வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, எந்தச் செயலைச் செய்ய தொடங்கினாலும் பிள்ளையாரை வணங்கிவிட்டு தொடங்குவதன் காரணம் என்ன? என்ற கேள்விக்கான விடையே இந்தக் கட்டுரை. 26,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கோட்பாட்டுத் தளத்தில், பிள்ளையார் சுழி என்று சொல்லிவிட்டு ‘உ’ போடுகிறோம் இல்லையா? அந்த அடிப்படையில் நடைமுறைத் தளத்தில் பிள்ளையார் வணக்கம் தொடக்கமாக இடம் பெற்றுவிட்டது இதில் சுழி என்பது ஆங்கிலத்தில் சொல்லுகிறோமே ஜீரோ அந்த சுழியம்தான். எண்கள் தமிழன் உலகிற்கு அளித்த கொடை என்பது தனியாகப் பார்க்க வேண்டிய செய்தி ஆகும். பிள்ளையார் சுழி என்கிற போது ஒரு சுழல் இயக்கத்தைத் தொடர்ந்து ஒரு நேர்கோடு போடுகிறோம் அல்லவா? தமிழர் ஆற்றல் வடிவங்களாகக் கண்டறிந்த ஐந்திர ஆற்றல்கள் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்து ஆகும். இந்த ஆற்றல் தொய்ந்தவைகளை தெய்வங்கள் என்றனர் தமிழ்முன்னோர். அந்த வகையில் காடும் காடு சார்ந்த முல்லைத் திணைக்கு நீர் ஆற்றல் தொய்ந்த மழையே மாயோன் என்ற பெயரில் தெய்வம், கடலும் கடல் சார்ந்து நெய்தல் திணைக்கு கப்பல் செலுத்தி மீன் பிடிக்க காற்றே தேவை என்கிற நிலையில் அதுவே வருணன் என்கிற பெயரில் காற்றே தெய்வம், சுரமும் சுரம் சார்ந்த பாலைத் திணைக்கு கொற்றவை என்ற பெயரில் தீயே தெய்வம், வயலும் வயல் சார்ந்த மருதத் திணைக்கு நிலத்தை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள வேந்தனே அதே பெயரில் தெய்வம். இவற்றையெல்லாம் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏதும் இல்லை அல்லவா? காரணம் நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு ஆற்றல்களைப் ஆற்றல்தாம் என்று புரிந்து கொள்வது எளிதுதானே? ஆனால் ஐந்தாவது ஆற்றலான விசும்பை ஆற்றல் என்று புரிந்து கொள்வதில் இன்று வரையுலுமே பலருக்கும் குழப்பம் இருக்கிறது. அதனால் விசும்பை வெறுமனே ஆகாயம் என்று கடந்து செல்வதால்- குறிஞ்சி தெய்வமாக தமிழர் முன்னெடுத்த விசும்பின் ஆற்றல் வடிவமான ஊழ்வினை உருத்து வந்து ஊட்டுதும் என்பதில் உள்ள உருத்திரம், கடந்தும் உள்ளும் இருக்கிற கடவுள் என்பதாக சேயோன் மற்றும் பிள்ளையார் ஆகிய ஒரே தெய்வத்தின் மூன்று பெயர்களை நாம் குழப்பிக் கொள்கின்றோம். அந்த குழப்பத்தில் குளிர்காய்ந்த பார்ப்பனியர்கள், உருத்திரத்தை சிவன் என்கிற அப்பாவாகவும். பிள்ளையாரை மகனாகவும் கொண்டாடவும், கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக நாமும் கொண்டாடவும் நிறைய கதைகட்டி விட்டார்கள். தமிழ்நாட்டில் சேயோன் என்ற பெயருக்கான முருகனை பேரளவாக கொண்டாடுகிற நிலையில் அவரை பிள்ளையாருக்குப் போட்டியான தம்பியாக உருவகித்து ஞானப்பழம் கதையெல்லாம் கட்டினார்கள். ஆனாலும் பிள்ளையாருக்குப் போட்டியாக அவர்களே முன்மொழிந்த முருகனை அவர்களால் போற்றிக் கொள்ள முடியாத நிலைதான் வடக்கில் தொடர்கிறது. ஐந்திரங்களில், மற்ற நான்கு ஆற்றல்களான நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றை இறையென்று ஆற்றல் வடிவங்களாக பட்டியல் இட்டனர் தமிழ் முன்னோர். புவியின் மீது பரந்திருக்கிற முல்லை மருதம் நெய்தல் பாலைக்கு நிலம், நீர், தீ, காற்று ஆகிய இறை ஆற்றல் தொய்ந்த தெய்வங்களை கட்டமைத்தனர், ஆனால் புவிக்குள்ளிருந்தும், எழுந்து வெளியிலும் உயர்ந்து நிற்கிற மலைக்கு கடவுள் ஆற்றல் தொய்ந்த தெய்வத்தைக் கட்டமைத்தனர் தமிழ்முன்னோர்.
இயக்கம் இல்லாத வெளியில், இயக்கத்தை ஏற்படுத்தி விண்வெளியாக்கி, அது இயக்கத்தைத் திருப்புவதற்கு விசும்பு நிலையெய்தி, நமக்கு இயக்கம் கொடுக்கிறது என்கிற செய்தி இதில் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது நமக்கான விதியை நாம் விசும்பில் எழுதத் தொடங்குகிறோம் என்பதைத் தெரிவிக்கும் முகமாக விசும்பில் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளப் போவதற்கான தொடக்கம்தான் இந்த பிள்ளையார் சுழி.
ஐந்தாவது ஆற்றலாக, இந்த நான்கு ஆற்றல்களுக்கு உள்ளேயும் கடந்தும் இருப்பதால், மூன்று நிலைகளை எய்தி 1.இயக்கமில்லமல், 2.இயக்கம்பெற்று 3.இயக்குவதால் இதை ஐந்தாவது இயக்கமாக நிறுவி கடந்தும் உள்ளும் இருக்கிற நிலையில் கடவுள் என்ற ஆற்றல் வடிவமாகப் பட்டியல் இட்டனர் தமிழ்முன்னோர்.
ஆக குறிஞ்சி நிலத் தெய்வமான சோயோன், உருத்திரம், பிள்ளையார் என்கிற கடவுளில் தாம் நாம் விதியை எழுதுகிறோம் என்கிற நிலையில், அந்தத் தெய்வம் நாம் எழுதிய விதியின் வகைக்கு உருத்துவந்து ஊட்டும் என்பதை நான் அறிவேன் அதனால் நல்ல விதிகளையே எனக்காக நான் விசும்பில் பதிவேன் என்கிற உறுதிப்பாட்டின் தொடக்கமாக எந்தச் செயலைத் தொடங்கும் போதும் பிள்ளையார் சுழியை போட்டுத் தொடங்குகிறோம்.
கடவுள் குறித்த விரிவான செய்திகளை இந்த இணைப்பில் சென்று காணலாம். http://www.news.mowval.in/Editorial/katturai/Kadavul-144.html
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,003.