Show all

ஆங்கிலவழிக் கல்வி ஓர் அலசல்!

'தமிழ் வழிக்கல்விக்கே தமிழ் உயிரென்பர் அறியார்
ஆங்கில வழிக்கல்விக்கும் தமிழே உரம் என்பது நடைமுறை' என்கிற விடை தமிழ்நாட்டு ஆங்கில கல்வி குறித்த அலசலில் நமக்குக் கிடைப்பதாகிறது.

16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒரு தமிழ்க் குழந்தை தனது மூன்று அகவைக்குள் தமிழ் இலக்கணம் என்றால் என்ன என்று தெரியாமலே, பல்லாயிரக்கணக்கான தமிழ்ச்சொற்களை இலக்கணத்தோடு பிணைத்து அழகாக மழலைத்தமிழ் பேச சாத்தியமாகிறது. இந்த வாய்ப்பை தாயின்மடியும், தாயின் தோளும் அந்தக் குழந்தைக்கு வழங்குகிறது.

தமிழுக்கு இணையாக வைத்துப் பேசப்படுகிற சமஸ்கிருதத்திற்கு இந்தத் தாயின்மடியும், தாயின் தோளும் கிடைக்காத காரணம் பற்றியே- சமஸ்கிருதத்தைத் தாய்மொழி என்று அடையாளப்படுத்திக் காட்ட உலகளாவி வெறுமனே ஏறத்தாழ இருபத்தைந்தாயிரம் பேர்கள் மட்டுமே உள்ளனர். 

தமிழ்நாட்டில் நடுத்தட்டுக்கு மேலாக கொஞ்சம் பொருளாதார வாய்ப்பு இருக்கிற பெற்றோர்கள் பலர், அந்தக் குழந்தையை ஆங்கிலவழிக் கல்வி பயிற்றுவதாகச் சொல்லுகிற கல்வி நிறுவனங்களுக்கு ஆயிரமாயிரமாக பணத்தைக் கொட்டிக்கொடுத்து கையளிக்கின்றனர். 

தாயின்மடி. தாயின்தோள் ஆகிய பல்கலைக்கழகத்தில் மழலைத்தமிழ் முனைவர் பட்டம் பெற்றுவிட்ட அந்தத் (தங்கள்) தமிழ்க் குழந்தைகளுக்கு- ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்கள் உண்மையிலேயே  நேரடியாக கணக்கு, சமூகவியல், இயல்அறிவு ஆகிய பாடங்களை ஆங்கிலத்திலேயே கற்றுத் தருகின்றனவா? கற்றுத்தர முடியுமா? அப்படிக் கற்றுத்தந்தால் அந்தக் குழந்தைகள் படைப்பாற்றல் பெற முடியுமா? சாத்தியமே இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

தமிழ்நாட்டின் எந்த ஆங்கிலவழிக் கல்வி நிறுவனமும் தமிழ் இல்லாமல் ஆங்கிலத்திலேயே பயிற்றுவிப்பதில்லை. இது மழலையர் பள்ளியில் மட்டுமே என்பதானதல்ல. பட்டயப்படிப்பு, பொறியியல் படிப்பு, மருத்துவப்படிப்பு என்கிற அனைத்து ஆங்கில வழிக்கல்வியும் உண்மையில் தமிழ்வழியாகவே பயிற்றுவிக்கப்படுகிறது.

எந்த ஆங்கில வழிக்கல்வி நிறுவனங்களுக்கும் பெயர் சொற்களை மட்டுமே குழந்தைகளுக்கு ஆங்கிலத்திலேயே பயிற்றுவிக்க முடிகின்றன. ஆங்கிலத்திற்கான மற்ற அனைத்து இலக்கண வகைகளும் தமிழின் மூலமாக அந்தத் தமிழ்க் குழந்தைகள் உள்வாங்குகின்றன.

உலகின் எந்தவொரு குழந்தையும் தாயின்மடி. தாயின்தோள் ஆகிய பல்கலைக்கழகத்தில் எந்த மொழிக்கு முனைவர் பட்டம் பெறுகிறதோ அந்த மொழியில்தான் அந்தக் குழந்;தை முழு இலக்கணத்தோடும் சிந்திக்க முடியும். 

ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்கள்- தங்களிடம் கையளிக்கப்படுகிற தமிழ்ப்பிள்ளைகளை ஆங்கிலத்திலேயே சிந்திக்கவைத்து விடுவது போலவும், அந்தக் குழந்தைகளும் படைப்பாற்றல் மிக்க குழந்தைகளாக மெருகேறுவது தங்கள் அளித்த ஆங்கில கல்வியால் என்று பெய்யான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. 

வீட்டிலும் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலப் பெயர்செற்களை சிந்தனைக்குப் பயன்படுத்தக் கற்றுத்தருவதற்கு நிறைய ஆங்கிலப் பெயர்ச்சொற்களைத் தங்கள் வீட்டிலும் புழங்கி வரும் பெற்றோர்களின் குழந்தைகளை மட்டுமே இந்த ஆங்கில வழிக்கல்வி நிறுவனங்களால் மனப்பாட மாணவர்களை உருவாக்க முடிகிறது. 

மற்ற மாணவர்கள் மனப்பாட தரத்தில் கடைசியாக்கப்பட்டு ஆங்கில வழிக்கல்விக்கும் தகுதியற்றவர்கள் என்பது போல- அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் ஆங்கில வழிக்கல்வி நிறுவனங்களால் மூளைச்சலவை செய்யப்படுகின்றார்கள்.

ஆர்வத்தில் ஆங்கிலகல்விக்கு கையளிக்கப்பட்ட மனப்பாட தரத்தில் கடைசியாக்கப்பட்ட பலர்- பெற்றோர்களால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு, தாயின்மடி. தாயின்தோள் ஆகிய பல்கலைக்கழகத்தில் மழலைத்தமிழ் முனைவர் பட்டம் பெற்றுவிட்ட தகுதியை வைத்து மிகச் சிறந்த தொழில் அதிபராகவோ, வணிகராகவே, விளையாட்டு, நடிப்பு, இசை போன்ற தனித்திறமையாளராகவோ, மிளிரத்தான் செய்கின்றார்கள். 

தமிழ்நாட்டின் எந்தக் குழந்தையின் எதிர்காலத்தையும், அந்தக் குழந்தை தன்தாயின்மடி. தாயின்தோள் ஆகிய பல்கலைக்கழகத்தில் மழலைத்தமிழ் முனைவர் பட்டம் பெற்ற தகுதியின் அடிப்படையே தீர்மானிக்கிறது என்பதே உண்மை. எந்தக் குழந்தைக்கும் ஆன அடிப்படை இயல்பு அங்கிருந்தே உருவாகத் தொடங்குகிறது.

கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்? என்கிற பழமொழிக்கு ஏற்ப எந்தக் கல்வியும் அடிப்படை இயல்பை செழுமைப் படுத்திக் கொள்ள உதவுமே அன்றி அடிப்படை இயல்பை மாற்றுவதற்கு கிஞ்சித்தும் பயன்பட மாட்டாது. 
'தமிழ் வழிக்கல்விக்கே தமிழ் உயிரென்பர் அறியார்
ஆங்கில வழிக்கல்விக்கும் தமிழே உரம் என்பது நடைமுறை' என்கிற விடை தமிழ்நாட்டு ஆங்கில கல்வி குறித்த அலசலில் நமக்குக் கிடைப்பதாகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,085.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.