Show all

காப்புக்கட்டு திருநாள் வாழ்த்துக்கள்! நாளை தமிழர் திருநாள் தைப்பொங்கல்

தமிழர் ஆகிய நாம், 5125 ஆண்டுகளாக சித்திரையில் புத்தாண்டும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவும், கார்த்திகையில் விளக்குத் திருவிழாவும் தையில் பொங்கல் திருவிழாவும் கொண்டாடி வருகின்றோம். இன்று பொங்கல் விழாவின் முதல் நாள்விழாவான காப்புக்கட்டு.

29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5126: 

தமிழில் இருந்து கொண்டிருப்பவர்கள் தமிழர்கள். தமிழ் இருந்து கொண்டிருப்பது அத்தமிழர்களால்! என்கிற வரையறைக்கு சொந்தமான தமிழ்ப்பெரு மக்களை, இன்றைய காப்புக்கட்டுத்திருநாளில், வாழ்க தமிழுடன் என்று வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி எய்துகிறோம்.

தமிழர், தொடர் ஆண்டு அமைத்துக் கொண்டதற்குப் பின், இன்று வருவது 5126வது பொங்கல் திருவிழா.

நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்பனவாக, ஐந்திரத்தை சிறப்பாக நிறுவிய தமிழ்முன்னோரின் மரபினராக, 5125 ஆண்டுகளாக, அந்த ஐந்திரங்களின் மாண்புகளை கொண்டாடும் நோக்கத்திற்கு ஐந்து வகையான விழாக்கiளை தமிழர்களாகிய நாம் சிறப்பாக முன்னெடுத்து வந்து கொண்டிருக்கிறோம்.
 

1. விசும்பு திரத்திற்கான குறிஞ்சித்திணை மரபாக, தனிமனித மாண்பைக் கொண்டாடும் விழாக்களாக பிறந்தநாள், பெயர்சூட்டு விழா, காதணிவிழா, பூப்புநன்னீராட்டு விழா, தொழில்தொடங்குவிழா, திருமண விழா, வளைகாப்பு விழா ஆகிய விழாக்களை, அவரவர்களுக்கு பொருந்திய நாட்களில் தமிழினம், சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. 

விசும்பு திரத்திற்கான இந்த விழாக்கள், கடவுள்கூறு தெய்வம் சேயோனின் மாட்சிக்குரிய, உடல்நலத்தை அடிப்படையாகக் கொண்டவை.

2. நிலத் திரத்திற்கான முல்லத்திணை மரபாக, அனைத்துத் தமிழர்களுக்குமான பொதுவிழாவாக சித்திரையில் புத்தாண்டு விழாவை தமிழினம், சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. 

நிலத் திரத்திற்கான இந்தவிழா, இறைக்கூறு தெய்வம் மாயோனின் மாட்சிக்குரிய, கல்வித்தொடக்கம் உள்ளிட்ட படிக்கும் பிள்ளைகளுக்கான படிப்பறிவு மனமகிழ்ச்சியையும், பாடாற்றும் பெரியவர்களுக்குப் பட்டறிவு மனமகிழ்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டது.

3. நீர்த் திரத்திற்கான மருதத்திணை மரபாக ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவைத் தமிழினம், சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. 

நீர்த் திரத்திற்கான இந்த விழா இறைக்கூறு தெய்வம் மன்னனின் மாட்சிக்குரிய நீர்மேலாண்மையே நாட்டின் வளத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஆதாரம் என்பதை அடிப்படையாகக் கொண்டது.

4. நெருப்புத் திரத்தின் பாலைத்திணை மரபாக, கார்த்திகையில் விளக்குத் திருவிழாவை தமிழினம், சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. 

நெருப்புத் திரத்திற்கான இந்த விழா, இறைக்கூறு தெய்வம் கொற்றவையின் மாட்சிக்குரிய பயணத்திற்கான வண்டிகள், பயண உதவி வண்டிகளில் பாதுகாப்பு என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டது.

5. காற்றுத் திரத்தின் நெய்தல்திணை மரபாக, தையில் பொங்கல் திருவிழாவை: அ.காப்புக்கட்டு ஆ.பெரும்பொங்கல் இ.மாட்டுப்பொங்கல் ஈ.காணும்பொங்கல் என்று நான்கு நாள் விழாவைத் தமிழினம், சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. 

காற்றுத் திரத்திற்கான இந்த விழா இறைக்கூறு தெய்வம் வருணனின் மாட்சிக்குரிய, ஞாயிறு, உழவுக் கருவிகள், கால்நடைகள், சொந்தங்கள், உறவுகள், தொழில் வணிக உறவுகள் ஆகிய தொடர்புகளின் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டது.

உலகின் முதல் வணிகன் தமிழன். உலகில் முதன் முதலாக கடல் கடந்து வணிகம் புரிந்தவன் தமிழன். கடலை ஒட்டி அமைந்த அனைத்து நாடுகளிலும் தமிழன் காலடி பதிக்காமல் விட்டதில்லை. உலகில் முதன் முதலாக அணை கட்டி உழவு செய்தவன் தமிழன்.

