13,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அகத்தை சீராக வைத்துக் கொள்வதனால் சீரகம் என்றும், செரிமானக் கோளாறுகள் அகற்றி உடலை ஓம்புவதால் ஓமம் என்றும் தமிழ் முன்னோர் பெயரிட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக பயிரிட்டு பயன்படுத்தி வருகின்றனர். இன்றைய நவீன உலகம் அனைவரையும் நலங்கு அற்ற உணவுகளை நோக்கியும், உடல் உழைப்பு இல்லா வேலைகளுக்கும் பழக்கப்படுத்திவிட்டது. அதன் விளைவாக உடல் எடை அதிகரித்தல், அதனைத் தொட்டு உடலில் ஆங்கிலப் பெயர்களில் பல்வேறு நோய்களை நாம் ஈட்டிக் கொண்டு அவதிப்பட்டு வருகிறோம். உடல் எடை அதிகரிப்பால் தற்போது பல வகையான உடல் நலக் கேடுகள் விளைவதால் மீண்டும் பலரும் நவீன வாழ்க்கையை தவிர்த்து பழமையை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர். அந்த வகைக்கு மெலிதான உடல்வாகை பெற்றிட, தேநீருக்கு மாற்றாக ஓமக்குடிநீர் அருந்துங்கள் என்று பரிந்துரைக்கின்றனர் தமிழ்மருத்துவர்கள். கடையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஓமக்குடிநீரை வயிற்று வலி செரிமானக் கோளாறு போன்றவற்றுக்கு வீட்டுமருத்துவ முறையாக பயன்படுத்திக் கொண்டுதாம் வருகிறோம். கேரள நாட்டு மக்கள் குடிப்பதற்கு எப்போதும் காய்ச்சிய சீரகக்குடி நிரையே வழக்கமாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஓமத்தையும், சீரகத்தையும் சேர்த்து தேநீர் போன்ற ஒரு உணவுப் பழக்கத்திற்கு தற்போது தமிழ்மருத்துவர்கள் ஒரு ஆலோசனை தெரிவிக்கிறார்கள். அரை கரண்டி ஓம விதை மற்றும் 1 கரண்டி சீரகம் என இரண்டையும் ஒரு குவளை தண்ணீரில் கலந்து இரவு தூங்கும் முன் ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் காலை எழுந்து அதில் சிறிதளவு இஞ்சி சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். பின் அதில் அரை பாதி எலுமிச்சை, மற்றும் புதினா இலைகளை சேர்த்து கலந்து குடிக்கலாம். சுவைக்கு கொஞ்சம் தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்துகொள்ளுங்கள். அன்றாடம் காலையில் பால், தேநீர் குடிப்பதற்கு மாற்றாக இப்படி ஓமக்குடிநீர் தயாரித்து அருந்துவது உடலை மெலிதாக வைத்துக் கொள்ள உதவும் என்கின்றனர்.