றைய தமிழ்நாள் இயல்பு புகழ், கிழமை இயல்பு உழைப்பு மற்றும் தமிழின இயல்பு என்கிற நிலையில், உலகினர் நாள் இயல்பும், கிழமை இயல்பும் தமிழின இயல்பு உழைப்பு என்கிற நிலையில் உலகளாவி தமிழர் முன்னெடுக்கும் முயற்சிகளில் வெற்றி மிக மிக எளிதாகும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.