சமுதாயம் விழாமல் இருப்பதற்கு உழவும் வணிகமும், உழவும் வணிகமும் விழாமல் இருப்பதற்கு விழா என்று விழா கொண்டாடியவன் தமிழன்.

ஓவ்வொரு தமிழனும் சொந்தத்தொழில் முனைவோனாக இருந்ததால், வணிகத் தொடர்பும், வணிகத்திற்காக சமூகத் தொடர்பும், சமூகத் தொடர்பு கருவியாக வளமையான மொழியும், ஒத்துழைப்பிற்காக குடும்பமாக வாழவேண்டும் என்கிற பாங்கும், ஊரும் நாடும் அரசும் கல்வியும் இவற்றில் எல்லாம் அவன் விழாமல் இருப்பதற்கு விழாக்கள் தேவையாய் இருந்தன.

இன்றைக்கு- மொழி, நிலம், தொழில், கல்வி, கலை, கோயில், அரசு என்று உடைமைகளை அன்னியர்களிடம் ஒப்படைத்து விட்டு உடல் உழைப்புக் கூலிகளாகவும், நிருவாகக் கூலிகளாகவும் பிழைத்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு நாம் கொண்டாடுகிற பொங்கல் வெறுமனே ஒரு சடங்குதானே யொழிய நம் தமிழ் முன்னோர் வகுத்த நோக்கத்திற்கானதன்று.

இன்றைக்கு நாம் கொண்டாடுகிற அனைத்து விழாக்களும் கூட அன்னிய சமூகம் விழாமல் இருப்பதற்கான வணிகத்திற்கே பயன்பாடாய் அமைந்து விடுகிறது.

சொந்தத்தொழில் முனைந்த நம் தமிழ் முன்னோர் கொண்டாடிய பொங்கலன்று- அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் அரிசி மாவில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்கல் வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். 

முற்றத்தில் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி ஞாயிற்றை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவனும், தலைவியும் மக்களுடன் கூடி நின்று 'பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!' என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது பயனை ஞாயிற்றுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்து மகிழ்வர். 

நிருவாக கூலியாகவும், உடல் உழைப்புக் கூலியாகவும் அயலவரைச் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற தமிழர்களாகிய நாம், சொந்தத்தொழில் முனைவோராய் பாடாற்றிவருவோர்  ஒன்றிரண்டு தமிழர்களே என்கிற நிலையில், அவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் உற்பத்திகளை வணிகப் படுத்த பொங்கல் கொண்டாடுவோம். நாமும் பகுதி நேரமாகவேணும் சொந்தத்தொழில் முனைவோராக இயங்க களம் அமைப்போம். என இந்தப் பொங்கல் நாளில் உறுதி மொழியேற்று அதற்காக முனைவோம்.

இந்தியாவில் முதல் பத்து கலைஞனில் ஒருவனாகவோ, இந்தியாவில் முதல் பத்து ஊடகத்தில் ஒன்றை நமதாக்கவோ, இந்தியாவில் முதல் பத்து வங்கிகளில் ஒன்றை நமது உடைமையாக்கவோ, இந்தியாவில் அதிக வருவாய் உள்ள கோயில் ஒன்றை நமது உடைமையாக்கவோ, இந்தியாவின் அலைக்கற்றை ஒன்றை நமது உடைமையாக்கவோ, உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தலைமை அறங்கூற்;றுவராக நம்மில் ஒருவர் இடம் பற்றவோ, முயன்றோமானால் ஒன்றிய அரசை தேர்வு செய்கிற இடத்திற்கு நாம் முன்மொழியப் படுவோம்.

நாம் கூலித்தளத்தில் இயங்கும் வரை நம்முடைய தமிழ் சமுதாயம் அடிமைச் சமுதாயமாகவே இருந்து கொண்டிருக்கும். நாம் பொங்க வேண்டியது அரிசிப் பொங்கல் அல்ல் உடைமை கட்டமைப்பிற்கான மனமாற்றப் பொங்கல்.

தைப்பொங்கல் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த விழாவாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உலகில் மிக நீண்ட காலமாக கொண்டாடப்படும் விழாக்களில் பொங்கல் விழாவும் ஒன்று. குறிப்பாக பொங்கல்- தனிமனிதச் சான்றோரால் முன்னெடுக்கப்பட்ட தனிமனித வழிபாட்டைத் தூக்கிப்பிடிக்கும் எந்தவொரு மதம் சார்ந்த விழா அன்று. 

