தடி ஊன்றக் கற்றுக் கொள்வதில் பிழையேதும் இல்லைதான், அதற்காக தடிஊன்றியே வாழ்க்கையை இயக்குவது பிழையாகும் என்பதை தமிழ்மக்கள் உணராதிருக்கிறார்கள் என்பதை உணர்த்த முயல்வதற்கானது இந்தக் கட்டுரையின் நோக்கம். 14,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: தடி ஊன்றக் கற்றுக் கொள்வதில் பிழையேதும் இல்லை. தமிழ்நாட்டில் தடிஊன்றி நடப்பதைக் கற்றுக்கொள்கிறவர்களுக்கு நிருவாகத்தளத்தில் கூடுதல் வருமானத்தில் வேலை கிடைக்கிறது என்பது நடப்பு நிலை உண்மை என்கிற காரணத்தால். தமிழ்நாட்டில் பெரும்பாலோர் வேளாண்மை, தொழில், வணிகம், தனித்திறன் ஆகிய சொந்தக்கால் நடப்புகளை முன்னெடுப்பது பேரிடர் என்ற கருதியிருக்கின்றனர். அதனால், தமிழ்நாட்டில் தடிஊன்றி நடப்பதைக் கற்றுக்கொள்கிறவர்களுக்கு நிருவாகத்தளத்தில் கூடுதல் வருமானத்தில் வேலை கிடைக்கிறது என்பதைக் காரணமாக்கி அனைவரும் தடிஊன்றக் கற்றல் என்கிற ஆங்கிலவழிக் கல்வியைப் பெரிதும் நாடி வருகின்றனர். கல்வி பயிறலில்- வேலை கிடைத்த நிறுவனத்திற்குள்- தடிஊன்றி நடந்திருப்பது மாணவர்களுக்கும், நிருவாகக் கூலிகளுக்குமான கடமையே. உங்கள் பிள்ளைகளுக்கு தடிஊன்றக் கற்றுத்தரும் கல்வி நிறுவனங்களுக்கு (தனியார் ஆங்கிலப்பள்ளிகளுக்கு) நீங்கள் தானே தொழில் தருகின்றீர்கள். அவர்கள் உங்கள் மொழியில்தானே உங்களிடம் நொண்டியாட வேண்டும்! அது மட்டும் இல்லாமல், உங்கள் பிள்ளைகளுக்கு தடிஊன்றக் கற்றுத்தரும் பயிற்சியை வீட்டுப்பாடமாகக்; கொடுத்து உங்களிடம் ஏன் பயிற்சியாற்ற நிர்பந்திக்க வேண்டும்? நமக்கு வாழ்மானம் தருகிறவன் மொழியைக் கற்பது சரி. நாம்மிடம் வாழ்மானம் பெறுகிறவன் மொழியை நாம் எதற்காக கற்க வேண்டும்? உங்கள் கணவர் தன் நிறுவனத்தில் தடிஊன்றி நடக்க வேண்டியிருக்கிறது என்பது உண்மைதான். நீங்கள் எதற்காக, காய்கறி விற்க வருவோரிடம் லேடிஸ்பிங்கரை கேட்க வேண்டும்? சொந்தக் காலில் வணிகமாற்றுகிற அவர்களின் சொந்தக் காலையும் ஏன் நொந்த காலாக்க முயலவேண்டும்? நீங்கள் விலை கேட்காமல் வணிக ஒத்துழைப்பு தருகிற அயல்மொழி பேரங்காடியினர், தங்கள் சொந்தக் காலில் வணிகமாற்ற, நீங்கள் ஏன் அரைகுறை ஆங்கிலத்தில் நெண்டியடித்துக் காட்ட வேண்டும்? உங்களுக்கு வாழ்மானம் தருகிற நிறுவனங்கள் நீங்கள் நொண்டியாடினால்தான் வேலை என்று நிர்பந்திக்கும் போது, நீங்கள் வாழ்மானம் தருகிற யாரிடமும் நொண்டியாட வேண்டிய மானமிழப்பு ஒருபோதும் தேவையில்லை புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே!
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,566.