எனக்கு சொந்த இடமும், சொந்த வீடும், சொந்த இடத்தில் தொழிற்சாலையும் கிடைத்தற்குக் காரணம் என்ன என்பதை விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை. 05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126: அன்றைய காலத்தில், ஏன் அப்படி நடந்தது? அவ்வளவு வேகமாக நடந்தது. அதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அனால் நடந்தது. இவ்வளவு பீடிகை போடுவகைக்கு உங்களுக்கு நடந்ததுதான் என்ன என்பது உங்கள் ஆர்வமாக இருந்தால் மகிழ்ச்சி! அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மின்பணியாளர் படிப்பு முடித்து விட்டு, பெரிதாக வேலைக்காகவெல்லாம் நான் அலைந்து கொண்டிருக்கவில்லை. கம்பியாளர் தகுதிச் சான்றிதழும், மின் ஒப்பந்தக்காரர் உரிமமும் பெறுவதற்கு மிகுந்த ஆர்வத்தோடு பாடாற்றிக் கொண்டிருந்தேன். நான் கம்பியாளர் தகுதச்சான்றிதழும், மின்ஒப்பந்தக்காரர் உரிமமும் பெற்ற பிறகு, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் சில பணிகளை எடுத்துச் செய்தேன். வீடுகளில் மின்அமைப்புப் பணிகளில் ஈடுபடும்போது சாளர இரும்புத் தட்டிகள், கடைகளுக்கு உருள்கதவுகள் தேவை நிறைய இருப்பதைப் புரிந்துகொண்டு அதற்கான தொழிற்சாலையை வாடகை இடத்தில் அமைத்தேன். அந்த என் நிறுவனத்தின் பெயர் கலை மின்னியல் தொழிற்சாலை. கலை என்பது என் அண்ணன் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டும் முனைப்பில் கலைமகள், கலைக்கோவன் என்று சூட்டிய பெயர்களின் பொது அடையாளம். கலை மின்னியல் தொழற்சாலையை வாடகைக் கடையில் நடத்துவதில் நிறைய சிக்கல்களை எதிர்கெர்ண்டேன். அந்தச் சிக்கல்களின் நோக்கம் அப்போது எனக்குத் தெரிந்திருக்காத காரணம் பற்றி அந்தச் சிக்கல்களைப் பெருஞ்சுமையாகவே நான் கருதினேன். அந்தச் சிக்கல்களில் இருந்து விடுபட எனக்குக் கிடைத்தவை: சொந்த இடமும், சொந்த வீடும், சொந்த இடத்தில் தொழிற்சாலையும். இந்த வகைக்காக, எனக்கு வழங்கப்பட்ட நடைமுறைகளை நான் சிக்கல் என்று கருதிவிட்டேன் என்பது தற்போது தெளிவாகப் புரிகிறது. இந்த மூன்றும் நடப்பதற்கு என் ஈடுபாடே முழுமுதல் காரணம் என்றுதான் என்மனம் பீற்றிக் கொண்டிருந்தது, தமிழ்முன்னோர் முன்னெடுத்திருந்த மந்திரம் என்கிற முன்னேற்றக் கலையை நான் மீட்டு உருவாக்கும் வரை. எனக்கு சொந்த இடமும், சொந்த வீடும், சொந்த இடத்தில் தொழிற்சாலையும் கிடைத்தற்குக் காரணம் நான் சொந்த மொழியான தமிழைக் கொண்டாடி இருந்ததும், என்பெயரை தமிழாக்கிக் கொண்டு அரசிதழில் பதிந்ததும், என் நிறுவனத்திற்கு தமிழ்ப்பெயர் சூட்டியிருந்ததும் அந்த வகையின் தொடர்ச்சியாக, கடவுள் மீட்டித் தந்தவை என்பதைப் புரிந்து கொண்டேன்.