பொங்கல்விழா, தமிழ்ச்சான்;;;;றோர் பெருமக்களால் சங்கம் அமைத்து நிறுவப்பட்ட ஐந்திரம் என்கிற வாழ்க்கை நெறியொட்டியது என்பதும் மற்ற மற்ற மதத்தினரும் ஏற்றுக் கொண்டாடத்தக்கது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழ் நாட்டில் பெரும்பாலான கிருத்தவ தேவாலயங்களிலும், முஸ்லிம்களின் வீடுகளிலும் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கமாகவுள்ளது. உலகின் சிலபல நாடுகளில் தைப்பொங்கல் நாளை, தமிழர் திருநாளாக அறிவித்துள்ளது. மேலும் கனடா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தைப்பொங்கல் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவதை அனைவரும் அறிவோம்.

தமிழர் திருநாளான பொங்கல் காப்புக்கட்டு, தைப்பொங்கல் அல்லது பெரும்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பெருவிழாவாகும். 

இன்று, பொங்கலின் முதல்நாளான காப்புக்கட்டு திருநாள் ஆகும். காப்புக்கட்டு என்பது வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தி, பாதுகாக்க வேண்டிய அரிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை ஒழுங்கு படுத்துதல் ஆகும். 

எந்த விழாவின் போதும் காப்பு என்கிற நலங்கை முன்னெடுப்பது- மொழிக்கும் வாழ்க்கைக்கும் காப்பியம் (இலக்கணம்) உருவாக்கிய- தமிழ்மக்கள் மரபு ஆகும். ஆனாலும் தமிழர்விழாக்களில் மிகவும் முதன்மையான விழா பொங்கல் என்கிற காரணம் பற்றி பொங்கல் விழாவில் நலங்கு செய்வதற்கு என்றே காப்புக்கட்டு என்று ஒருநாளை திருநாளாக்கியுள்ளனர் தமிழ்முன்னோர்.

காப்பு, தொல்காப்பியம், வளைகாப்பு, காப்புக்கட்டு, நலங்கு வைத்தல், பூச்சாட்டுதல் என்பனவான தமிழர் நடவடிக்கைகள்- இன்று தொழிற்துறையில் முதலாவததாகவும் மிகப்பெரிதும் வலியுறுத்தப்படுகிற 'சேப்டி பிரிகாசன்' போன்றவை ஆகும். 

ஆனால் பிற்காலங்களில் காப்பு என்பதற்கான பொருளே மடைமாற்றப்பட்டு, போகி என்றும், அதற்கு- பழையன கழிதல் மற்றும் புதியன புகுதல் என்றெல்லாம் அடையாளம் சொல்லப்பட்டு ஓலைத்தொகுப்புகளில் சேமிக்கப்பட்டு வந்த அரிய இலக்கியங்கள் ஆவணங்கள் எல்லாம் நெருப்பிற்கு இரையாக்கப்பட்டன. ஒருவழியாக தமிழர் ஆவணங்களில் பெரும்பாலனவைகளை இரண்டாயிரம் ஆண்டுகளாக அழித்து விட்டோம்.

இன்று காப்புக்கட்டு. வீடு மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மைப்படுத்துவோம். நாம் வாங்கிய அனைத்து நூல்கள், அரிய பொருட்கள், நாம் மற்றும் நமது குழந்தைகள் படித்த நூல்கள், விளையாடிய பொருட்களையெல்லாம் பத்திரப்படுத்தி, பத்திரப்படுத்திய வகைகளை ஆவணப்படுத்துவோம். இறுதியாக இன்று மாலை நமது வீட்டின் வாயிலில் பீளைப்பூ, ஆவாரம்பூ, மற்றும் வேம்பு கொண்டு காப்புக்கட்டி காப்புக்கட்டு விழாவை நிறைவு செய்து நாளைய பொங்கலுக்கு அணியமாவோம்.

நாளை தை மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படும் தைப்பொங்கல் முதன்மை விழாவாக அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றின் தொடர்பைப் பாராட்டும் நோக்கத்திற்கு கொண்டாடப்படுவதால் இது ஞாயிறுபொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. நாளை மறுநாள் உழவுத்தொழிலுக்கு உதவியாக இருந்த கால்நடைகளின் தொடர்பைப் பாராட்டும் நோக்கத்திற்கு மாட்டுப்பொங்கல் கொண்டாடப்போகிறோம்.

இந்நாளில் மாடுகள் மற்றும் கால்நடைகளைக் குளிப்பாட்டி தூய்மை செய்து, கொம்புகளுக்கு வண்ணம் பூசி அழகுபடுத்தி, பொங்கல் செய்து அவற்றிற்கு படைத்து வணங்குவது வழக்கம். ஒரு சிலர் இந்நாளில் வீட்டு தெய்வத்தை வழிபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். 

காணும் பொங்கல். இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வது வழக்கம். மேலும் சல்லிக்கட்டு, கபடி, வழுக்கு மரம் ஏறுதல், உரி அடித்தல் போன்ற வீர விளையாட்டுக்கள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுகள் என பேரளவான விளையாட்டுப் போட்டிகள் இந்நாளில் நடத்துவது வழக்கம். காப்புக்கட்டில் தொடங்கும் பொங்கல் திருவிழாவில், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,223.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.