ஆசிரியர்களும், மாணவர்களும் வகுப்பில் ஓதுவதற்கான 'படிப்பு, பண்பாட்டு காப்பு மந்திரம்' கட்டும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. 30,தை,தமிழ்த்தொடராண்டு-5126: தம் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு, அந்தப் பெரும்பணியில், அறைகூவலாக அமைவது, அகவை காரணமாகவும், சமூகச்சுழல் காரணமாகவும் மனதை அலைபாயவிடும் மாணவர்களின் போக்கு ஆகும். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்கிற தமிழியல் வகைபாட்டு நெறி அறிந்திராது, பிறஇன அயல் பாகுபாட்டு நெறி அடிப்படையில், குறிப்பிட்ட மாணவனை அல்லது மாணவியை நெறிப்படுத்துவது என்கிற தலைப்பில், அவரை முன்னிலையில் நிறுத்தி குற்றப்படுத்துதில் அந்தப்பிள்ளை, பாகுபாட்டிற்கு எதிரான முரண்பாட்டு நெறியைக் கையில் எடுத்து மனதைப் போர்களம் ஆக்கிக் கொள்கிறது. இந்த வகையை எதிர்கொள்ள, கடவுளின் முயக்கத்தை வேண்டும் வகைக்கு, தமிழ்முன்னோர் நிறுவியுள்ள ஐந்தாவது முன்னேற்றக் கலையான மந்திரமே உறுதியும் உண்மையுமான தீர்வு ஆகும். கல்வி நிறுவனம், கல்வி நிறுவனத்தின் வகுப்பறை, ஆசிரியர்கள் முன்னெடுக்கும் மாணவர்களுக்கான தனிப்பயிற்சி, சிலபல சமுக அமைப்புகள் முன்னெடுக்கும் பயிற்சி பட்டறை ஆகியவைகளின் ஆசிரியர்களும், மாணவர்களும், கடவுளிடம் சிறப்பான முயக்கத்தைப் பெறுவதற்கு ஓதவேண்டிய மந்திரம் முல்லைத்திணை இறைக்கூறு தெய்வம் மாயோனின் மாண்பு குறித்தது ஆகும். மாயோனின் மாண்புகளோடு, தங்கள் மாணவர்கள் படிப்பிலும், பண்பாட்டிலும் முழு ஈடுபாட்டோடு திளைக்க ஆசிரியர்கள் கட்டி ஓதுவதற்கான மந்திரம். கடவுளே! இந்த மந்திரத்தை வகுப்பறைக்கு நுழைவதற்கு முன் ஆசிரியர், இரண்டு முறையே, ஐந்து முறையோ ஓதிவிட்டு வகுப்பறைக்குச் செல்லலாம். இந்த வகைக்கு மாணவர்களும் படிப்பு, பண்பாட்டு காப்பு மந்திரம் ஓதுவது கூடுதல் சிறப்பு ஆகும். மாயோனின் மாண்புகளோடு, மாணவர்கள் படிப்பிலும், பண்பாட்டிலும் முழு ஈடுபாட்டோடு திளைக்க மாணவர்கள் கட்டி ஓதுவதற்கான மந்திரம். கடவுளே! இந்த மந்திரத்தை ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தவுடன், ஒவ்வொரு மாணவராக எழுந்து நின்றோ, அனைவருமாக எழுந்து நின்றோ, இரண்டு முறையே, ஐந்து முறையோ ஓதிவிட்டு வகுப்பில் ஈடுபடலாம். ஆசிரியப் பெருமக்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் ஐந்திணைக்கோயிலின் வாழ்த்துக்கள்.
விசும்பு தெய்வமே!
என் வகுப்பில்
என் மாணவர்களுக்கு,
முல்லைத்திணை இறைக்கூறு தெய்வம் மாயோனின் மாட்சிக்குரிய மனமகிழ்ச்சியை
நான் பயிற்றுவிக்கும் படிப்பறிவிலும்,
பண்பாட்டு உணர்விலும் பேரளவாக வழங்கி ஆவன செய்ய வேண்டுகிறேன்
கடவுளே!
விசும்பு தெய்வமே
அருள்செய்க.
விசும்பு தெய்வமே!
எனக்கு,
முல்லைத்திணை இறைக்கூறு தெய்வம் மாயோனின் மாட்சிக்குரிய மனமகிழ்ச்சியை,
என் ஆசிரியர் பயிற்றுவிக்கும் படிப்பறிவிலும்,
பண்பாட்டு உணர்விலும் பேரளவாக வழங்கி ஆவன செய்ய வேண்டுகிறேன்
கடவுளே!
விசும்பு தெய்வமே
அருள்செய்க.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,253.