அதிர்ஷ்டம் என்னும் சொல் தமிழ்ச்சொல்லும் அல்ல. தமிழ் அடிப்படை சார்ந்த சொல்லும் அல்ல. திருஷ்டி என்றால் பார்வை. ஆங்கிலத்தில் சொல்லின் முன்னால் அன் சேர்த்து எதிர்ச் சொல்லை உருவாக்குவது போல வடமொழியில் அ சேர்த்து எதிர்சொல் உருவாக்கும் முறை இருக்கிறது. அந்த வகையில் திருஷ்டிக்கு முன் அ சேர்த்து அதிர்ஷ்டம் என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டம் என்றால் குருட்டாம் போக்கு என்பதாக பொருள் கொள்ளலாம். 1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். 2. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும். 3. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். என்பன சிலப்பதிகாரம் கொண்டாடும் தமிழர்தம் அடிப்படை. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும். என்ற விதி பிற்காலத்தில், ‘காரணம் இல்லாமல் காரியம் இல்லை’ என்கிற சொலவடையாகவும் முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே குருட்டாம் போக்காக எதுவும் நடந்துவிடும் என்கிற கருதுகோள் இல்லாத நிலையில், அதிர்ஷ்டம் என்பதற்கு நேரான சொல் தமிழில் இல்லை. ஆனாலும் அதிர்ஷ்டத்திற்கு ஒரு சொல்லை தமிழில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பிற்காலத் தமிழ் அறிஞர்கள் ‘ஆகூழ்’ என்ற சொல்லை நிறுத்த முயன்றிருக்கிறார்கள். ஆனால் அந்தச் சொல்கூட குருட்டாம் போக்கு என்ற பொருளில் அமையவில்லை. ஆகிவரும் ஊழ், நல்லூழ் என்பதாகவே பொருள் தருகிறது.